பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்?
கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என்று மெய்ப்பொருள் என்கிறார்கள்.
உண்மை எப்போதும் மாறாது இருக்கும். பொய் அல்லது மாயையே மாறி மாறி நிலைகளை எடுக்கும்.
சிலர் கேட்கிறார்கள் கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்றால் அவர் பிறப்பினை எடுக்க முடியாதா என்று?
முடியாது என்பது பதில். அது ஏனென்று பார்ப்போம்.
இந்த உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உலகத்தில் உள்ள ஒரு மர பெட்டகத்தை கருத்தில் கொள்ளுங்கள். அந்த மரப் பெட்டகத்திற்குள் இந்த உலகத்தை வைக்க முடியுமா?
இதற்கு இரண்டு பதில்களைக் காணலாம். ஒன்று உலகத்தை உலகத்தில் உள்ள ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியாது. இல்லை உலகம் ஒரு மாய நிலை. அதை அதன் உண்மை நிலைக்கு ஒடுக்கினால் ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியும். விரும்பினால் சட்டை பையில் கூட வைக்க முடியும்.
அதாவது உலகம் உண்மையான பொருள் என்றால் அதனைவிட மிகச் சிறிய ஒரு பெட்டகத்திற்குள் வைக்க முடியாது.
உலகம் அதனைவிட மிகச்சிறிய பெட்டகத்திற்குள் வைக்க முடியும் என்றால் உலகம் ஒரு உண்மையான பொருள் கிடையாது. அது ஒரு மாயப்பொருள்.
மாறும் வடிவங்களை எடுக்க கூடியது, சிறிதாக பெரிதாக தன்னுடைய இருப்பை மாற்றிக்கொள்ள கூடியது மாயப் பொருளே அன்றி மெய்ப்பொருள் அல்ல.
மெய்ப்பொருள் என்றால் அது எக்காலத்திலும் எக்காரணத்தினாலும் மாறாமல் நிலையாக இருக்க வேண்டும்.
ஆகவே கடவுள் என்பது உண்மை என்றால், கடவுள் என்பது மெய்ப்பொருள் என்றால், அந்த கடவுளுக்கு மிகப்பெரிய அறிவும் மிகப்பெரிய ஆற்றலும் உள்ளது என்றால், அந்த கடவுளின் பேரிருப்பின் உள்ளேயே இந்த பிரபஞ்சம் முதலான அனைத்தும் இருக்கிறது என்றால் கடவுள் ஒரு சிறிய உடலினுள் புகுந்து பிறப்பெடுக்க முடியாது.
இந்த உடல் என்பது மாயை அல்லது பொய் என்றால், கடவுள் பிறப்பினை எடுத்து பொய்மை நிலையில் தோன்ற முடியாது. ஒரு சிறு பொய்க்குள் பெரிய உண்மையை மறைக்க முடியாது. அப்படி ஒரு சிறிய மாயையில் மறைந்து நிற்கும் என்றால் அது மெய்ப்பொருளாக இருக்க முடியாது.
இந்த பிரபஞ்சமாக, உலகங்களாக, உடல்களாக என்று உயிர்களுக்கு உருவினைக் கொடுத்து நிற்பது இறைவனின் இருப்பு நிலையில் உள்ள மாயா சக்தியே அன்றி, அந்த உடல்களே இறைவன் கிடையாது.
இறைவன் என்பது உயிர்கள் மாயை என்று அனைத்தையும் தாங்கி நிற்கும் ஒரு பேரிருப்பு. அந்த பேரிருப்பின் உள்ளே உள்ள சிறு துகள்களாகவே ஆன்மாக்கள் மாயை என்று அனைத்தும் காணப்படும்.
இறைவனின் இருப்பில் புறக்கணிக்க தக்க அங்கமாக உள்ள மாயையில், அந்த மாயையின் அளவில் புறக்கணிக்க அளவில் உள்ள ஒரு மனித உடலில் இறைவன் தோன்றுவான் பிறப்பான் என்பது அறிவு தர்க்கம் என்று எதற்கும் ஒவ்வாதது.
அதனால் தான் கடவுள் மனிதனாக பிறக்க முடியாது, மனிதனாக பிறந்தால் அது ஒரு ஆன்மாவேயன்றி அது கடவுள் கிடையாது என்று உறுதியாக கூறுகின்றோம்.
ஆன்மாக்களை கடவுள் என்று நம்பி ஏமாந்தது போதும்..
உண்மையான ஒரே கடவுள் சிவம் மட்டுமே என்று மெய்யறிவு பெறுங்கள்.
#ஆன்மீகம்_அறிவோம்
#சித்தாந்தம்
#சிவம்_மட்டுமே_உண்மையான_ஒரே_கடவுள்