Wednesday, July 17, 2024

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

இந்த கேள்வியை பலகாலமாக பலர் பலவிதமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கேள்விக்கான பதில் ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.

கடவுளுக்கான வரையறை எதுவென்று தெரிந்தால் இந்த கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. நாம் ஒன்றை தேடுவதாக இருந்தால் அது எப்படி இருக்கும் என்று தெரிந்தால் தானே அதனை கண்டறிய முடியும். அது எப்படியிருக்கும் என்றே தெரியாது என்றால் எப்படி தேட முடியும்?

எது ஒன்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறதோ, அதனைக் கடந்த எதொன்றும் இல்லாமல் எதுவொன்று இருக்கிறதோ அதுவே கடவுள். 

அதனைக் கடந்து ஒன்று உள்ளது, அதற்கு ஒரு இருப்பிடம் இருக்கிறது என்றால் அது கடவுள் கிடையாது. இந்த கடவுள் தத்துவத்தை பேசும் ஒரே தத்துவ பிரிவு சித்தாந்த சைவம் மட்டுமே. அப்படியானால் சித்தாந்த சைவத்தில் மட்டுமே கடவுள் பற்றிய கோட்பாடு, கடவுள் பற்றிய வரையறை இருக்கிறது என்று உறுதியாக கூறலாம்.

இந்தியாவில் தோன்றிய சமணம், பௌத்தம், ஆசீவகம், உலகாயதம், போன்ற தத்துவ பிரிவுகளில் கடவுள் கிடையாது. கடவுள் பற்றிய எந்த வரையறையும் கிடையாது. 

கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் படைப்பாளன் என்ற நிலையில் ஒன்றை எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றாக கருதுகின்றனர். ஆனால் அது கடவுள் கிடையாது. ஏனென்றால் அந்த படைப்பாளன் ஏதோ ஒரு தளத்தில் இருந்து இயங்குகிறான், தனக்கு புறத்தேயான ஒரு இடத்தில் அல்லது தனக்கு புறத்தே தான் உருவாக்கிய ஒரு இடத்தில் படைப்பு முதலான செயல்களைச் செய்கிறான். அப்படியானால் அவர்கள் ஆண்டவராக/ வணக்கத்திற்கு உரியதாக நம்பும் அந்த ஒன்றைக் கடந்து ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படியானால் அவர்கள் சொல்லுவது எல்லாவற்றையும் கடந்த ஒன்றல்ல.அது அதனைக் கடந்த எதொன்றும் இல்லாத கடவுள் கிடையாது.

சைவத்தில் மட்டுமே கடவுள் பற்றிய புரிதல் அதுபற்றிய கோட்பாடு உள்ளது. அந்த கடவுள் நிச்சயமாக உள்ளது. சைவம் கூறும் கடவுள் நிலை பற்றிய சிந்தனை உலகில் உள்ள எந்த மதத்திற்கும் இல்லை. 

ஏனைய மதத்தினர் படைப்பாளனாக கூறுவது கடவுள் கிடையாது. அவர்கள் மதத்தில் அது கடவுள் என்று சொல்லப்படவும் இல்லை. அவர்கள் அல்லாஹ் என்பதையும் ஜெகுதா அல்லது கர்த்தர் என்பதையும் நாம் கடவுள் என்று கற்பிதம் செய்து மயங்குதல் கூடாது. 

பொத்தாம் பொதுவாக கடவுள் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்பது அடி முட்டாள் தனமான சிந்தனையின் வெளிப்பாடு.

சைவம் சிவம் என்று கூறுவது கடவுளா?  அந்த கடவுள் இருக்கிறதா? என்றே கேள்வி கேட்க முடியும்.

அதுபோலவே கிறிஸ்தவம் கூறும் கர்த்தா மற்றும் ஜீசஸ் கடவுளா? அந்த கர்த்தா மற்றும் ஜீசஸ் என்பவர்கள் இருக்கிறார்களா?

இஸ்லாம் கூறும் அல்லாஹ் கடவுளா? அந்த அல்லாஹ் இருக்கிறாரா? இவ்வாறு தானே கேள்வி கேட்க முடியும்.

சைவம் கூறும் கடவுள் நிச்சயமாக உள்ளது. எதுவொன்று எல்லாவற்றையும் கடந்து நிற்கிறதோ, அதனைக் கடந்த எதொன்றும் இல்லாமல் எதுவொன்று இருக்கிறதோ அதுவே சைவம் கூறும் கடவுள். அதைத்தான் சிவம் என்கிறோம்.

கடவுள் என்பது ஒரு நபரல்ல.. கடவுள் என்னும் பேரிருப்பின் உள்ளேயே அனைத்தும் இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் அதன் தோற்ற மாயையை நீக்கிவிட்டால் அங்கே எஞ்சி இருப்பது கடவுளின் இருப்பு நிலையே.

நாம் கல்லை மரத்தை இயற்கையை என்று அனைத்தையும் கடவுளாக வணங்குவதற்கு காரணம் அவை கடவுள் என்பதற்காக அல்ல. அந்த பொருளின் பொருட் தோற்றத்தை மாயை நிலையை நீக்கிவிட்டால் அங்கேயும் இறைவனின் இருப்பே எஞ்சி நிற்பதால் தான்.

சைவம் கூறும் சிவம் மட்டுமே உண்மையான ஒரே கடவுள் என்று உறுதியாக கூறுங்கள். கடவுள் இருக்கிறாரா என்றால் நிச்சயமாக இருக்கிறார் என்று ஆணித்தரமாக கூறுங்கள். 

#ஆன்மீகம்_அறிவோம் 50



கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...