#ஆன்மீகம்_அறிவோம்-1
இந்த உலகத்தில் பிறக்கும் அனைவரும் ஒரே போல் பிறப்பதில்லை. அறிவாளி, முட்டாள், உடலால் மனதால் ஊனமுற்றவன், மூர்க்கன், சாந்தமானவன் என்று பலவிதமான வேறுபாடுகளுடனேயே அனைவரும் பிறக்கிறார்கள்.
உண்மையில் கடவுள் இந்த உலகத்தில் உள்ள உயிர்களை படைத்தார் எனில் கடவுளால் படைக்கப்பட்ட மக்கள் அவ்வாறு மாறுபட்டவர்களாக மக்கள் இருக்க முடியாது.
இல்லை கடவுள் தான் அவ்வாறு மாறுபாடுகளுடன் படைக்கிறார் என்றால் அந்த கடவுள் வழிபடத் தகுதியற்ற விருப்பு வெறுப்புள்ள ஒருவராவார்.
கடவுள் மனிதர்களை மிகச் சரியாகவே படைத்தார், வேறு யாரோ ஒருவர் அவர்களை வழிகெடுத்தார் என்றால் கடவுள் வல்லமையற்றவர் ஆகவும், கடவுளைவிட வழிகெடுக்கும் அந்த யாரோ ஒருவர் வல்லமை மிக்கவராகவும் ஆகிவிடுகிளார்.
அதனால்தான் சைவ சித்தாந்தம் சொல்கிறது கடவுள் படைப்பாளன் இல்லை. படைப்பாளன் கடவுள் இல்லை என்று. கடவுள் கர்மங்களை சார்ந்தவர் இல்லை என்றும் கர்மங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் என்றும் சைவம் கூறுகிறது.
உயிர்கள் தமது கர்மங்களின் தொடர்ச்சியாக கர்ம பலன்களை அனுபவிக்கும் என்றும் உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து தமது கர்ம விகாரங்களைப் பெறும் என்றும் சைவம் கூறுகிறது.
பிறப்பினால் உண்டாகும் பேதங்கள் உயிர்களைச் சார்ந்தது. ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் தாய் தந்தை, அவரது மூதாதையர், அவரது சமூக பழக்கம் என்று எல்லாவற்றையும் சார்ந்து குழந்தையின் பிறப்பு இருக்கிறது. ஒரு குழந்தை பேதங்களுடன் பிறப்பதற்கு இவையே காரணம், கடவுள் இல்லை என்று உறுதியாக கூறுகிறது. உலகமும் உயிர்களும் கர்மத்தின் வழியிலேயே இயங்குகிறது. கர்மங்களை நேர்வழிப் படுத்தவே கடவுள் நம்பிக்கை வேண்டும் என்கிறது.
இதைவிட ஒரு சிறந்த தர்க்க ரீதியான சிந்தனை எங்கே தோன்ற முடியும்.
சிவாயநம
No comments:
Post a Comment