இந்துக்கள் அனைவரும் இந்த ஐந்திற்குமான வேறுபாட்டை சரிவர அறிந்திருக்க வேண்டும்.
வேதம்
வேதம் என்றால் அறிவு என்பர். மனிதர்கள் பார்த்து கேட்டு சிந்தித்து பரிசோதனை செய்து என்று பல முடிவுகளை எட்டினார்கள். இவை அறிவு எனப்படுகிறது. மனிதர்களின் இந்த அறிவு மனித மனங்கள், அவர்களின் சிந்தனைகள், செயல்கள் என்பவை எல்லாம் இயற்கையின் ஏனைய அம்சங்களுடன் சம்பந்தம் உடையன என்ற புரிதலை உண்டாக்கின. இந்து பாரம்பரியத்தில் அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவு என்று பொருள்.
உலகில் நாம் காண்பவை அனைத்தும் உண்மையான மூலமான பொருட்கள் கிடையாது. இவை எல்லாம் ஏதோ ஒரு மூலப் பொருளில் இருந்து ஆக்கப்பட்டுள்ளது. அந்த மூலமான பொருளை அறிவதே உண்மையான அறிவு என்று இந்துக்கள் அறிந்து கொண்டார்கள். இந்த பரம் முழுவதும் அந்த பொருளினால் உண்டாக்கப்படுள்ளது என்று அதனைப் பரம்பொருள் என்று சுட்டினார்கள். எனவே அந்த பரம்பொருளை பற்றி அறிதலே அறிவு என்றும், அதனைப் பற்றிய நூல்களை வேத நூல்கள் என்னும் குறிப்பிட்டார்கள்.
அந்த பரம்பொருளை அறிதலை நோக்கமாக கொண்ட, அல்லது அவ்வாறு ஒரு பொருள் உள்ளது என்ற சிந்தனையின் அடிப்படையில் எழுந்த ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் நூல்கள் மிகப் பழைமையான வேத நூல்கள் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு உயிர்களும் ஏனைய உயிர்களால் பாதிக்கப்படும் என்பதையும், உயிர்களுக்கு தேவையான அறிவு ஆற்றல் என்பவற்றை இன்னொன்றில் இருந்து இன்னொன்றின் மூலமாகவே பெறவேண்டும் என்பதையும் உணர்த்துவதாகவே இந்த வேத நூலின் கருத்துக்கள் உள்ளன.
உயிர்கள் அனைத்தும் தாம் கொண்ட அறிவு ஆற்றல் ஆயுள் என்பவற்றின் அடிப்படையில் வேறுபட்டவை என்றும், மற்றைய உயிர்களுக்கு பயன்படக்கூடியவை உயர்ந்தவை என்றும், அவ்வாறு உயர்ந்த உயிர்களிடத்திலிருந்து அறிவையும் ஆற்றலையும் பெறுவதற்கு ஒரு வழிமுறை அவசியம் என்றும் கூறி, அதற்கான வழிமுறைகளை விளக்குவதே இந்த வேத நூல்களாகும். இவை பொதுவாக சரியை கிரியை எனும் கர்ம வழிமுறைகளைப் பயன்படுத்தி அறிவு ஆற்றல் என்பவற்றை பெறுதல் பற்றிய பகுதியாக இருக்கும்.
இங்கே அறிவு ஆற்றல் ஆயுள் என்பவற்றில் மேம்பட்ட உயிர்கள் தேவர்கள் என்று சுட்டப்படும். இந்த தேவர்களின் இருப்பிடமும் அவற்றுக்கு தலைவனும் என்று இந்திரன் எனும் தேவன் குறிப்பிடப்படுகிறான்.
வேதங்களில் சூரியன் சந்திரன் நதிகள் மலைகள் பஞ்ச பூதங்கள் ராசி மண்டலங்கள் கிரகங்கள் என்று உலக உயிர்களிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய பலவும் தேவைதைகளாகவும், அவற்றிடம் இருந்து பயனைப் பெறுவதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்படும்.
வேதங்கள் உலக உயிர்களிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய தேவர்கள் என்று பலவற்றை குறிப்பிட்டாலும் இவற்றை எல்லாம் கடத்த ஏதோ ஒன்றும் உள்ளது என்று பல இடங்களில் சுட்டிக் காட்டி செல்கிறது. ஆனால் வேதங்கள் எவையும் கடவுள் என்று ஏதாவது ஒன்றை குறிப்பிடவில்லை. இதுதான் கடவுள் என்றோ, கடவுள் இவ்வாறுதான் இருக்கும் என்றோ முடிவாக குறிப்பிடவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் கடத்த ஏதோ ஒன்று இருக்கிறது என்று மட்டும் வேதங்கள் உறுதியாக கூறியது.
வாய் மொழி மூலமாக குரு சிஷ்ய பரம்பரை வழியாக கடத்தப்பட்ட வேத கருத்துக்கள் ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் நூல்களாக பொ.பி 5 ஆம் நூற்றாண்டில் வியாசர் என்று அழைக்கப்படும் பாதராயனர் என்பவரால் தொகுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
வேதாந்தம்
வேதங்கள் பொதுவாக கர்மங்கள் பற்றியே பேசுகிறது. ஆனால் வேதங்களின் ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் குரு சிஷ்ய உபதேச வடிவில் ஒரு பகுதி பின்னாளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அது உபநிடதம் எனப்படுகிறது. அது பொதுவாக அந்த வேதப் பகுதியின் நோக்கத்தை அல்லது கருத்தை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும். இது முற்று முழுதாக யோகம் ஞானம் என்பவற்றை பற்றிய விளக்கங்கள் விவாதங்கள் என்பதாகவே இருக்கும். இதுவே வேதாந்தம் எனப்படுகிறது. வேதத்தின் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் கூறப்படும் கருத்து என்று கொள்ளும் வகையில் கூறப்படுவதால் அது வேதாந்தம் எனப்படுகிறது.
இந்த வேதாந்த பகுதி எனப்படும் உபநிடதங்கள் எல்லாவற்றையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதால் அவை ஒவ்வொன்றும் மற்றயதுடன் முரண்பட்டு நிற்பது போல தோன்றும். இந்த குழப்பத்தை தீர்க்கிறேன் என்று கூறி வேதங்களை தொகுத்த வியாசர் எனப்படும் பாதராயனர் சூத்திரங்கள் வடிவில் ஒரு தொகுப்பு நூலை எழுதினார். அது பிரம்ம சூத்திரம் எனப்படுகிறது.
இந்த பிரம்ம சூத்திரத்தை படித்தால் ஒட்டுமொத்த வேதத்தினையும் படித்து அவற்றின் முடிவான கருத்தை அறிந்து கொண்டதற்கு சமமாகும் என்று பாதராயனர் கூறினார். ஆனால் இன்னொருவர் துணையின்றி அதனைப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கூறவந்த வேதாந்த கருத்து எதுவென்று யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.
வேதாந்த வியாக்கியானம்
வியாக்கியானம் என்றால் விளக்கம் என்று பொருள். இங்கே பிரம்ம சூத்திரத்தை விரிவாக விளக்க முனைந்த நூல்களே வேதாந்த வியாக்கியானங்கள் எனப்படுகிறது.
பிரம்ம சூத்திரம் மிகவும் குறுவடிவ சூத்திரங்களாக இருந்ததால் அவை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி அவற்றை விரிவாக விளக்க முனைந்தார்கள். விளக்க முனைந்தவர்களாலும் அதனை சரியாக முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் பிரம்ம சூத்திரத்தை விளக்க முனைந்தவர்கள் ஒவ்வொருவரும் புதிய ஒரு கருத்தினை உருவாக்கி அவை ஒவ்வொன்றாக புதிய சமய கோட்பாடுகளாக மாறிவிட்டன.
சங்கரர், மத்வர், ராமானுஜர் ஆகிய மூவரும் இந்த வேதாந்த சாரம் என்னும் பிரம்ம சூத்திரத்தை விளக்க முற்பட்டு புதிய சமய பிரிவுகளை உருவாக்கி பிரபலமானவர்கள். இவர்கள் பிரம்ம சூத்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் அதன் கருத்தாக தமது சொந்த அபிப்பிராயத்தை கூறினார்கள் என்று சொல்வார்கள். இந்த மூன்று வியாக்கியானங்களும் எந்த ஒரு முடிவையும் உறுதியாக அறுதியிட்டுக் கூறி நிரூபிக்கவில்லை.
ஆகமம்
வேதங்கள் கூறும் தத்துவங்களை பலரும் பலவிதமாக தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வதால் அதனை சரியாக விளக்க எழுந்த நூல்களே ஆகமங்கள் என்பார்கள். வேதங்களின் கர்மகாண்டங்களில் உள்ள சரியை கிரியை என்பவற்றையும் ஞானகாண்டங்களில் உள்ள யோகவழிமுறை மற்றும் ஞான விளக்கங்களையும் ஆகமங்கள் ஒழுங்கு முறையில் கூறுகின்றன என்பர்.
ஆனால் இந்த ஆகமங்களும் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு விதமான வழங்கப்படுவதால் அவையும் ஒருவாறாக இல்லை. ஒவ்வொரு விதமான நம்பிக்கை சார்ந்தவர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் ஆகமங்களை உருவாக்கியதால் அவையும் இன்னொரு வியாக்கியானம் என்னும் நிலையிற்கு சென்றுவிட்டது. அதில் எது உண்மையான வேதக் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்று உறுதியாக கூறமுடியாது.
சித்தாந்தம்
இந்த வேத தத்துவங்களை விளக்க முற்பட்ட அனைத்து முறைகளும் காலத்தால் பழுதுபட்டுநின்றதால், வேத தத்துவங்களை அறிவுபூர்வமாக தர்க்கரீதியாக உணர்ந்து கொள்ள வழிசெய்யும் முறையே சித்தாந்தம் எனப்படுகிறது.
அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவு. இது புலன்களின் மூலம் உண்டாவது. சித்தம் என்பது புலன்களை கடந்தது. அது உணர்தலின் வெளிப்பாடாக தோன்றுவது. உணர்தலில் உறுதியாக வெளிப்படுவது.
அறிதல் உணர்தல் இரண்டும் ஒன்றின் இருவேறு நிலைகள். கற்று கேட்டு படித்து ஒன்றை அறிந்துகொள்தல் அறிவு என்றால், அதை ஆராய்ந்து உறுதியாக ஏற்றல் நிராகரித்தால் சித்தம் எனலாம். சித்தம் அறிவைத் கடந்தது, அறிவின் முழுமையான முதிர்ச்சி நிலை என்பதால் சித்தத்தில் தோன்றும் முடிவுகள் அறிவிற்கும், தர்க்கத்திற்கும் பொருந்தாத ஒன்றாக இருக்க முடியாது.
அதனால்தான் சித்தத்தின் முடிவாக கூறப்படும் சித்தாந்த கருத்துக்கள் அனைத்தும் அறிவுக்கும் தர்க்கத்திற்கும் பொருந்துவதாகவும், அவற்றால் ஏற்கப்படக்கூடியதாகவும் உள்ளன.
இந்த சித்தாந்த தத்துவங்களும் சூத்திரம் செய்யுள் பாடல் எனும் வடிவுகளில் நூல்களாகவே கிடைக்கின்றன. அவற்றை படித்து உணர்ந்து கொள்தல் மட்டுமே அவற்றின் பொருளை உணர்ந்து கொள்வதாக இருக்கும். இல்லாமல் அவற்றிற்கு யாரோ ஒருவர் எழுதிய விளக்கத்தை படித்து அறிந்து கொண்டு அதுதான் சித்தாந்த முடிவு என்று யாரேனும் விளக்க முற்பட்டால் அது நாளை சித்தாந்த வியாக்கியானம் என்று ஆகிவிடும்.
சித்தாந்தம் என்பது வேதங்களுக்கு எதிரானது என்று ஒரு தவறான கருத்து சமூகத்தில் விரவிப்போய் உள்ளது. சித்தாந்தம் என்பது வேதாந்தம், வேதாந்த வியாக்கியானங்கள், ஆகமங்கள் என்பவற்றினால் உண்டாக்கப்பட்ட தவறான புரிதல்களை சரிசெய்யும் முறைமையே அன்றி வேதங்களுக்கு எதிரானது அல்ல.
வேண்டுமானால் சித்தாந்தம் வேதாந்த வியாக்கியானங்களுக்கு எதிரானது என்று கொள்ளலாம். ஆனால் சைவ சித்தாந்த மரபு வேதாந்த வியாக்கியானத்தையோ வேறு எந்த புரிதல் நிலைகளையோ எதிர்க்கவில்லை. அது அவர்களின் அறிவிற்கு எட்டிய புரிதல் என்ற அளவிலேயே சித்தாந்தம் அவற்றை கடக்கிறது.
சித்தாந்தம் என்பது வேத தத்துவங்களுக்கான விளக்கமாக இல்லாமல், வேத தத்துவங்கள் கூறுவதை விளங்கிக் கொள்வதற்கான வழிமுறையாக இருக்கிறது என்று கொள்ளலாம்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -39
No comments:
Post a Comment