பிரபஞ்சத்தின் தோற்றம் இறைவனின் தோற்றமா?
இந்த பிரபஞ்சம் உண்மை என்பது வைணவம்..
இந்த பிரபஞ்சமே மாயை என்பது ஸ்மார்த்தம்...
இந்த பிரபஞ்சம் மாயையால் தோன்றுவது என்பது சித்தாந்தம்..
இந்த பிரபஞ்சமே உண்மை என்று கூறுபவர்கள் இந்த ஜடப்பொருளும் அதன் ஆக்கமும் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் போவதில்லை. அது அவ்வாறே இருக்கிறது என்று கொள்கிறார்கள். இதை எப்படி இல்லை என்று சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். இன்றைய அறிவியல் என்பது கூட இந்த பிரபஞ்சமும் ஜடப்பொருளும் உண்மை என்ற அளவிலேயே தனது தேடல்களை தொடர்கிறது. அது தவறில்லை. அது அவர்களின் அறிவு வரம்புக்குள் சரியாக இருக்கலாம்.
ஆனால் பிரபஞ்சமே மாயை என்பதும், இந்த பிரபஞ்சம் மாயையால் உருவானது என்பதும் சற்று ஆழமான பார்வை. ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய அளவில் உள்ள ஒன்று ஒரு பெரிய உருவமாக தோன்றுகிறது என்ற உண்மையே இந்த பிரபஞ்சம் மாயையால் உருவானது என்பதன் அடிப்படை. இங்கே நாங்கள் ஜடப்பொருள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் தொடுகை உணர்வுள்ள ஒரு தோற்றநிலை மட்டுமே. இந்த ஆழமான உண்மையின் அடிப்படையில் நின்றே இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயையால் தோன்றுகிறது என்று கூறுகிறார்கள்.
உண்மையில் மாயை என்பது ஜடப்பொருளோ ஜடப்பொருளின் மூலமோ கிடையாது. மாயை என்பது ஆற்றலை ஜடப்பொருளாக காட்டிநிற்கும் நிலையாகும். நாம் ஜட பொருட்கள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் தொடு உணர்வுள்ள காட்சி நிலைகள்.
இந்த மாயநிலை என்பது ஆற்றலின் ஒரு நிலையே. நாம் பஞ்ச பூதங்கள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் வேறு வேறு நிலைகளே அன்றி வேறு வேறு பொருட்கள் கிடையாது.
ஆற்றல் இந்த மாயா நிலையில் காக்கப்படும் வரையிலேயே அது ஜடபப்பொருளாகவோ , அல்லது பஞ்சபூதங்களாகவோ இருக்கும். இவ்வாறு ஆற்றலை பஞ்சபூதங்களாக காட்டும் மாயா நிலை காக்கபடுவதை செய்வதை மாயவன் என்கிறோம். மாயவன் என்றால் இந்த மாயா நிலையை காத்து நிற்பவன் என்று கொள்ளலாம்.
இந்த பிரகிருதி எனும் படைப்பின் எல்லைக்குள் மட்டுமே இந்த மாயை என்னும் நிலை இருக்கிறது. படைப்பின் எல்லைக்கு வெளியே இந்த மாயை தோன்றாது.
ஆன்மாக்களின் அறிவை மறைத்து மயக்கத்தை உண்டாக்குவது இருள் மலம் எனப்படும் ஆணவமே, இது ஆன்மாகளுடன் அனாதி முதல் சேர்ந்தே இருக்கிறது. இந்த அறிவின் மயக்கமே ஆற்றலை ஜடமாகவும், பஞ்ச பூதமாகவும், இந்த பிரபஞ்சமாகவும் காட்டி நிற்கின்றது.
இந்த ஆணவம் விலகி முழுமையான அறிவு தோன்றும் போது இவை எல்லாம் ஆற்றலின் நிலைகளேயன்றி உண்மையான பொருள் இல்லை என்று உணரமுடியும். எமக்கு இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பது இந்த ஆணவமே.
இந்த பிரபஞ்சம் என்பது இறைவன் உயிர்கள் ஆணவம் என்னும் மூன்றும் சேர்ந்தே தோன்றி நிற்கிறது. மூன்றில் எது ஒன்று இல்லை என்றாலும் இந்த பிரபஞ்சம் என்பது தோன்றாது.
இங்கே பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆணவம் என்னும் இருளே முதற் காரணம். யாருக்கு இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது என்றால் உயிர்களுக்கே அது தோன்றுகிறது. ஆணவத்திற்கோ, கடவுளுக்கோ இந்த பிரபஞ்சம் தோன்றாது. எது இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது என்றால், இறைவனின் வெளிப்படு ஆற்றலே உயிர்களுக்கு பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது.
இப்போது சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைக்கு மறுபடி வாருங்கள். இறைவன் ஆன்மா ஆணவம் என்னும் மூன்று மட்டுமே அனாதியில் இருந்தது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம் என்றால் ஆன்மாக்களுக்கு தோன்றிய விருப்பமே காரணமாகும். ஆகவே ஆன்மாவே பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது. அதற்கு அவற்றின் ஆணவ மயக்கமே காரணமாக இருக்கிறது. இறைவனின் ஆற்றல் ஆன்மாக்களுக்கு பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது.
இங்கே பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான ஆன்மாவே பிரம்மன் எனப்படுகிறான். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான ஆணவம் என்னும் இருள் நிலையே கிருஷ்ணன் எனப்படுகிறான். இந்த அறிவை மயக்கும் இருளே இந்த பிரபஞ்சம் என்னும் மாய நிலையை தோற்றுவிப்பதால், அது அழியாமல் காப்பதால் அவன் மாயவன் எனப்படுகிறான்.
ஆணவமே விருப்பத்தை உண்டாக்கியது. அதனால்தான் மாயவனின் தொப்புள் கொடியில் இருந்து பிரம்மன் தோன்றி நிற்பதாக குறியீடு செய்யப்படுகிறது. அதாவது ஆணவத்தின் விருப்ப தூண்டுதலுக்கு ஆளான ஆன்மாவே படைப்பை/செயலை மேற்கொள்கிறது. ஆணவம் இல்லாவிட்டால் உயிர்களுக்கு விருப்பம் தோன்றாது. விருப்பம் இல்லாவிட்டால் எந்த செயல்களும் கிடையாது. அதனால்தான் பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்கிறோம்.
இங்கே பிரபஞ்சமாக தோன்றி நிற்பது இறைவனின் ஆற்றலே. இந்த பிரபஞ்ச மாயையை நீக்கி பார்த்தால் இறைவன் தோன்றுவாரா என்று ஒரு கேள்வி எழலாம். பிரபஞ்சமாக தோன்றி நிற்பது இறைவனின் ஆற்றலே அன்றி இறைவனல்ல. அதனால் மாயையை நீக்கி பார்த்தால் இறைவனின் ஆற்றலே எமக்குத் தோன்றும். இறைவன் தோன்றமாட்டான்.
மாயவனைக் கடந்தால் தெரிவது சிவமல்ல சக்தியே.. சிவம் வெளிப்படாதது.. அது தோன்றாதது. சித்தத்தில் நின்று உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும்.
இந்த பிரபஞ்சம் மாயையால் தோன்றுகிறது என்பதை உணர்ந்தவர்கள் இறைவன் என்பதை அந்த மாயையை நீக்கி தெரியும் ஆற்றலில் இருந்து உணர்ந்து கொள்கிறார்கள்.
இந்த பிரபஞ்சம் என்பது உண்மையானது என்பவர்கள் ஆணவமே கடவுள் மாயையே கடவுள் என்று நம்புகிறார்கள். உலகாயதர்கள், பரமார்த்தவாதிகள், இன்றைய வைணவ பிரிவுகள் சில இவ்வாறு நம்புகின்றன.
இவற்றை எல்லாம் ஆன்மாவே உணர்ந்து கொள்வதால் ஆன்மாவையே கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். பிரம்மவாதிகள், சமண பிரிவுகள் பல இவ்வாறு நம்புகின்றன.
மாயையை நீக்கி பார்த்தால் தெரிவது சக்தியே என்றும் அதனால் சக்தியே கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். சாக்தம் என்பது அவ்வாறான ஒரு நம்பிக்கையே.
இவற்றை எல்லாம் கடத்த பின்பும் ஒன்று இருக்கிறது அதுதான் கடவுள் என்பவர்கள் சித்தாந்த வாதிகள்.
அப்படியானால் கிருஷ்ணன் பிரம்மன் சக்தி என்பது எல்லாம் கடவுள் இல்லையா என்று சிலருக்கு தோன்றலாம். அவை அனைத்தும் கடவுள்தான். கடந்தும் உள்ளேயும் இருப்பதுதான் கடவுள் என்கிறோம். சக்தி பிரம்மன் கிருஷ்ணன் என்னும் தத்துவங்கள் அனைத்தும் கடந்தும் உள்ளேயும் இருப்பவைதான். அதனால் அவை அனைத்தும் கடவுள்தான்.
ஆனால் அவை அனைத்தையும் கடந்தும் ஒன்று உள்ளது. அதைத்தான் சிவம் என்று சொல்வர்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -47
No comments:
Post a Comment