Tuesday, June 13, 2023

யோகம் /யோகசமயம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறச் சமயம் என்னும் பிரிவில் இதுவும் ஒன்று.

யோக வழிமுறையின் ஊடாக உயிர்கள் பேரின்ப நிலையை அடைய முடியும் என்பது இவர்களது வாதம். யோக வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் வாழும் போதே பேரின்பத்தை அனுபவிக்கலாம் என்பதும் அதுதான் சமாதி நிலை என்பதும் இவர்களது நம்பிக்கை. 

இந்த யோக வழிமுறையைப் பின்பற்றுபவர்களும் தனியான கடவுள் என்ற ஒன்றை ஏற்பதில்லை. ஏனைய புறச் சமயங்கள் போல பிரம்மம் என்பதை ஏற்கின்றனர். ஒரு உயிர் யோக வழிமுறையைப் பின்பற்றி அனுபவிக்கும் இன்ப நிலையே பிரம்மநிலை என்று கருதுகின்றனர்.

யோக வழிமுறைகளை எட்டு அங்கங்களாக பிரித்து அட்டாங்க யோகம் என்று குறிப்பிடுகின்றனர்.

இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
ப்ரத்யாஹரம்
தாரானை
தியானம்
சமாதி
என்பவையே யோகத்தின் எட்டு அங்கங்களாக குறிப்பிடப்படுகிறது.

இந்த அட்டாங்க யோகத்தின் மூலமாக பதினெட்டு வகையான சித்திகள் கிட்டும் என்பது யோக சமயவாதிகளின் வாதம். உருவை சிறிதாக மாற்றுதல், பெரிதாக மாற்றுதல், காற்றுப் போல மாறுதல், கூடுவிட்டு கூடுபாய்தல், பஞ்சபூதங்களை கட்டுப்படுத்துதல், தேவர்களை கட்டுப்படுத்துதல், மரணத்தை தீர்மானித்தல், எல்லாவற்றையும் பார்க்கும் ஆற்றல், மனவேகத்தில் பயணித்தல், நிர்குண பிரம்ம நிலையை அடைதல் என்பது போன்ற பதினெட்டு சித்திநிலைகளைப்பற்றி பேசுகிறார்கள்.

யோகம் என்பதை
கர்மயோகம்
பக்தியோகம்
ஞானயோகம்
என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

இந்த யோக பிரிவுகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் நூலாகவே கீதை என்பதை கருதவேண்டும். மஹாபாரதம் எனும் பெருங்கதையுடன் இணைக்கப்பட்டும், வேறு சமய தத்துவ பிரிவுகளின் கீழ் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் கீதை என்பது முற்று முழுதாக யோகத்தை விளக்கும் நூலாகவே உள்ளது.

இந்த யோக சமயம் கூறும் சித்திநிலைகளை எட்டுகிறார்களா இல்லையா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்தாலும் ஆன்மீக வழிமுறைகளில் இந்த சமயத்தின் செல்வாக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகவே உள்ளது 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -30



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...