இது சமயத்திற்கான விளக்கம் இல்லை. அந்த சொல்லின் பொருள் என்ன என்பதே நோக்கம்.
சை - அசை என்ற இரண்டு சொற்களில் இருந்து அதன் பொருளை ஆராயலாம். எதிரான பதத்திற்கு சொல்லின் முன்னால் அகரம் சேர்ப்பது வடமொழி இயல்பு. அசை என்பது சை என்பதன் எதிர்ப்பதம் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
அசை என்றால் நகர்த்தல், நகர்தல், சலனப்படுதல், சலனப்படுத்துதல், ஒன்றின் நிலையை மாற்றுதல், மாறிக்கொண்டிருப்பது, நிலையில்லாது இருப்பது, தூண்டலுக்கு உட்படுவது, தன்னளவில் நிலையில்லாதது, தன்வசத்தில் இல்லாதது என்று பலவாறு பொருள் தரக்கூடியது அந்த வார்த்தை.
அப்படியானால் அசை என்ற இந்த வார்த்தைக்கு எதிரான பொருளைத் தரும் சை என்ற வேர்ச்சொல்லின் பொருளை நோக்குங்கள். நகர்த்த முடியாதது, நகராதது, சலனப்படாதது, சலனப்படுத்தாதது, ஒன்றின் நிலையை மாற்றாதது, தூண்டலுக்கு உட்படாதது, நிலையாக இருப்பது, தன்வசத்தில் இருப்பது என்றெல்லாம் பொருள் வருகிறது அல்லவா.
இப்போது சைவம், சைவர்கள் என்றால் யார் என்ற ஒரு புதிய புரிதல் வருகிறதா?
இறைவன் என்பவர் தன்வசத்தில் இருப்பவர், மாற்றங்கள் இல்லாதவர், சலனங்கள் அற்றவர், மற்றவர்களுக்கு சலனத்தை உண்டுபண்ணாதவர், ஏதொன்றையும் மாற்றாதவர், தூண்டலுக்கு உட்படாதவர், நிலையாக இருப்பவர், தன்வசத்தில் இருப்பவர் என்று ஏற்கும் சமயவாதமே சைவம் எனப்படுகிறது. அந்த வாதத்தை ஏற்பவர்களே சைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
சைவ தத்துவங்கள் இறைவனுக்காக குணங்கள் என்று இவற்றைத் தான் வரையறை செய்கிறது.
ஆசை, சைத்தன்யம், இசை, விசை, பசை என்று வரும் சொற்கள் அனைத்திலும் சை என்பதன் பொருள் நிலையாக இருப்பது, தன்வசத்தில் இருப்பது என்பதுதான்.
அசையும் உணவுகள், அசையாத உணவுகள் என்பதாகவே அசைவ உணவு, சைவ உணவு என்ற பாகுபாடு உள்ளதேயன்றி உயிருள்ள உணவு, உயிரற்ற உணவு என்ற பொருளில் கிடையாது.
அசையும் உணவுகள் எமது உடலுக்குள் செல்லும் போது எம் சிந்தனை செயல்களில் அசைவினை உண்டுபண்ணும், மனம் செயல்வசத்தில் இல்லாமல், சிந்தனை சிதறலை உண்டுபண்ணும் என்ற நம்பிக்கையே சைவர்கள் சிலர் சைவ உணவை உண்ண காரணமாகும். யோக நடைமுறைகளை பின்பற்றியவர்கள், நுட்பமான வேலைகளை செய்தவர்கள், நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிபுணர்கள் பலர் சைவ உணவுகளை உட்கொண்டார்கள். அதுகூட கட்டாயம் என்பதாக இல்லை. உட்கொள்ளும் உணவு மனத்தை பாதிக்காத வகையில் உளவுறுதி கொண்டோர்க்கு அந்த தவிர்ப்பும் தேவைப்படவில்லை.
சைவ தத்துவங்கள் புல் பூண்டு மண் மலை கல் என்று எல்லாவற்றினுள்ளும் உயிர் உள்ளதை விளக்குகிறது. சைவர்கள் சைவ உணவு உண்பது புலால் மறுப்பினால் அல்ல. உயிர்க்கொலை தவறென்று குற்ற உணர்ச்சியை உண்டுபண்ணுவது சமண மதங்கள் செய்த சூழ்ச்சி.
அசைவம் உண்பது என்பது குற்ற உணர்ச்சிக்கு உரியது கிடையாது. ஏனென்றால் உயிர் ஒருபோதும் அழிவதில்லை. உயிரை ஒருபோதும் கொல்ல முடியாது. எல்லோரும் யோகிகளாகவோ, துறவிகளாகவோ வாழத்தேவையில்லை. அவரவர் தன் தேவை அறிந்து தன் வாழ்வியலை வரைமுறை செய்ய வேண்டும். அதுதான் தர்மம் என்பது.
உடலுழைப்பை நம்பிவாழும் இல்லறத்தான் வாழ்வும், துறவியின் வாழ்வும் ஒன்றல்ல. அறிவுரையும் ஆலோசனையும் வழங்கும் நிபுணர்கள் மனநிலை ஒரு தொழிலாளிக்கும், போர்வீரனுக்கும் தேவையில்லை.
சைவ உணவென்பது சைவ சமயத்தில் கட்டாயமான ஒன்றல்ல. அப்படி என்றால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் மொன்னையாக மாற்றிவிடும். சைவ உணவு உயர்ந்தது அசைவ உணவு தாழ்ந்தது என்பது சைவ வரைமுறை கிடையாது. சைவ தத்துவங்களின் பார்வையில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது.
குற்ற உணர்வும் குறுகிய சிந்தனையும் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -28
No comments:
Post a Comment