Thursday, June 8, 2023

மீமாம்சம் எனப்படும் வேதமதம்

சைவ சித்தாந்த வாதிகள் புறச் சமயம் என்று வகைப்படுத்தும் பிரிவில் மீமாம்சமும் ஒன்று.

இவர்களும் தனியான கடவுள் என்ற ஒன்றை ஏற்பதில்லை. கடவுள் வழிபாடு என்பதும் இவர்களிடம் கிடையாது. 

இவர்கள் ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் வேதங்களை முதன்மையாக போற்றி பின்பற்றுபவர்கள். தேவர்களை நோக்கி செய்யும் யாகங்களும், வேள்விகளும் தமக்கு வேண்டியவற்றை கொடுக்கிறது என்று நம்பக்கூடியவர்கள். தாம் செய்யும் யாகங்களும், வேள்விகளும், கிரியைகளுமே பலன்களைத் தரக்கூடியவை என்றும் வேதங்கள் மட்டுமே முதன்மையானவை என்றும் நம்பக்கூடியவர்கள். 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை, நம்பிக்கை இரண்டையும், மீமாம்சகர்கள் வேதநூல்களுக்கு கொடுப்பார்கள். இவர்கள் சிலை வழிபாட்டை மறுப்பவர்கள்.

வேத நூல்களைத் தவிர்த்து வேறு நூல்களையும் இவர்கள் ஏற்பது கிடையாது.

சந்தியா வந்தனம் எனும் சூரிய வழிபாடு,

யாகங்கள்,

வேள்விகள் எனப்படும் பலி கொடுத்தல்,

யக்ஞங்கள் எனப்படும் வேதம் ஓதுதல்,

அக்னி ஹோத்திரம் என்னும் அணையா நெருப்பு வழிபாடு,

பூஜை புனஸ்காரம்,

விரதங்கள் என்பவை சொர்க்கத்தை அடைவதற்காக வழியாகும் என்பது இவர்களது நம்பிக்கை.

ஏனைய சமய வாதங்களை போன்றே பிற்காலத்தில் இவர்களிலும் வேறு பிரிவினர் உருவானார்கள். அதனால் மீமாம்சகர்களை பூர்வ மீமாம்சகர் என்றும் பின்னர் உருவான பிரிவினரை உத்தர மீமாம்சகர் என்றும் அழைப்பர்.


உத்தரமீமாம்சம் வேதாந்தம்

இது வேத நூல்களின் கருத்துக்களின் முடிவை அடிப்படையாகக் கொண்ட பிரிவாகும். வேத நூல்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் அந்த நூல்களின் கருக்துக்களை விளக்கும் பகுதியாக விளங்கும் உபநிடதங்களையும், பிரம்ம சூத்திரம் முதலான வேத விளக்கங்களையும்  முதன்மையாக கொண்டவர்கள் இவர்கள்.

வேதங்களுக்கு ஆதாரமாக இருப்பது கிரியைகள் அல்ல அதன் கருத்துக்கள் என்பது இவர்களது வாதம். அதனால் உத்தர மீமாம்சகர் என்றும், வேதத்தின் முடிவைப் பற்றி பேசுவதால் வேதாந்திகள் என்றும்  அழைக்கப்படுகின்றனர்.(உத்தரம் என்றால் ஆதாரமாக இருப்பது என்று பொருள்)

பூர்வ மீமாம்சகர்கள் யாகம், பலி, யக்ஞங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க, உத்தர மீமாம்சகர் ஞான கருத்துக்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கின்றனர்.

பூர்வ மீமாம்சகர்கள் தேவர்கள் என்பதைத் தாண்டி சிந்திக்காத போது, வேதாந்திகள் எனப்படும் உத்தர மீமாம்சகர் பிரம்மம் என்ற ஒன்றை பற்றி பேசுகின்றனர்.

இவர்களது பிரம்மம் என்பதும் தனியான கடவுள் கிடையாது. ஜீவாத்மா பரமாத்மா என்ற ஆன்மாவை ஒத்த பெரிய ஆன்மா என்ற நம்பிக்கையே இவர்களது பிரம்மம் என்பது, பிரம்மத்தின் ஆன்மா பிரம்மம் என்பது இவர்களது நம்பிக்கை. ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் ஒன்றே என்பது இவர்களது வாதம். 

ஞான மார்க்கம் ஒன்றே சொர்க்கத்தை அடைவதற்காக வழியாகும் என்று இவர்கள் நம்புகின்றனர். 

வேதாந்திகள் உருவ வழிபாட்டையும் மறுப்பதில்லை. பிரம்மம் என்பதை ஈஸ்வரன் என்றும் வணங்குகிறார்கள். அதேநேரம் பூர்வ மீமாம்சகர்கள் பின்பற்றும் யாகங்கள், வேள்விகள், யக்ஞங்கள் என்பவற்றையும் மறுதலிப்பதில்லை. அதையும் பின்பற்றுகிறார்கள்.

வேதாந்திகள் ஈஸ்வரன் என்று குறிப்பிடுவது சைவ சித்தாந்தம் கடவுள் என்று கூறும் ஈஸ்வரன் கிடையாது. அவர்கள் பிரம்மம் என்பதையே ஈஸ்வரன் என்றும் வணங்குகிறார்கள். 

இவர்கள் பிரம்மம் என்பதை நிர்குண பிரம்மம் என்கிறார்கள். பிரம்மம் எந்த குணங்களும் அற்ற ஒன்று என்பது இவர்களது வாதம். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -29



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...