Monday, June 19, 2023

ஏகான்மவாதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறச் சமயங்கள் என்று வகுக்கப்படும் சமயங்களில் ஏகான்மவாதமும் ஒன்று.

இவர்கள் ஆன்மாக்கள் என்று பலவாக கூறாமல், ஆன்மா என்பது ஒன்றே என்னும் நம்பிக்கை உடையவர்கள்.

(பரமாத்மா)ஆத்மா என்பது ஒன்றே என்றும், அதுவே பலவாறாக தோன்றி நிற்கிறது என்பதும் இவர்களது வாதம். 

இந்த சமய பிரிவிலும் நான்கு விதமான உட்பிரிவுகள் உள்ளன. அந்த ஒரு ஆன்மா எப்படிப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டவை அந்த நான்கு பிரிவுகளுமாகும்.

1 பரிணாம வாதம் 
2 கிரீடாப்பிரம வாதம் 
3 மாயா வாதம் 
4 சத்தப்பிரமம்

பரிணாம வாதம் என்பது பிரம்மம் என்ற ஒரு ஆன்மாவே உலகங்களாக உயிர்களாக என்று பரிணமித்து நிற்கிறது என்னும் வாதமாகும். பரிணாமம் என்றால் ஒன்று இன்னொன்றாக சிறப்புற்று மாறுதல், வளர்ச்சியடைதல் என்று பொருள். 

பிரம்மமே உயிர்களாகவும் உலகங்களாகவும் தோன்றி நின்று ஒரு விளையாட்டை விளையாடுகிறது என்பது கீரீடாப்பிரம்ம வாதமாகும். கீரீடாபிரம்மம் என்றால் விளையாடும் பிரம்மம் என்பது பொருள். தோன்றுதல் மறைதல் என்பவை ஒரு விளையாட்டு என்கிறார்கள் இவர்கள்.

மாயை என்றால் ஒன்று இன்னொன்றாக தோன்றுவது, நிலையற்று இருப்பது என்று பொருள். இந்த உலகம் உயிர்கள் அனைத்தும் நிலையற்றவை, மாறிக்கொண்டே இருக்கும் மாயை அவை. நிரந்தரமான ஒரு ஆன்மாவிற்குள் நடக்கும் மாயா மாற்றங்களே அனைத்தும் என்பது மாயாவாதமாகும்.

சப்தப்பிரம்மம் என்றால் சப்தமே பிரம்மம் என்ற வாதம். சப்தம் என்றால் ஒரு அதிர்வு நிலை. நாதம் என்பதும் அதுவே. சப்த நிலை மாற்றங்களே உலகமாக உயிர்களாக தோன்றி நிற்கிறது என்பது, அல்லது உலகமாக உயிர்களாக தோன்றி நிற்பதற்கு காரணம் சப்த மாற்றமே என்பது சத்தப்பிரம்ம வாதமாகும்.

பிரம்மத்தை நாதவடிவம் என்பதும், இறைவனை நாதன் என்பதும் இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

பஞ்ச பூதங்களை வகுக்கும் போது நாதம் என்ற ஒற்றை தன்மையுடைய ஆகாயமே காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று மாறுவதை வேதாந்த சித்தாந்த தத்துவங்கள் விளக்குகிறது. பஞ்சீகரணம் என்பார்கள் அதை. அந்த அடிப்படையில் பார்த்தாலும் நாதம் என்பதே மூலமானதும், முதன்மையானதுமாக உள்ளது.

சைவத்திலும் நாத சைவம் என்பது ஒரு தனிப்பெரும் பிரிவாகவே உள்ளது. சிவனை நாத வடிவமாக கருதுபவர்கள் அவர்கள். சித்தர்கள் என்று நாம் இன்று கூறுபவர்கள் பலர் அந்த நாதசைவ மரபினில் வந்தவர்களே. 

அவர்கள் சிவனை நாதன் என்றும், வெட்டவெளி என்றும் விழித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாத சைவம் என்பது ஏகான்மவாதம் கிடையாது. 

சாங்கியம் கூறும் பரிணாமவாதமும் ஏகான்மவாதம் கூறும் பரிணாம வாதமும் வேறுபட்டது. சாங்கியம் ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சி பற்றி பேசுகிறது. ஏகான்மவாதம் ஒரு ஆன்மாவின் பரிணாம மாற்றத்தில் தோன்றுவதே உலகமும் உயிர்களும் என்கிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -32



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...