Thursday, June 15, 2023

வைணவம் எனப்படும் பஞ்சராத்திரம்

சைவ சித்தாந்த வாதிகள் புறச் சமயம் என்று வகைப்படுத்தும் பிரிவில் பஞ்சராத்திரமும் ஒன்று.

புறச் சமயங்களில் ஒன்றான இது இன்று வைணவம் என்று அறியப்படுகிறது. 

இவர்கள் தனியான கடவுள் என்பதையும், மாயை என்பதையும் ஏற்பதில்லை. ஆன்மா பரமான்மா என்னும் இரண்டும் ஒன்றே என்னும் நம்பிக்கை உடையவர்கள். அனைத்து ஆன்மாக்களும் சேர்ந்தது பரமாத்மா என்னும் நம்பிக்கையும் இவர்களிடம் உள்ளது.

பரமாத்மாவின் ஒரு அங்கம்தான் ஆத்மா என்பது இவர்களது நம்பிக்கை. இவர்கள் உலகம் முழுவதிலும் உள்ளவை மாயை கிடையாது உண்மை என்று நம்புகின்றனர். பரமாத்மா ஆத்மாவாக அவதாரம் எடுக்கும் என்று நம்புகின்றனர். அனைத்தும் பரமாத்மாவின் படைப்பு என்பதும் அவை பரமாத்மாவால் காக்கப்படும் என்பதும் இவர்களது வாதம்.

இவர்களது ஆத்மா பரமாத்மா இரண்டும் ஒரே போன்றவை, பரமாத்மாவின் அங்கம்தான் ஆத்மா; என்பது சமண நம்பிக்கையை ஒத்தது. உலகில் உள்ள அனைத்தும் மாயை கிடையாது; உண்மை என்பது உலகாயதர்களின் நம்பிக்கையை ஒத்தது. இவர்கள் அவதாரங்கள் என்று வணங்குபவை பூமியில் அவதரித்த உயிர்கள் என்று சொல்லியே வணங்கப்படுகின்றன. தனியான கடவுள் என்பதை மறுத்து பூமியில் பிறந்து இறந்தவர்களை தெய்வங்களாக வணங்குவதும் சமண நம்பிக்கையை ஒத்ததாகவே காணப்படுகிறது.

ஆன்மா மட்டுமல்ல ஜடப்பொருளும் பரமாத்மாவின் அங்கம்தான் என்பது இவர்களது வாதம். 

இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயையால் ஆனவை என்றும், அதற்கு அதிபதி மாயவன் என்றும் சைவர்கள் மரபுவழி நம்பி வழிபட்டு வந்தார்கள். உலக வாழ்விற்கு மாயை இன்றியமையாத ஒன்று என்பதால் உலகியல் இன்பங்களை வேண்டி மாயவனை வழிபடுவதும் மரபாக இருந்துள்ளது. 

உயர் ஞானத்தை முக்தி நிலையை வேண்டுபவர்கள் சிவவழிபாடு செய்ய வேண்டும் என்பதும், உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை வழிபடுபவது என்பதும் மரபாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமண மதங்கள் சைவத்தால் வீழ்த்தப்பட்ட காலத்தில் வைணவம் என்பது உருப்பெற்று வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.

ஆன்மீக புரிதலின்றி சமண மதங்களை ஏற்றவர்களை தத்துவார்த்தமாக சைவத்தில் மீளிணைப்பது சவாலாக இருந்தது. கீழ் நிலை மக்கள் வழிபாடு, பக்தி, வேண்டுதல் என்ற நிலைகளைக் கடந்து ஆன்மீக தத்துவங்களை புரிந்து கொள்ளும் வகையில் இருக்க மாட்டார்கள். அவர்களை அரவணைக்கும் வகையில் அக்காலத்தில் வைணவம் செயற்பட்டது. 

கீழ்நிலை மக்களை நீங்கள் திருமாலின்-திருமகளின் குலங்கள் என்று "திருக்குலம்" என்று கூறி தம்பக்கம் அரவணைத்துக் கொண்டது. பிற்காலத்தில் ஹரிஜனம் அதாவது ஹரியின் மக்கள் என்று கீழ் நிலை மக்கள் அழைக்கப்படுவதற்கும் அந்த திருக்குலம் என்பதே மூலமாக இருந்துள்ளது.

ஏனைய சமய பிரிவுகளை போலவே இந்த பஞ்சராத்திகளும், பிற்காலத்தில் பல பிரிவுகளாக பிரித்து சென்றனர். 

மத்வரின் துவைதம், 
ராமானுஜரின் விஷிட்டாத்வைதம் என்பவை பஞ்சாராத்திகளிடம் உருவான தத்துவ பிரிவுகளாகும். 

மத்வரின் துவைதம் ஆன்மா, பரமாத்மா இரண்டும் வேறு என்று சொன்னாலும் பரமாத்மா என்பதும் ஜடந்துடன் கூடிய ஆன்மாவை ஒத்த ஒன்றாகவும், ஆன்மாவை கட்டுப்படுத்தும் ஒன்றாகவும் குறிக்கப்படுகிறது. 

பரமாத்மா என்பது சுதந்திரமான கட்டுப்பாடற்ற ஆன்மா என்பதும், ஆன்மாக்கள் என்பவை சுதந்திரமான பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதுமே துவைத பகுப்பாகும்.

ராமானுஜரின் விஷிட்டாத்வைதம் என்பது விஷேடமான அத்வைதம் எனப்படுகிறது. அதுவும் பரமாத்மாவின் அங்கம்தான் ஆத்மா என்பதாகவே தனது கோட்பாட்டை விளக்குகிறது. கடலும் கடலில் உள்ள ஒரு நீர்த்துளியும் என்பதாகவே பரமாத்மாவையும் ஆத்மாவையும் விளக்குகிறது. நீர்த்துளிகளால் ஆனதுதான் கடல்  ஆனால் நீர்த்துளி கடலல்ல என்ற வகையிலான விளக்கமே விஷிஷ்டாத்வைதம் என்பது.

ஆக இதுவும் ஆன்மாக்கள் என்பவை பரமாத்மாவின் அங்கம் என்பதான வாதமாகவே கருதப்படுகிறது. 

எது எப்படி இருந்தாலும் ஆன்மீகம், ஞானம் என்பதை விடுத்து ஆசைகள் தேவைகள் என்பவற்றை நிறைவேற்றும் நோக்கில் வழிபடும் கீழ்நிலை பக்தர்களுக்கு பஞ்சராத்திரம் ஒரு சிறந்த வாய்ப்பாகவே இருந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் வங்கத்தில் உருவான கௌடிய வைணவம் அல்லது சைத்தன்ய வைணவம் என்னும் பிரிவு மாயையை பற்றியும், மாயையில் இருந்து விடுபடுவது பற்றியும் கூட பேசுகின்றது. இது அவர்களின் ஆன்மீக சிந்தனைகளில் உருவான மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த பிரிவு ஹரே கிருஷ்ணா, இஸ்கான் என்ற பெயர்களால் அறியப்படுகிறது. 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -31



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...