பலியிடுதல் வேள்வி யாருடைய மரபு?
சைவ சித்தாந்த வாதிகளது சமய பகுப்பின் அடிப்படையிலேயே இதனையும் பார்ப்போம்.
சைவ சித்தாந்த வாதிகள் புறப்புறச்சமயம் என்று வகுக்கும் சமண மதங்கள் அனைத்தும் உயிர்ப்பலிகள் தவறு எனும் கொல்லாமை கோட்பாட்டை உடையவை. காரணம் அவர்கள் கடவுள் என்ற ஒன்று தனியாக இல்லை என்றும் உயிர்களே தெய்வங்களாக இருக்கின்றன என்றும் நம்பும் சமயத்தினர். அவர்கள் வணங்கும் தெய்வமே ஒரு உயிராக இருக்கையில் ஒரு உயிரைக் கொல்வது என்பது தெய்வத்தை கொல்வதை ஒத்ததாகும். எனவே உயிர்களை கொல்வதை தவறென்று சமண மதங்கள் அனைத்தும் கூறுகின்றது.
அடுத்து புறச் சமயங்கள். கடவுள், உயிர்கள், சடப்பொருள் என்று தனித்தனியான பொருட்கள் கிடையாது. உயிராக உடலாக என்று இருப்பவை அனைத்தும் கடவுளின் அங்கமே என்னும் கொள்கையினை உடையவை அவை. சாங்கியம், வைணவம், ஏகான்மவாதம் , வேதாந்தம் என்று அனைத்து புறச்சமயிகளும் இதே கோட்பாட்டினை உடையவர்களே. ஆகவே கடவுளின் அங்கமாக விளங்கும் உடலை- உயிரை அழிப்பதையோ, அதனை இறைவனுக்கு படைப்பதையோ அவை ஏற்பதில்லை.
எஞ்சி இருப்பவை அக புற சைவங்கள் மட்டுமே. இந்த இரண்டு சைவ பிரிவினருமே கடவுள், உயிர்கள், சடப்பொருள் என்ற மூன்றும் வேறு வேறானவை என்று ஏற்றுக் கொள்ளும் சமயங்கள்.
உயிர்கள் இறைவனை அடைவதற்கு தடையாக இருப்பது சடப்பொருள் என்னும் மாயையே என்று சைவ பிரிவுகள் அனைத்தும் ஏற்கின்றன.
சைவ கோட்பாடுகளின் அடிப்படையில் உடல் என்பது சடமாயை. உயிரைப் பற்றி நிற்கும் இந்த சடமாயைதான் உயிர்களின் துன்பங்களுக்கும், அவை முக்தி நிலையை அடையாமைக்கும் காரணமாகும் என்கின்றன.
இந்த மாய உடலை அழிப்பது முக்தி நிலைக்கான அடிப்படை என்று சைவம் வலியுறுத்துகிறது. உடல் மீதான பற்றை உயிர்கள் விடவேண்டும், உடலை விட்டு உயிர் நீக்கினால் வருந்தாதே அப்போதுதான் அந்த உயிர் இறைவனை அடைவதற்கு வழி பிறக்கிறது என்பதே சைவத்தின் போதனை.
பிறவி என்பது பெருங்கடல் என்றும் அந்த பிறவிகளை பிறந்து இறந்து கடக்க வேண்டும் என்பதும் சைவத்தின் நம்பிக்கை. சைவத்தில் மட்டுமே ஒரு உயிரைக் கொல்வது கடவுளை கொள்வதாக ஆகாது. ஒரு உயிரைக் கொல்வது கடவுளின் அங்கத்தை சிதைப்பதாக ஆகாது. ஏனென்றால் சைவ தத்துவங்கள் உயிர் தனி, உடல் தனி, கடவுள் தனி என்று தெளிவாக விளக்குகிறது.
கொல்லாமை என்பதும், உயிர் பலி தவறு என்பதும் சைவத்தின் அடிப்படை கிடையாது. அது புறச் சமயங்கள், புறப்புறச் சமயங்களின் நம்பிக்கை சார்ந்தது.
தொலைந்துபோன சமணர்கள் சைவர்கள் என்று வேடம் பூண்டு உயிர்ப்பலி தவறு, வேள்வி தவறு என்று கூச்சலிடுகிறார்கள்.
சைவ ஆலயங்களில் இருக்கும் பலிபீடங்கள் ஆணவம் கன்மம் மாயையை பலியிடும் இடம் என்று பிதற்றுகிறார்கள். கண்ணால் காண முடியாத மலங்களுக்கு கல்லில் பீடம் அமைத்து கொல்லும் அறிவாளிகள் கூட்டம் இந்த சிவவேடம் பூண்ட சமணர்கள்.
பலியிடல் என்பதும் வேள்வி என்பதும் சைவர்கள் மரபு. உடல் எனும் மாயையை அழிப்பதற்கு தயங்கக் கூடாது, உடல் என்னும் மாயையை அழிப்பதே முக்திக்கு அடிப்படை என்று தைரியமூட்டும் செயன்முறை அது. அதற்கான வைராக்கியம் வேண்டும் என்று வைரவராக கடவுளை வணங்குவது சைவர்கள் மரபு.
பாசுபதர்கள், கபாலிகர்கள், காளமுகர்கள், பைரவர்கள் என்று அனைத்து ஆதிசைவ மரபினரும் பலியிடலை வழக்கமாக கொண்டவர்களே. சமணர்கள் சைவர் என்று வேடந்தரித்த பின்னரே பலியிடும் வழக்கம் சைவம் கிடையாது என்று உருட்டுகின்றனர்.
பலியிடலும், வேள்வியும் செய்து வழிபாடும் மக்களே உண்மையான ஆதிசைவ மரபினைச் சேர்ந்தவர்கள்.
பலிபீடத்தில் வைத்து பூசணிக்காயை, எலுமிச்சம் பழத்தை வெட்டுவது சமணர்களுக்காக செய்த சமரசம் அன்றி வேறில்லை. நீங்கள் சமரசம் செய்வது தவறில்லை. ஆனால் ஆதிசைவ மரபை அழிக்க நினைப்பது தவறு. அவ்வாறு பாரம்பரிய மரபை பின்பற்றுபவர்களுக்கு தடை ஏற்படுத்துவது மகாபாவம்.
#சர்வம்_சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம் -27
No comments:
Post a Comment