Friday, June 23, 2023

பாசுபதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படும் ஒரு சமய பிரிவாகும்.

ஆதி மார்க்க சைவத்தின் மூத்த தத்துவ பிரிவாக கருதப்படுகிறது. ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட முதலாவது சைவ சமய பிரிவு என்றும் சொல்லலாம். 

இறைவன் உயிர்களின் தலைவனாக இருக்கிறான் என்று கூறி இறைவனைப் பசுபதி என்று இவர்கள் வழங்குகின்றனர்.

பதி பசு பாசம் என்னும் முப்பொருள் தத்துவத்தை, சைவ தத்துவ அடிப்படையை உருவாக்கியது பாசுபதம் என்று கொள்ளலாம். பாசத்தின் நிலைகள் பற்றி பேசுவதால் பாசுபதம் என்று அழைக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

பதி என்றால் கடவுள், 
பசு என்றால் ஆன்மா, 
பாசம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றையும் சேர்த்து குறிக்கப்படுவது.

இவர்கள் பசுபதி எனப்படும் இறைவன் செயற்காரணன் என்று கொள்கிறார்கள். 

ஒருவர் பேரின்ப நிலையை அடைய சமயம் சார்ந்த ஒழுக்க நடைமுறைகளை பேணப்படவேண்டும் என்றும், யோக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். அதனால் பாசுபதம் என்பது சாதாரண மக்களால் பின்பற்றப்படும் ஒன்றாக இருக்கவில்லை.

பசு எனப்படும் உயிர் பாசங்களால் கட்டுண்டு கிடக்கிறது என்றும் அந்த பாசக் கட்டுக்களில் இருந்து விடுபடுவதால் மட்டுமே பேரின்ப நிலையை அடைய முடியும் என்பதும் இவர்களது வாதம். ஆனால் அவ்வாறு பாசக் கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த பசுபதியால் மட்டுமே விடுவிக்க முடியும் என்பது இவர்களது நம்பிக்கை. 

எல்லோராலும் பாசுபதத்தை பின்பற்ற முடியாது. குரு சிஷ்யர்கள் என்னும் முறையில் மட்டுமே பாசுபதம் பின்பற்றப்படுகிறது. குரு தகுதியான சிஷ்யர்களை மட்டுமே தெரிவு செய்து சேர்த்துக் கொள்கிறார். சிவனை வணங்குவதற்கும் அவனுடைய அருள் வேண்டும் என்பது பாசுபத நம்பிக்கையை சார்ந்தது. அவ்வாறு பசுபதியின் அருளினால் மட்டுமே பசுக்கள் கட்டுக்களில் இருந்து விடுபட்டு துக்கநிவாரணம் பெறும் என்றும் அதுதான் முத்திநிலை என்பதும் பாசுபதர்களது நம்பிக்கை.

பாசுபதம் பதி பசு பாசம் என்று முப்பொருள் பற்றிப் பேசினாலும், அதன் பதியைப்பற்றிய புரிதல் என்பது சித்தாந்தம் கூறும் சிவ தத்துவங்களுடன் பொருந்தாது நிற்கிறது.

வேண்டினால் அருளுவார், தெரிவுசெய்து அருளுவார் என்பவை எல்லாம் சித்தாந்தம் கூறும் கடவுள் பற்றிய கோட்பாடுகளுக்கு மாறானது. 

கடவுள் அவதாரங்களாக தோன்றுவார், கர்மங்களை ஆற்றுவார் போன்ற தத்துவார்த்த வேறுபாடுகளால் பாசுபதம் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -36



ஆன்மாவின் அளவு

ஆன்மீகத்தின் அடிப்படையாக இருப்பது ஆன்மா. நான் என்றால் அது ஆன்மாவையே குறிக்கும் என்கிறது ஆன்மீகம். அப்படியானால் இந்த ஆன்மா எங்கே இருக்கிறது? அதன் அளவு எவ்வளவு? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஒரு ஆணும் பெண்ணும் கூடி, ஒரு கருமுட்டை ஒரு விந்தணு என்பவை சேர்த்து ஒரு சிறு துணிக்கையாக கரு உருவாகும் போது அங்கு ஆன்மாவும் இருக்கிறது. அப்படியானால் ஒரு சிறுகலமாக உருவான கருவின் உள்ளேயே அது தோன்றிநிற்பதால் அது ஒரு அணுவைப் போன்று சிறிதாக தோற்றமளிக்கிறது.

இவ்வாறு அணுவிலும் சிறிதாக ஆன்மாவை கருதவைப்பது ஆணவம் என்பது ஆன்மீகத்தில் தேர்ந்தோர்களது வாதம். அப்படியானால் ஆன்மாவின் அளவு எவ்வளவு?

அதற்கு முதலில் உயிர்கமைப் பற்றி இருக்கும் ஐந்து விதமான உறைகளைப்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிர்களைச் சுற்றியும் இந்த உறைகள் தோன்றும். அவை ஒவ்வொன்றாக மறைந்து இல்லாமல் போவதே முக்திநிலை என்று கூறப்படுகிறது.

அன்னமயகோசம்
பிராணமயகோசம்
மனோமயகோசம்
விஞ்ஞானமயகோசம்
ஆனந்தமயகோசம்
என்பவையே உயிர்களைச் சூழ்ந்து நிற்கும் அந்த ஐந்து வகையான உறைகள்.

அன்னமயகோசம் என்பது உணவால் உண்டான எமது உடம்பாகும்- ஜட உடல்.

பிராணமயகோசம் என்பது தசவாயுக்கள் என்று சொல்லப்படும் பத்துவிதமான வாயுக்களால் உண்டான தேகம்- ஆவி உடல்.

மோனோமய கோசம் என்றால் எமது எண்ணங்கள் சந்தேகங்கள் என்னும் மனத்தால் உருவான தேகம்-மனவுடல்.

விஞ்ஞானமயகோசம் என்பது எமது அறிவால் உருவான தேகம்- அறிவுடல்.

ஆனந்தமயகோசம் என்பது முக்தி நிலையில் ஆன்மா பேரின்பத்தை அனுபவிக்கும் வரையறை அற்ற உடல்.

இப்போது ஆன்மாவின் அளவை ஒவ்வொரு உடலில் நின்றும் காண்போம்.

இந்த உணவால் உண்டான ஜடஉடல் முழுவதும் ஆன்மாவை சார்ந்த அதன் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அதன் அத்தனை செயல்களும் உடல் முழுமைக்கும் தானே செயற்படுகிறது. அப்படியானால் இந்த ஆன்மா இந்த ஜட உடல் முழுவதும் வியாபித்து நிற்கிறது என்பது தானே பொருள். அப்படியானால் இந்த ஆன்மாவின் அளவு இந்த உடலில் அளவிற்கு இருக்கிறது என்று கொள்ளலாம்.

சரி அடுத்து பிராணமயகோசம். இது பத்து வாயுக்களால் உண்டான தேகம் என்று பார்த்தோம். எமது புலனுணர்வுகள் அனைத்தும் கடத்தப்படுவது இந்த தசவாயுக்களால்தான். உடலுக்குள் இந்த பிராணன் இருக்கும் வரையிலேயே நாம் பார்த்து கேட்டு நுகர்ந்து என்று புலன்களால் அனுபவிக்கும் அத்தனையையும் அனுபவிக்கின்றோம். இங்கே புலன்களால் அனுபவிக்கப்படும் அத்தனையும் பிராணமய உடலாலேயே நிகழ்கின்றன. எனவே புலன்களால் அனுபவிக்கப்படும் அத்தனை பரப்பிற்கும் இந்த ஆன்மாவின் வியாபகம் இருக்கிறது என்று கொள்ளலாம்.

அடுத்து மனோமயகோசம். மனம் என்பது எண்ணங்கள் மற்றும் சந்தேகங்கள் என்பவற்றால் உருவான ஒன்று. எமது எண்ணங்களின் தூரம் எவ்வளவு? அதன் எல்லைகள் எவ்வளவு? நாம் கண்டு கேட்டு உய்த்துணர்ந்த அத்தனை தூரங்களுக்கு மனம் பயணிக்கிறது அல்லவா. அப்படியானால், இந்த மனம் பயணிக்கும் அத்தனை பரப்பும் மனவுடல் மூலம் ஆன்மா வியாபித்து நிற்கிறது என்று கொள்ளலாம்.

 மனத்தில் எல்லைகளே மிகமிகக் பெரியது. அப்படியானால் அறிவின் எல்லையை சிந்தித்து பாருங்கள். அறிவு என்பது எல்லாவற்றையும் பற்றிய உறுதியான முடிவு. இந்த பிரபஞ்சம் அதனைக் கடந்த பகுதி என்று அறிவு மனதைவிட மிகவும் விசாலமானது. இங்கே அறிவு என்பது புலன் அறிதலல்ல, புலன்களை கடந்த அறிவு. அப்படியானால் இந்த ஆன்மாவின் வியாபகம் இந்த அறிவின் எல்லையைகளை தனதாகக் கொண்டது எனலாம்.

மற்றையது ஆனந்தமயகோசம். இது உடல் சார்ந்த, புலன் சார்ந்த இன்பமல்ல. இறைவனின் பதத்தை அடைந்து அனுபவிக்கும் பேரின்பம். உடலற்ற புலன்களற்ற இன்பத்துக்கு எல்லைகள் ஏது? இறைபதத்தில் கலந்து நின்று இன்பத்தை அனுபவிப்பதால் இறைவனின் எல்லையற்ற வியாபகத்தை இந்த ஆன்மாவின் வியாபகமாக கொள்ளலாம்.

எனவே இறைவனின் எல்லையற்ற பரப்பின் அளவில் இந்த ஆன்மாவின் அளவும் இருக்கிறது என்று கொள்ளலாம். அதனால்தான் ஆன்மாக்களை அணுவிலும் சிறிதாக நினைக்க வைப்பது ஆணவம் என்று ஆன்மீக ஞானம் பெற்றவர்கள் கூறுவர்.

இப்போது சிந்தித்து பாருங்கள். நீங்கள் என்பது எல்லையற்ற ஆன்மா. இந்த உலகம், அதிலுள்ள உயிர்கள், இந்த பிரபஞ்சம் என்று அனைத்தும் உங்களுக்குள் அடங்குகிறது அல்லவா? இந்த நிலையில் நீங்கள் ஒரு விஸ்வரூபியாக தோன்றுகிறீர்கள். 

நானே உலகமாகவும், உயிர்களாகவும், இந்த பிரபஞ்சமாகவும் இருக்கிறேன் என்பது இந்த ஆன்மா பற்றிய புரிதலில் கூறப்படும் வார்த்தைகள். அவ்வாறு நான் என்பது ஆன்மா என்பதையும், அந்த ஆன்மாவின் வியாபகத்தையும் ஒருவன் தன்னுணர்வு நிலையில் கூறினால், அவனையே கடவுளாக கருதி வழிபட ஆரம்பிப்பது அறியாமை.

ஆணவத்தின் பிடியில் ஆறடி உருவுக்குள் அடங்கிக் கிடக்கும் மனிதர்களை, அகிலமே அவனுக்குள் அடக்கம் என்று உணர வைப்பதே ஆன்மீக ஞானம்.

அப்படி உணர்ந்தவன் வெளிப்படுத்தியதை உணர்ந்து தானும் அந்த நிலையை அனுபவிக்காமல், வெளிப்படுத்தியவனை வணங்குவது என்பதே அஞ்ஞானம்.

இறைவனின் வியாபகமும், ஆன்மாவின் வியாபகமும் ஒன்றாக இருப்பதாலோ, இறைவனின் பேரின்ப நிலையை ஆன்மாவும் அனுபவிப்பபதாலோ இறைவனும் ஆன்மாவும் ஒன்றாக முடியாது. எல்லையற்ற அளவில் பேரின்பத்தை வழங்கும் நிலை இறைநிலை. அதைப் பெற்று அனுபவிக்கும் நிலையே ஆன்மாவின் நிலை என்று தெளிவுபடுத்தி நிற்பது சித்தாந்தம்.

இறைவன் பேரின்பமாக இருக்கின்றார். ஆன்மா முக்தி நிலையில் பேரின்பத்தை அனுபவிக்கிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -35



வாமம் எனப்படும் வாமாச்சாரம்

//பலியிட்டு நிலத்தில் இரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால்; கொலைகள்- தற்கொலைகளும், வன்புணர்வும் தலைவிரித்து ஆடும் என்றும், 

மடையும், படையலும் நிறுத்தப்பட்டால் பாலியல் ஒழுக்க கேடுகள், போதைப்பாவனை என்பவற்றுடன் வெறிப்பிடித்த அறிவற்ற சமூகம் ஒன்று உருவாகும் என்றும் வாமாச்சாரம் கூறுகிறது.//

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படும் ஒரு சமய பிரிவாகும்.

சைவத்தின் ஆதிமார்க்க பிரிவுகளில் ஒன்றான இது பின்னாளில் சாக்தம் என்னும் சக்தி வழிபாட்டு பிரிவின் உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்துள்ளது. எல்லாவற்றையும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களாக கருதியதால் வாம சமயத்தில் சக்திவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

வாம என்றால் குள்ளமான, குறுகிய என்று பொருள். இந்த சமயம் வாழ்க்கைக்கு தேவையானதை பெறுவதற்கும், முக்தி அடைவதற்குமான குள்ளத்தனமான வழிகளை காட்டுவதால் வாம வழிமுறை என்று அதாவது வாமாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆச்சாரம் என்றால் ஒழுங்கு அல்லது வழிமுறை என்று பொருள். வாமாச்சாரம் என்றால் குள்ளத்தனமான வழிமுறை என்று பொருள். நாம் குறுக்குவழி, தந்திரமான வழிமுறை என்று கூறுவது போன்ற பொருளில் வரும். அதனால்தான் வாமாசாசர ஆகமங்களை; ஆகமங்கள் என்று கூறாமல், தந்திரங்கள் என்று கூறுவர்.

எமது வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் சக்திகளை அழிப்பதன் மூலமும் அவற்றின் தேவைகளை திருப்திப் படுத்துவதன் மூலமும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று வாமாச்சாரம் கூறுகிறது.

எமது ஆன்மாவை சூழ எமது உடல் உட்பட ஐந்து வகையான உடல்கள் உள்ளன என்று இந்து தத்துவங்கள் விளக்குகிறன. அதனை பஞ்ச கோசங்கள் என்று கூறுவர். வாழ்வை இடை நடுவில் முடித்துக் கொண்டவர்களது ஆன்மாக்கள் மரணத்தின் பின்னர் ஏனைய நான்கு வகையான உடல்களுடனும் அலையும் என்றும், அவை தாம் அனுபவிக்க விரும்பியவற்றை வேறுநபர்கள் மூலம் அனுபவிக்க முனையும் என்றும் கூறுகின்றனர்.

நல்லவர்கள் இறந்தால் மற்றவர்கள் மூலம் நல்லவற்றை செய்ய முயற்சிப்பார்கள். தீயவர்கள் இறந்தால் மற்றவர்கள் மூலம் தீயவற்றை செய்யவே முயற்சிப்பார்கள்.

நல்லவர்களுடைய ஆன்மாக்கள் தெய்வங்களாக காத்துநின்று தீயவர்களுடைய சக்திகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்பதும், அந்த தீய சக்திகள் கட்டுப்பாட்டை மீறி செல்லாத வகையில் அவற்றுக்கு தேவையானவற்றை ஒரு கால இடைவெளியில் கொடுப்பது என்பதும் வாமாச்சார வழிமுறையாகும்.

வேள்வி செய்து மடைவைத்தல், கள்ளு- சாராயம் என்பவற்றை படைத்தல் எல்லாம் தீய சக்திகளை திருப்திப் படுத்துவதற்கான வழிமுறையாக வாமாச்சாரம் பின்பற்றுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் தெய்வங்களாக நின்று காவல் செய்யும் நல்ல ஆத்மாக்களின் கட்டுப்பாட்டை மீறி அந்த தீய சக்திகள் மற்றவர்கள் மூலம் தமது விருப்பங்களை நிறைவேற்ற முனையும் என்பது வாமாச்சாரிகளது வாதம்.

இவ்வாறு பலியிடுதல், கள்ளு, சாராயம் படைத்தல் முதலியவற்றை நிறுத்தினால் தீய சக்திகள் கொலை, கொள்ளை, குடிவெறி எண்ணங்களை மக்களிடையே உண்டாக்கி சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்கும் என்றும், தீய செயல்கள் சமூகத்தில் தலைவிரித்து ஆடும் என்றும் வாமாச்சாரிகள் கூறுகின்றனர்.

பலியிட்டு நிலத்தில் இரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால்; கொலைகள்- தற்கொலைகளும், வன்புணர்வும் தலைவிரித்து ஆடும் என்றும், 

மடையும், படையலும் நிறுத்தப்பட்டால் பாலியல் ஒழுக்க கேடுகள், போதைப்பாவனை என்பவற்றுடன் வெறிப்பிடித்த அறிவற்ற சமூகம் ஒன்று உருவாகும் என்றும் வாமாச்சாரம் கூறுகிறது.

காத்தல் என்பதையே வாமாச்சாரம் முதன்மையான வழிமுறையாக கொள்கிறது. அதனால் சிவனை வாமதேவன் என்னும் வடிவில் காக்கும் கடவுளாகவே வணங்குகிறார்கள். காவல் தெய்வங்கள் என்பவை எல்லாம் சக்திகளை காப்பதற்காக சிவனிடம் இருந்து தோன்றியவை என்பதும் இந்த வாமாச்சாரத்தின் நம்பிக்கையாகும்.

கபாலிகம், பைரவம் போன்ற சைவ பிரிவுகள் இதேபோன்று பலியிடுதல் படையல் வைத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினாலும், அவையும் வாமாச்சார வழிமுறை என்று குறிப்பிடும் வகையில் வாமாச்சார வழிமுறைகள் மிகவும் பிரசித்தமானவை.

தீய சக்திகளை கட்டுப்படுத்தி, அவற்றின் பாதிப்பு இல்லாமல் நல்வாழ்வை வாழ்ந்தால் அனைவரும் முக்தியை அடையலாம் என்பது வாம சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

பின்னாளில் உருவான சைவத்தின் மந்திர மார்க்க பிரிவுகள் சைவ ஆச்சாரம் என்று புதிய ஆச்சாரம் ஒன்றை உருவாக்கியிருந்தாலும், தேவையின் பொருட்டு வாமாச்சார வழிமுறைகளையும் பின்பற்றியே வந்துள்ளது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -34



Monday, June 19, 2023

மாவிரதம் எனும் காளாமுகம்

சைவ சித்தாந்த வாதிகளால் அகப்புறச் சமயம் என்று வகுக்கப்படும் சமயங்களில் மாவிரதமும் ஒன்று.

சைவத்தின் இருபெரும் பிரிவுகளில் ஒன்றான ஆதி மார்க்கத்தைச் சேர்ந்த ஒரு சமய பிரிவாகும். மற்றைய பெரும் பிரிவு மந்திரமார்க்கம் எனப்படும்.

இவர்கள் மாவிரதம் எனும் வாழ்வையே விரதமாக மேற்கொள்ளும் வழிமுறையை கொள்வதால் மாவிரதிகள் என்று அழைக்கப்பட்டார்கள் . பிறவித் தொடர்ச்சியை அறுத்து இறைவனை அடைவதற்கு வாழ்வையே கடினமான விரதமாக அனுட்டிக்கவேண்டும் என்பது மகாவிரதிகளது வாதம். உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்வது இறைவனை அடைவதற்கு அவசியம் என்றும், அதற்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையே தேவை என்பதும் மாவிரதிகளின் நம்பிக்கை.

தவம் போன்ற வாழ்க்கை முறையால் அறியாமை இருள் நீங்கி முகத்தில் ஞான ஒளியுடன் காணப்பட்டதால் காளாமுகர்கள் என்றும் இந்த மகாவிரதிகள் அழைக்கப்பட்டனர். 'காளா' என்றால் இருள் நீங்கிய , இருளற்ற, ஒளிபொருந்திய என்று பொருள்படும்.

காளமுகர், காளாமுகர் என்ற பெயர் குழப்பம் காரணமாக பிற்காலத்தில் மகாவிரதிகள் என்றே காளாமுகர்கள் அடையாளப்படுத்தப் படுகின்றனர். காளமுகர்கள் என்பவர்கள் முகத்தில் கருஞ்சாம்பலை, கருமையை பூசும் ஒரு குழுவினரைக் குறிப்பதாகும். 'காள' என்றால் கரிய என்றும், 'காளா' என்றால் இருளற்ற என்றும் பொருள் வேறுபாடு உடைய இரு வார்த்தைகளாகும்.

காளாமுகம் என்பது ஆதி மார்க்க சைவத்தின் முதற் பிரிவான பாசுபத சைவத்தில் இருந்து கிளைத்த ஒரு சமய பிரிவென்று கூறப்படுகிறது.

வேதாந்த வழிமுறைகளில் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்ட சமய பிரிவாக இது அறியப்படுகிறது. 

பாசுபதத்தை முறைப்படுத்திய லகுலீசரின் வழிமுறைகள் மாவிரதிகளிடம் செல்வாக்கு செலுத்தியதால் லாகுலர் என்றும், வாழ்விற்கு பிரமாணங்களை வகுத்து வாழ்ந்தவர்கள் என்பதால் பிரமாணியர் என்றும் காளாமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இறைவன் அவதாரங்களை எடுப்பார், கடவுளர் பலர் உள்ளனர் போன்ற நம்பிக்கைகள் காரணமாக சைவ சித்தாந்த வாதிகள் அகப்புறச் சமயம் என்று காளாமுகத்தைக் குறிப்பிடுகின்றனர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -33



ஏகான்மவாதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறச் சமயங்கள் என்று வகுக்கப்படும் சமயங்களில் ஏகான்மவாதமும் ஒன்று.

இவர்கள் ஆன்மாக்கள் என்று பலவாக கூறாமல், ஆன்மா என்பது ஒன்றே என்னும் நம்பிக்கை உடையவர்கள்.

(பரமாத்மா)ஆத்மா என்பது ஒன்றே என்றும், அதுவே பலவாறாக தோன்றி நிற்கிறது என்பதும் இவர்களது வாதம். 

இந்த சமய பிரிவிலும் நான்கு விதமான உட்பிரிவுகள் உள்ளன. அந்த ஒரு ஆன்மா எப்படிப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டவை அந்த நான்கு பிரிவுகளுமாகும்.

1 பரிணாம வாதம் 
2 கிரீடாப்பிரம வாதம் 
3 மாயா வாதம் 
4 சத்தப்பிரமம்

பரிணாம வாதம் என்பது பிரம்மம் என்ற ஒரு ஆன்மாவே உலகங்களாக உயிர்களாக என்று பரிணமித்து நிற்கிறது என்னும் வாதமாகும். பரிணாமம் என்றால் ஒன்று இன்னொன்றாக சிறப்புற்று மாறுதல், வளர்ச்சியடைதல் என்று பொருள். 

பிரம்மமே உயிர்களாகவும் உலகங்களாகவும் தோன்றி நின்று ஒரு விளையாட்டை விளையாடுகிறது என்பது கீரீடாப்பிரம்ம வாதமாகும். கீரீடாபிரம்மம் என்றால் விளையாடும் பிரம்மம் என்பது பொருள். தோன்றுதல் மறைதல் என்பவை ஒரு விளையாட்டு என்கிறார்கள் இவர்கள்.

மாயை என்றால் ஒன்று இன்னொன்றாக தோன்றுவது, நிலையற்று இருப்பது என்று பொருள். இந்த உலகம் உயிர்கள் அனைத்தும் நிலையற்றவை, மாறிக்கொண்டே இருக்கும் மாயை அவை. நிரந்தரமான ஒரு ஆன்மாவிற்குள் நடக்கும் மாயா மாற்றங்களே அனைத்தும் என்பது மாயாவாதமாகும்.

சப்தப்பிரம்மம் என்றால் சப்தமே பிரம்மம் என்ற வாதம். சப்தம் என்றால் ஒரு அதிர்வு நிலை. நாதம் என்பதும் அதுவே. சப்த நிலை மாற்றங்களே உலகமாக உயிர்களாக தோன்றி நிற்கிறது என்பது, அல்லது உலகமாக உயிர்களாக தோன்றி நிற்பதற்கு காரணம் சப்த மாற்றமே என்பது சத்தப்பிரம்ம வாதமாகும்.

பிரம்மத்தை நாதவடிவம் என்பதும், இறைவனை நாதன் என்பதும் இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

பஞ்ச பூதங்களை வகுக்கும் போது நாதம் என்ற ஒற்றை தன்மையுடைய ஆகாயமே காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று மாறுவதை வேதாந்த சித்தாந்த தத்துவங்கள் விளக்குகிறது. பஞ்சீகரணம் என்பார்கள் அதை. அந்த அடிப்படையில் பார்த்தாலும் நாதம் என்பதே மூலமானதும், முதன்மையானதுமாக உள்ளது.

சைவத்திலும் நாத சைவம் என்பது ஒரு தனிப்பெரும் பிரிவாகவே உள்ளது. சிவனை நாத வடிவமாக கருதுபவர்கள் அவர்கள். சித்தர்கள் என்று நாம் இன்று கூறுபவர்கள் பலர் அந்த நாதசைவ மரபினில் வந்தவர்களே. 

அவர்கள் சிவனை நாதன் என்றும், வெட்டவெளி என்றும் விழித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாத சைவம் என்பது ஏகான்மவாதம் கிடையாது. 

சாங்கியம் கூறும் பரிணாமவாதமும் ஏகான்மவாதம் கூறும் பரிணாம வாதமும் வேறுபட்டது. சாங்கியம் ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சி பற்றி பேசுகிறது. ஏகான்மவாதம் ஒரு ஆன்மாவின் பரிணாம மாற்றத்தில் தோன்றுவதே உலகமும் உயிர்களும் என்கிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -32



Thursday, June 15, 2023

வைணவம் எனப்படும் பஞ்சராத்திரம்

சைவ சித்தாந்த வாதிகள் புறச் சமயம் என்று வகைப்படுத்தும் பிரிவில் பஞ்சராத்திரமும் ஒன்று.

புறச் சமயங்களில் ஒன்றான இது இன்று வைணவம் என்று அறியப்படுகிறது. 

இவர்கள் தனியான கடவுள் என்பதையும், மாயை என்பதையும் ஏற்பதில்லை. ஆன்மா பரமான்மா என்னும் இரண்டும் ஒன்றே என்னும் நம்பிக்கை உடையவர்கள். அனைத்து ஆன்மாக்களும் சேர்ந்தது பரமாத்மா என்னும் நம்பிக்கையும் இவர்களிடம் உள்ளது.

பரமாத்மாவின் ஒரு அங்கம்தான் ஆத்மா என்பது இவர்களது நம்பிக்கை. இவர்கள் உலகம் முழுவதிலும் உள்ளவை மாயை கிடையாது உண்மை என்று நம்புகின்றனர். பரமாத்மா ஆத்மாவாக அவதாரம் எடுக்கும் என்று நம்புகின்றனர். அனைத்தும் பரமாத்மாவின் படைப்பு என்பதும் அவை பரமாத்மாவால் காக்கப்படும் என்பதும் இவர்களது வாதம்.

இவர்களது ஆத்மா பரமாத்மா இரண்டும் ஒரே போன்றவை, பரமாத்மாவின் அங்கம்தான் ஆத்மா; என்பது சமண நம்பிக்கையை ஒத்தது. உலகில் உள்ள அனைத்தும் மாயை கிடையாது; உண்மை என்பது உலகாயதர்களின் நம்பிக்கையை ஒத்தது. இவர்கள் அவதாரங்கள் என்று வணங்குபவை பூமியில் அவதரித்த உயிர்கள் என்று சொல்லியே வணங்கப்படுகின்றன. தனியான கடவுள் என்பதை மறுத்து பூமியில் பிறந்து இறந்தவர்களை தெய்வங்களாக வணங்குவதும் சமண நம்பிக்கையை ஒத்ததாகவே காணப்படுகிறது.

ஆன்மா மட்டுமல்ல ஜடப்பொருளும் பரமாத்மாவின் அங்கம்தான் என்பது இவர்களது வாதம். 

இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயையால் ஆனவை என்றும், அதற்கு அதிபதி மாயவன் என்றும் சைவர்கள் மரபுவழி நம்பி வழிபட்டு வந்தார்கள். உலக வாழ்விற்கு மாயை இன்றியமையாத ஒன்று என்பதால் உலகியல் இன்பங்களை வேண்டி மாயவனை வழிபடுவதும் மரபாக இருந்துள்ளது. 

உயர் ஞானத்தை முக்தி நிலையை வேண்டுபவர்கள் சிவவழிபாடு செய்ய வேண்டும் என்பதும், உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை வழிபடுபவது என்பதும் மரபாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமண மதங்கள் சைவத்தால் வீழ்த்தப்பட்ட காலத்தில் வைணவம் என்பது உருப்பெற்று வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.

ஆன்மீக புரிதலின்றி சமண மதங்களை ஏற்றவர்களை தத்துவார்த்தமாக சைவத்தில் மீளிணைப்பது சவாலாக இருந்தது. கீழ் நிலை மக்கள் வழிபாடு, பக்தி, வேண்டுதல் என்ற நிலைகளைக் கடந்து ஆன்மீக தத்துவங்களை புரிந்து கொள்ளும் வகையில் இருக்க மாட்டார்கள். அவர்களை அரவணைக்கும் வகையில் அக்காலத்தில் வைணவம் செயற்பட்டது. 

கீழ்நிலை மக்களை நீங்கள் திருமாலின்-திருமகளின் குலங்கள் என்று "திருக்குலம்" என்று கூறி தம்பக்கம் அரவணைத்துக் கொண்டது. பிற்காலத்தில் ஹரிஜனம் அதாவது ஹரியின் மக்கள் என்று கீழ் நிலை மக்கள் அழைக்கப்படுவதற்கும் அந்த திருக்குலம் என்பதே மூலமாக இருந்துள்ளது.

ஏனைய சமய பிரிவுகளை போலவே இந்த பஞ்சராத்திகளும், பிற்காலத்தில் பல பிரிவுகளாக பிரித்து சென்றனர். 

மத்வரின் துவைதம், 
ராமானுஜரின் விஷிட்டாத்வைதம் என்பவை பஞ்சாராத்திகளிடம் உருவான தத்துவ பிரிவுகளாகும். 

மத்வரின் துவைதம் ஆன்மா, பரமாத்மா இரண்டும் வேறு என்று சொன்னாலும் பரமாத்மா என்பதும் ஜடந்துடன் கூடிய ஆன்மாவை ஒத்த ஒன்றாகவும், ஆன்மாவை கட்டுப்படுத்தும் ஒன்றாகவும் குறிக்கப்படுகிறது. 

பரமாத்மா என்பது சுதந்திரமான கட்டுப்பாடற்ற ஆன்மா என்பதும், ஆன்மாக்கள் என்பவை சுதந்திரமான பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதுமே துவைத பகுப்பாகும்.

ராமானுஜரின் விஷிட்டாத்வைதம் என்பது விஷேடமான அத்வைதம் எனப்படுகிறது. அதுவும் பரமாத்மாவின் அங்கம்தான் ஆத்மா என்பதாகவே தனது கோட்பாட்டை விளக்குகிறது. கடலும் கடலில் உள்ள ஒரு நீர்த்துளியும் என்பதாகவே பரமாத்மாவையும் ஆத்மாவையும் விளக்குகிறது. நீர்த்துளிகளால் ஆனதுதான் கடல்  ஆனால் நீர்த்துளி கடலல்ல என்ற வகையிலான விளக்கமே விஷிஷ்டாத்வைதம் என்பது.

ஆக இதுவும் ஆன்மாக்கள் என்பவை பரமாத்மாவின் அங்கம் என்பதான வாதமாகவே கருதப்படுகிறது. 

எது எப்படி இருந்தாலும் ஆன்மீகம், ஞானம் என்பதை விடுத்து ஆசைகள் தேவைகள் என்பவற்றை நிறைவேற்றும் நோக்கில் வழிபடும் கீழ்நிலை பக்தர்களுக்கு பஞ்சராத்திரம் ஒரு சிறந்த வாய்ப்பாகவே இருந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் வங்கத்தில் உருவான கௌடிய வைணவம் அல்லது சைத்தன்ய வைணவம் என்னும் பிரிவு மாயையை பற்றியும், மாயையில் இருந்து விடுபடுவது பற்றியும் கூட பேசுகின்றது. இது அவர்களின் ஆன்மீக சிந்தனைகளில் உருவான மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த பிரிவு ஹரே கிருஷ்ணா, இஸ்கான் என்ற பெயர்களால் அறியப்படுகிறது. 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -31



Tuesday, June 13, 2023

யோகம் /யோகசமயம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறச் சமயம் என்னும் பிரிவில் இதுவும் ஒன்று.

யோக வழிமுறையின் ஊடாக உயிர்கள் பேரின்ப நிலையை அடைய முடியும் என்பது இவர்களது வாதம். யோக வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் வாழும் போதே பேரின்பத்தை அனுபவிக்கலாம் என்பதும் அதுதான் சமாதி நிலை என்பதும் இவர்களது நம்பிக்கை. 

இந்த யோக வழிமுறையைப் பின்பற்றுபவர்களும் தனியான கடவுள் என்ற ஒன்றை ஏற்பதில்லை. ஏனைய புறச் சமயங்கள் போல பிரம்மம் என்பதை ஏற்கின்றனர். ஒரு உயிர் யோக வழிமுறையைப் பின்பற்றி அனுபவிக்கும் இன்ப நிலையே பிரம்மநிலை என்று கருதுகின்றனர்.

யோக வழிமுறைகளை எட்டு அங்கங்களாக பிரித்து அட்டாங்க யோகம் என்று குறிப்பிடுகின்றனர்.

இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
ப்ரத்யாஹரம்
தாரானை
தியானம்
சமாதி
என்பவையே யோகத்தின் எட்டு அங்கங்களாக குறிப்பிடப்படுகிறது.

இந்த அட்டாங்க யோகத்தின் மூலமாக பதினெட்டு வகையான சித்திகள் கிட்டும் என்பது யோக சமயவாதிகளின் வாதம். உருவை சிறிதாக மாற்றுதல், பெரிதாக மாற்றுதல், காற்றுப் போல மாறுதல், கூடுவிட்டு கூடுபாய்தல், பஞ்சபூதங்களை கட்டுப்படுத்துதல், தேவர்களை கட்டுப்படுத்துதல், மரணத்தை தீர்மானித்தல், எல்லாவற்றையும் பார்க்கும் ஆற்றல், மனவேகத்தில் பயணித்தல், நிர்குண பிரம்ம நிலையை அடைதல் என்பது போன்ற பதினெட்டு சித்திநிலைகளைப்பற்றி பேசுகிறார்கள்.

யோகம் என்பதை
கர்மயோகம்
பக்தியோகம்
ஞானயோகம்
என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

இந்த யோக பிரிவுகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் நூலாகவே கீதை என்பதை கருதவேண்டும். மஹாபாரதம் எனும் பெருங்கதையுடன் இணைக்கப்பட்டும், வேறு சமய தத்துவ பிரிவுகளின் கீழ் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் கீதை என்பது முற்று முழுதாக யோகத்தை விளக்கும் நூலாகவே உள்ளது.

இந்த யோக சமயம் கூறும் சித்திநிலைகளை எட்டுகிறார்களா இல்லையா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்தாலும் ஆன்மீக வழிமுறைகளில் இந்த சமயத்தின் செல்வாக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகவே உள்ளது 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -30



Thursday, June 8, 2023

மீமாம்சம் எனப்படும் வேதமதம்

சைவ சித்தாந்த வாதிகள் புறச் சமயம் என்று வகைப்படுத்தும் பிரிவில் மீமாம்சமும் ஒன்று.

இவர்களும் தனியான கடவுள் என்ற ஒன்றை ஏற்பதில்லை. கடவுள் வழிபாடு என்பதும் இவர்களிடம் கிடையாது. 

இவர்கள் ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் வேதங்களை முதன்மையாக போற்றி பின்பற்றுபவர்கள். தேவர்களை நோக்கி செய்யும் யாகங்களும், வேள்விகளும் தமக்கு வேண்டியவற்றை கொடுக்கிறது என்று நம்பக்கூடியவர்கள். தாம் செய்யும் யாகங்களும், வேள்விகளும், கிரியைகளுமே பலன்களைத் தரக்கூடியவை என்றும் வேதங்கள் மட்டுமே முதன்மையானவை என்றும் நம்பக்கூடியவர்கள். 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை, நம்பிக்கை இரண்டையும், மீமாம்சகர்கள் வேதநூல்களுக்கு கொடுப்பார்கள். இவர்கள் சிலை வழிபாட்டை மறுப்பவர்கள்.

வேத நூல்களைத் தவிர்த்து வேறு நூல்களையும் இவர்கள் ஏற்பது கிடையாது.

சந்தியா வந்தனம் எனும் சூரிய வழிபாடு,

யாகங்கள்,

வேள்விகள் எனப்படும் பலி கொடுத்தல்,

யக்ஞங்கள் எனப்படும் வேதம் ஓதுதல்,

அக்னி ஹோத்திரம் என்னும் அணையா நெருப்பு வழிபாடு,

பூஜை புனஸ்காரம்,

விரதங்கள் என்பவை சொர்க்கத்தை அடைவதற்காக வழியாகும் என்பது இவர்களது நம்பிக்கை.

ஏனைய சமய வாதங்களை போன்றே பிற்காலத்தில் இவர்களிலும் வேறு பிரிவினர் உருவானார்கள். அதனால் மீமாம்சகர்களை பூர்வ மீமாம்சகர் என்றும் பின்னர் உருவான பிரிவினரை உத்தர மீமாம்சகர் என்றும் அழைப்பர்.


உத்தரமீமாம்சம் வேதாந்தம்

இது வேத நூல்களின் கருத்துக்களின் முடிவை அடிப்படையாகக் கொண்ட பிரிவாகும். வேத நூல்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் அந்த நூல்களின் கருக்துக்களை விளக்கும் பகுதியாக விளங்கும் உபநிடதங்களையும், பிரம்ம சூத்திரம் முதலான வேத விளக்கங்களையும்  முதன்மையாக கொண்டவர்கள் இவர்கள்.

வேதங்களுக்கு ஆதாரமாக இருப்பது கிரியைகள் அல்ல அதன் கருத்துக்கள் என்பது இவர்களது வாதம். அதனால் உத்தர மீமாம்சகர் என்றும், வேதத்தின் முடிவைப் பற்றி பேசுவதால் வேதாந்திகள் என்றும்  அழைக்கப்படுகின்றனர்.(உத்தரம் என்றால் ஆதாரமாக இருப்பது என்று பொருள்)

பூர்வ மீமாம்சகர்கள் யாகம், பலி, யக்ஞங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க, உத்தர மீமாம்சகர் ஞான கருத்துக்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்கின்றனர்.

பூர்வ மீமாம்சகர்கள் தேவர்கள் என்பதைத் தாண்டி சிந்திக்காத போது, வேதாந்திகள் எனப்படும் உத்தர மீமாம்சகர் பிரம்மம் என்ற ஒன்றை பற்றி பேசுகின்றனர்.

இவர்களது பிரம்மம் என்பதும் தனியான கடவுள் கிடையாது. ஜீவாத்மா பரமாத்மா என்ற ஆன்மாவை ஒத்த பெரிய ஆன்மா என்ற நம்பிக்கையே இவர்களது பிரம்மம் என்பது, பிரம்மத்தின் ஆன்மா பிரம்மம் என்பது இவர்களது நம்பிக்கை. ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் ஒன்றே என்பது இவர்களது வாதம். 

ஞான மார்க்கம் ஒன்றே சொர்க்கத்தை அடைவதற்காக வழியாகும் என்று இவர்கள் நம்புகின்றனர். 

வேதாந்திகள் உருவ வழிபாட்டையும் மறுப்பதில்லை. பிரம்மம் என்பதை ஈஸ்வரன் என்றும் வணங்குகிறார்கள். அதேநேரம் பூர்வ மீமாம்சகர்கள் பின்பற்றும் யாகங்கள், வேள்விகள், யக்ஞங்கள் என்பவற்றையும் மறுதலிப்பதில்லை. அதையும் பின்பற்றுகிறார்கள்.

வேதாந்திகள் ஈஸ்வரன் என்று குறிப்பிடுவது சைவ சித்தாந்தம் கடவுள் என்று கூறும் ஈஸ்வரன் கிடையாது. அவர்கள் பிரம்மம் என்பதையே ஈஸ்வரன் என்றும் வணங்குகிறார்கள். 

இவர்கள் பிரம்மம் என்பதை நிர்குண பிரம்மம் என்கிறார்கள். பிரம்மம் எந்த குணங்களும் அற்ற ஒன்று என்பது இவர்களது வாதம். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -29



Tuesday, June 6, 2023

சைவம் என்றால் என்ன பொருள்?

இது சமயத்திற்கான விளக்கம் இல்லை. அந்த சொல்லின் பொருள் என்ன என்பதே நோக்கம்.

சை - அசை என்ற இரண்டு சொற்களில் இருந்து அதன் பொருளை ஆராயலாம். எதிரான பதத்திற்கு சொல்லின் முன்னால் அகரம் சேர்ப்பது வடமொழி இயல்பு. அசை என்பது சை என்பதன் எதிர்ப்பதம் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

அசை என்றால் நகர்த்தல், நகர்தல், சலனப்படுதல், சலனப்படுத்துதல், ஒன்றின் நிலையை மாற்றுதல், மாறிக்கொண்டிருப்பது, நிலையில்லாது இருப்பது, தூண்டலுக்கு உட்படுவது, தன்னளவில் நிலையில்லாதது, தன்வசத்தில் இல்லாதது என்று பலவாறு பொருள் தரக்கூடியது அந்த வார்த்தை.

அப்படியானால் அசை என்ற இந்த வார்த்தைக்கு எதிரான பொருளைத் தரும் சை என்ற வேர்ச்சொல்லின் பொருளை நோக்குங்கள். நகர்த்த முடியாதது, நகராதது, சலனப்படாதது, சலனப்படுத்தாதது, ஒன்றின் நிலையை மாற்றாதது, தூண்டலுக்கு உட்படாதது, நிலையாக இருப்பது, தன்வசத்தில் இருப்பது என்றெல்லாம் பொருள் வருகிறது அல்லவா.

இப்போது சைவம், சைவர்கள் என்றால் யார் என்ற ஒரு புதிய புரிதல் வருகிறதா?

இறைவன் என்பவர் தன்வசத்தில் இருப்பவர், மாற்றங்கள் இல்லாதவர், சலனங்கள் அற்றவர், மற்றவர்களுக்கு சலனத்தை உண்டுபண்ணாதவர், ஏதொன்றையும் மாற்றாதவர், தூண்டலுக்கு உட்படாதவர், நிலையாக இருப்பவர், தன்வசத்தில் இருப்பவர் என்று ஏற்கும் சமயவாதமே சைவம் எனப்படுகிறது. அந்த வாதத்தை ஏற்பவர்களே சைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

சைவ தத்துவங்கள் இறைவனுக்காக குணங்கள் என்று இவற்றைத் தான் வரையறை செய்கிறது. 

ஆசை, சைத்தன்யம், இசை, விசை, பசை என்று வரும் சொற்கள் அனைத்திலும் சை என்பதன் பொருள் நிலையாக இருப்பது, தன்வசத்தில் இருப்பது என்பதுதான்.

அசையும் உணவுகள், அசையாத உணவுகள் என்பதாகவே அசைவ உணவு, சைவ உணவு என்ற பாகுபாடு உள்ளதேயன்றி உயிருள்ள உணவு, உயிரற்ற உணவு என்ற பொருளில் கிடையாது.

அசையும் உணவுகள் எமது உடலுக்குள் செல்லும் போது எம் சிந்தனை செயல்களில் அசைவினை உண்டுபண்ணும், மனம் செயல்வசத்தில் இல்லாமல், சிந்தனை சிதறலை உண்டுபண்ணும் என்ற நம்பிக்கையே சைவர்கள் சிலர் சைவ உணவை உண்ண காரணமாகும். யோக நடைமுறைகளை பின்பற்றியவர்கள், நுட்பமான வேலைகளை செய்தவர்கள், நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிபுணர்கள் பலர் சைவ உணவுகளை உட்கொண்டார்கள். அதுகூட கட்டாயம் என்பதாக இல்லை. உட்கொள்ளும் உணவு மனத்தை பாதிக்காத வகையில் உளவுறுதி கொண்டோர்க்கு அந்த தவிர்ப்பும் தேவைப்படவில்லை.

சைவ தத்துவங்கள் புல் பூண்டு மண் மலை கல் என்று எல்லாவற்றினுள்ளும் உயிர் உள்ளதை விளக்குகிறது. சைவர்கள் சைவ உணவு உண்பது புலால் மறுப்பினால் அல்ல. உயிர்க்கொலை தவறென்று குற்ற உணர்ச்சியை உண்டுபண்ணுவது சமண மதங்கள் செய்த சூழ்ச்சி.

அசைவம் உண்பது என்பது குற்ற உணர்ச்சிக்கு உரியது கிடையாது. ஏனென்றால் உயிர் ஒருபோதும் அழிவதில்லை. உயிரை ஒருபோதும் கொல்ல முடியாது. எல்லோரும் யோகிகளாகவோ, துறவிகளாகவோ வாழத்தேவையில்லை. அவரவர் தன் தேவை அறிந்து தன் வாழ்வியலை வரைமுறை செய்ய வேண்டும். அதுதான் தர்மம் என்பது.

உடலுழைப்பை நம்பிவாழும் இல்லறத்தான் வாழ்வும், துறவியின் வாழ்வும் ஒன்றல்ல. அறிவுரையும் ஆலோசனையும் வழங்கும் நிபுணர்கள் மனநிலை ஒரு தொழிலாளிக்கும், போர்வீரனுக்கும் தேவையில்லை.

சைவ உணவென்பது சைவ சமயத்தில் கட்டாயமான ஒன்றல்ல. அப்படி என்றால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் மொன்னையாக மாற்றிவிடும். சைவ உணவு உயர்ந்தது அசைவ உணவு தாழ்ந்தது என்பது சைவ வரைமுறை கிடையாது. சைவ தத்துவங்களின் பார்வையில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது.

குற்ற உணர்வும் குறுகிய சிந்தனையும் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -28



Monday, June 5, 2023

பலியிடல் தவறா?

பலியிடுதல் வேள்வி யாருடைய மரபு?

சைவ சித்தாந்த வாதிகளது சமய பகுப்பின் அடிப்படையிலேயே இதனையும் பார்ப்போம்.

சைவ சித்தாந்த வாதிகள் புறப்புறச்சமயம் என்று வகுக்கும் சமண மதங்கள் அனைத்தும் உயிர்ப்பலிகள் தவறு எனும் கொல்லாமை கோட்பாட்டை உடையவை. காரணம் அவர்கள் கடவுள் என்ற ஒன்று தனியாக இல்லை என்றும் உயிர்களே தெய்வங்களாக இருக்கின்றன என்றும் நம்பும் சமயத்தினர். அவர்கள் வணங்கும் தெய்வமே ஒரு உயிராக இருக்கையில் ஒரு உயிரைக் கொல்வது என்பது தெய்வத்தை கொல்வதை ஒத்ததாகும். எனவே உயிர்களை கொல்வதை தவறென்று சமண மதங்கள் அனைத்தும் கூறுகின்றது.

அடுத்து புறச் சமயங்கள். கடவுள், உயிர்கள், சடப்பொருள் என்று தனித்தனியான பொருட்கள் கிடையாது. உயிராக உடலாக என்று இருப்பவை அனைத்தும் கடவுளின் அங்கமே என்னும் கொள்கையினை உடையவை அவை. சாங்கியம், வைணவம், ஏகான்மவாதம் , வேதாந்தம் என்று அனைத்து புறச்சமயிகளும் இதே கோட்பாட்டினை உடையவர்களே. ஆகவே கடவுளின் அங்கமாக விளங்கும் உடலை- உயிரை அழிப்பதையோ, அதனை இறைவனுக்கு படைப்பதையோ அவை ஏற்பதில்லை.

எஞ்சி இருப்பவை அக புற சைவங்கள் மட்டுமே. இந்த இரண்டு சைவ பிரிவினருமே கடவுள், உயிர்கள், சடப்பொருள் என்ற மூன்றும் வேறு வேறானவை என்று ஏற்றுக் கொள்ளும் சமயங்கள்.

உயிர்கள் இறைவனை அடைவதற்கு தடையாக இருப்பது சடப்பொருள் என்னும் மாயையே என்று சைவ பிரிவுகள் அனைத்தும் ஏற்கின்றன.

சைவ கோட்பாடுகளின் அடிப்படையில் உடல் என்பது சடமாயை. உயிரைப் பற்றி நிற்கும் இந்த சடமாயைதான் உயிர்களின் துன்பங்களுக்கும், அவை முக்தி நிலையை அடையாமைக்கும் காரணமாகும் என்கின்றன.

இந்த மாய உடலை அழிப்பது முக்தி நிலைக்கான அடிப்படை என்று சைவம் வலியுறுத்துகிறது. உடல் மீதான பற்றை உயிர்கள் விடவேண்டும், உடலை விட்டு உயிர் நீக்கினால் வருந்தாதே அப்போதுதான் அந்த உயிர் இறைவனை அடைவதற்கு வழி பிறக்கிறது என்பதே சைவத்தின் போதனை.

பிறவி என்பது பெருங்கடல் என்றும் அந்த பிறவிகளை பிறந்து இறந்து கடக்க வேண்டும் என்பதும் சைவத்தின் நம்பிக்கை. சைவத்தில் மட்டுமே ஒரு உயிரைக் கொல்வது கடவுளை கொள்வதாக ஆகாது. ஒரு உயிரைக் கொல்வது கடவுளின் அங்கத்தை சிதைப்பதாக ஆகாது. ஏனென்றால் சைவ தத்துவங்கள் உயிர் தனி, உடல் தனி, கடவுள் தனி என்று தெளிவாக விளக்குகிறது.

கொல்லாமை என்பதும், உயிர் பலி தவறு என்பதும் சைவத்தின் அடிப்படை கிடையாது. அது புறச் சமயங்கள், புறப்புறச் சமயங்களின் நம்பிக்கை சார்ந்தது.

தொலைந்துபோன சமணர்கள் சைவர்கள் என்று வேடம் பூண்டு உயிர்ப்பலி தவறு, வேள்வி தவறு என்று கூச்சலிடுகிறார்கள்.

சைவ ஆலயங்களில் இருக்கும் பலிபீடங்கள் ஆணவம் கன்மம் மாயையை பலியிடும் இடம் என்று பிதற்றுகிறார்கள். கண்ணால் காண முடியாத மலங்களுக்கு கல்லில் பீடம் அமைத்து கொல்லும் அறிவாளிகள் கூட்டம் இந்த சிவவேடம் பூண்ட சமணர்கள்.

பலியிடல் என்பதும் வேள்வி என்பதும் சைவர்கள் மரபு. உடல் எனும் மாயையை அழிப்பதற்கு தயங்கக் கூடாது, உடல் என்னும் மாயையை அழிப்பதே முக்திக்கு அடிப்படை என்று தைரியமூட்டும் செயன்முறை அது. அதற்கான வைராக்கியம் வேண்டும் என்று வைரவராக கடவுளை வணங்குவது சைவர்கள் மரபு.

பாசுபதர்கள், கபாலிகர்கள், காளமுகர்கள், பைரவர்கள் என்று அனைத்து ஆதிசைவ மரபினரும் பலியிடலை வழக்கமாக கொண்டவர்களே. சமணர்கள் சைவர் என்று வேடந்தரித்த பின்னரே பலியிடும் வழக்கம் சைவம் கிடையாது என்று உருட்டுகின்றனர்.

பலியிடலும், வேள்வியும் செய்து வழிபாடும் மக்களே உண்மையான ஆதிசைவ மரபினைச் சேர்ந்தவர்கள்.

பலிபீடத்தில் வைத்து பூசணிக்காயை, எலுமிச்சம் பழத்தை வெட்டுவது சமணர்களுக்காக செய்த சமரசம் அன்றி வேறில்லை. நீங்கள் சமரசம் செய்வது தவறில்லை. ஆனால் ஆதிசைவ மரபை அழிக்க நினைப்பது தவறு. அவ்வாறு பாரம்பரிய மரபை பின்பற்றுபவர்களுக்கு தடை ஏற்படுத்துவது மகாபாவம்.

#சர்வம்_சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம் -27



வற்றாப்பளை கண்ணகை அம்மன்

நாளையே தினம்(05.06.2023 திங்கட்கிழமை) இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை கண்ணகை ஆலயத்தில் வருடாந்திர பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

வருடா வருடம் வைகாசி மாத பௌர்ணமியை அடுத்த திங்கட்கிழமை இப்பொங்கல்விழா சிறப்பாக நடைபெறுகிறது. நாடெங்கிலும் இருந்து பலலட்சம் பக்தர்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இதே காலப்பகுதியில் நாடுமுழுவதும் பல கண்ணகை ஆலயங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. 

இந்த கண்ணகை வழிபாடு இலங்கையை ஆண்ட கஜபாகு மன்னனின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.

கண்ணகை என்பவள் சப்த கன்னியர்களில் ஒருவராகவும், பதினொரு உருத்திரைகளில் ஒருவராகவும், கண்ணகை அம்மன் புராணத்தில் பார்வதிதேவியின் அம்சமாகவும் போற்றி வணங்கப்படுகிறார்.

ஆயிரம் கண்களை உடையவள் என்று இந்திராணியின் வடிவமாகவும் அவள் வர்ணிக்கப்படுகிறாள். பேச்சி அம்மனை ஒத்து கிழவி, ஆச்சி என்று விழிக்கும் வழக்கமும் இங்கே உள்ளதுதான்.

இந்த கண்ணகை வழிபாடு எத்தனையாம் ஆண்டில் எங்கு தொடங்கியது என்று சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் இந்த கண்ணகையின் உருவினை ஒத்த அம்மன் சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகவே உலகம் முழுவதும் இருந்துள்ளமை தொல்லியல் ஆய்வுகள் முலம் வெளிப்பட்டுள்ளது.

 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பத்தேமியாலில் இஸ்தர் என்று வழிபடப்பட்ட மிகப்பெரிய பெண் தெய்வம் இந்த கண்ணகையின் உருவினை ஒத்தே காணப்படுகிறது. 

ஆதே காலப்பகுதியில் சுமேரியர்கள் வணங்கிய இன்னன்னை/ இன்னன்னா என்னும் பெண் தெய்வமும் இதே கண்ணகையின் உருவிலேயே காணப்படுகிறது.

பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளர்கள் கண்டகை என்றே அழைக்கின்றனர். இந்திய பாரம்பரியத்திலும் மகாராணியை தேவி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அவர்கள் மகாராணியை கண்டகை என்று விழித்ததையும் அவ்வாறே கொள்ளலாம்.

சமண மதங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்திலும் கண்ணகை வழிபாடு என்பது சமூக ஆதிக்கம் மிகுந்த ஒன்றாகவே இருந்துள்ளது. கண்ணகையின் வழிபாட்டு முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே அந்த காலத்தில் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளது. 

கண்ணகை என்பவள் கடவுள் அல்ல என்றும், அவள் ஒரு மானிட பெண் என்றும் நம்பவைப்பதற்கு அந்த சமண கதைகள் முயன்றுள்ளன. அதே காலப்பகுதியில் இன்றைய எத்தியோப்பியா முதல் பாகிஸ்தான் வரை எஸ்தர் என்ற பெயரில் பரவலாக வழிபடப்பட்ட கண்ணகையை மானிட பெண்ணாக சித்தரிக்கும் முயற்சியில் கிறித்தவ பைபிள் ஈடுபட்டுள்ளது.

தமிழ் மண்ணில் சிலப்பதிகாரம் என்ற சமண நூலும், மத்திய கிழக்கில் கிறித்தவ பைபிளும் ஒரே போன்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தது. கண்ணகையை மானிட பெண்ணாக மாற்றி தமது மதங்களின் நிலைக்கு தரந்தாழ்த்துவது ஒன்று, அதனூடாக அந்த வழிபாட்டின் சிறப்பை இல்லாமல் செய்வது என்பது இரண்டு. இதுவே இரண்டு கூட்டங்களினதும் வழிமுறையாக இருந்துள்ளது.

இவ்வாறான முயற்சிகளை எல்லாம் தாண்டி கண்ணகை வழிபாடு இலங்கையில் சிறப்பாக நடைபெறுகிறது. வழிபடும் பக்தர்கள் யாரும் இந்த சமண கதைகளையும் அந்த பாத்திரங்களையும் மனதில் கொள்வதில்லை. எல்லாம் வல்ல பராசக்தியின் வடிவமாகவே கண்ணகையை வழிபடுகிறார்கள்.

சூழ்ச்சிகள் ஒருபோதும் வெல்வதில்லை. 

சிறிய குணம் கொண்டவர்களின் சூழ்சிகளுக்குள் அவள் அடங்குவதில்லை. அவள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஆதிபராசக்தியின் அம்சம்.

கண்ணகையை வழிபட்டு எம்மைச் சூழ்ந்திருக்கும் சூழ்ச்சியாளர்களை வெல்வோம்.

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை ஆலயத்தை நோக்கி எமது கால்களும் நடக்கட்டும்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -26







Saturday, June 3, 2023

அருகம்/ ஆருகதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறப்புறச் சமயம் என்னும் வகைப்பாட்டில் வரும் ஒரு சமய பிரிவாகும்.

இது கடவுள் மறுப்பையும், பல்தெய்வ வழிபாட்டையும் கொண்ட பௌத்தம் அல்லாத ஒரு சமயமாகும்.

சீவன், அசீவன் எனும் உயிர்கள், உயிரற்றவை என்னும் பகுப்புடன் பாவம், புண்ணியம், கர்மா,  மறுபிறப்பு, பிறப்பறுத்தல், கர்மவிடுவிப்பு, வீடுபேறு என்பவற்றையும் ஏற்கும் சமய பிரிவாகும்.

கடவுள் என்ற ஒன்றை மறுக்கும் இவர்கள் வீடுபேறு அடைந்தவர்களை தெய்வங்கள் என்று வணங்குகிறார்கள். ரிஷபநாதர் முதல் மகாவீரர் வரையான 24 தீர்த்தங்கரர்களையும் இவ்வாறு தெய்வம் என்று பின்பற்றி வணங்குகிறார்கள். 

தீர்த்தங்கரர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முதல் பலலட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். இவ்வாறான தீர்த்தங்கரர்கள் எப்போதும் தமக்கு அருகில் இருந்து வீடுபேற்றை அடைய வழிகாட்டுகிறார்கள் என்றும், அதனால் அவர்களை அருகர்கள் என்றும் அழைக்கிறார்கள். அருகர்களை வழிபடுபவர்கள் என்பதால் அருகதர்கள் எனப்படுகிறார்கள்.

இவர்களில் ஆடை அணியாத நிர்வாண துறவிகள் கூட்டம், வெள்ளை ஆடை அணியும் துறவிகள் கூட்டம் என்று இரு பிரிவினர் உள்ளனர். திகம்பரர், சுவேதம்பரர் என்று அப்பிரிவினர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்களது ஆலயங்களில் மூலவராகவும் இந்த அருகர்களே உள்ளார்கள். புலன்களை அடக்கி உணர்ச்சிகளை வென்றவர்கள் அருகர்கள் என்று அவர்களை வடமொழியில் செயனா என்று அழைக்கின்றார்கள். செயனாக்களை பின்பற்றும் மதம் என்பதால் செயனர்கள் என்றும் இன்று சைனர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சமண மதங்கள் என்று குறிப்பிடப்படும் மதங்களில் இந்த அருக மதம் பிரதானமானது. மற்றையவை சாவகம் எனப்படும் உலகாயதமும்,  பௌத்தமும் ஆகும்.

இந்த சமண மதங்கள் கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களை தமது மதங்களுக்கு மாற்றுவதற்காக இந்து கடவுளர்களை சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள் என்று கூறி தமது மதங்களுக்குள் உள்ளீர்த்துள்ளார்கள். அவ்வாறு தெய்வம் என்று கூறி உள்ளீர்த்த கடவுள்களின் தன்மையை மறைப்பதற்காக அந்த கடவுள்கள் பற்றிய புதிய கதைகளை உருவாக்கி, அந்த கதைகளில் ஒரு மனித கதாபாத்திரமாக அந்த கடவுளரை மாற்றினார்கள். ஏனென்றால் சமண மத நம்பிக்கைகள் கடவுள் என்ற ஒன்றை ஏற்பதில்லை. அவர்களது மத நம்பிக்கையின் படி வாழ்ந்த, இறந்த உயிர்களையே தெய்வங்கள் என்று கூறுகிறார்கள். 

சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்னும் இந்து கடவுளை மானிட பெண்ணாக சித்தரித்தது போல அவர்கள் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு இந்து  கடவுளை மனிதர்களாக மாற்றினார்கள். இதிகாசங்கள்,புராணங்கள் என்று குறிப்பிடப்படும் நூல்கள் பலவும் இவர்களது ஆதிக்க காலத்தில் எழுதப்பட்ட அல்லது திரித்து எழுதப்பட்ட நூல்களே. மௌரியர்களின் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறுபட்ட புனைவு, திரிபு நூல்கள் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

இந்து கடவுளர்களை மனிதர்களாக மாற்றுதல், தமது மனித தெய்வங்களை இந்து ஆலயங்கள் போன்ற அமைப்பினுள் வைத்தல் போன்ற பல்வேறு பித்தலாட்டங்களையும், கோபுரம், பலிபீடம், கொடிமரம் அமைத்தல் தேர் இழுத்தல் என்று அத்தனை அடையாளத் திருட்டுக்களையும் இவர்கள் செய்திருக்கிறார்கள். 

தமிழ் சங்கம் என்ற பெயரில் அமைப்பினை நிறுவி அதனூடாக மதம் பரப்பும் பித்தலாட்ட வேலையையும் செய்துள்ளார்கள்.

சமண மதங்கள் என்பவை ஆன்மீகம் என்பது இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றும், கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனமாகவே இருந்துள்ளது. ஒரு மன்னனே துறவு வேடம் பூண்டு 12000 துறவு வேடதாரிகளுடன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வந்தான் என்பதும், இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு 12000 துறவு வேடம் தரித்தவர்கள் என்பதும் எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பதும், அவர்களின் அதிகாரத்தை கைப்பற்றும் அமைப்பு முறைக்கு எடுத்துக்காட்டாகும். 

அவர்கள் தீர்த்தங்கரர்கள் என்று குறிப்பிடப்படும் அனைவரும் மன்னர்கள், மன்னர் குடும்பத்தவராகவே உள்ளார்கள். இது மதத்தின் பெயரால் மக்களை அந்த மன்னர் வம்சத்தை ஏற்கச் செய்யும் ஒரு பொறிமுறையாகவே உள்ளது. ஆண்டவர் என்ற பதமும் இதில் இருந்தே வந்துள்ளது. இந்த தேசத்தை மக்களை ஆண்டவர் என்னும் பொருளிலேயே அந்த பெயர் உள்ளது.

மதத்தின் பெயரால் மக்களை மாற்றி அந்த மக்களைக் கொண்டே அதிகாரத்தை கைப்பற்றுவது, அவ்வாறு கைப்பற்றிய அதிகாரத்தை கொண்டு அதிகார எல்லைகளை விஸ்தரித்து அந்த எல்லைக்குள் தமது மதத்தைப் பரப்புவது என்பதாகவே இவர்களது நடைமுறை இருந்துள்ளது. 

மதம் என்பது அதிகாரத்தை கைப்பற்றும் பரப்பும் ஒரு கருவியாகவும், மக்களிடையே அதிகாரத்தை செலுத்தி ஆட்சி அதிகாரத்தை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாகவுமே இருந்துள்ளது. 

ஆட்சி அதிகாரத்தையும் பித்தலாட்ட நடைமுறைகளையும் பயன்படுத்தி பரப்பப்பட்ட  இவர்களது மதம் மௌரியர்களின் வீழ்ச்சியின் பின் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்தது. இன்று அந்த மதத்தின் பெயரில் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. 

ஆன்மீக சிந்தனைகள் அற்று பரப்பப்படும் மதங்கள் அனைத்தும் இவ்வாறான அரசியல் ஆதிக்க அமைப்புக்களே அன்றி வேறில்லை எனலாம்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -25




சௌத்திராந்திகம்

 சௌத்திராந்திக பௌத்தம்

சைவ சித்தாந்த வாதிகள் புறப்புறச்சமயம் என்று வகுக்கும் சமய பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஹீனயான பௌத்த மதத்தின் உட்பிரிவைச் சேர்ந்தது இது. காட்சி அளவை என்ற ஒற்றை அளவை முறையை மட்டுமே ஏற்கும் சமய வாத பிரிவுகளில் ஒன்றாகும்.

இவர்கள் உலகம் முழுவதும் கணத்திற்கு கணம் மாறுவதை ஏற்கிறார்கள். இந்த உலகத்தில் எதுவும் நிலையாக இல்லை என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு கணத்திலும், அந்த கணநேரத்தில் உள்ள காட்சி நிலைகள் உண்மையானது என்கிறார்கள். உலகில் நாம் காணும் எல்லாம் கணநேர உண்மைகள் என்பது இவர்களது வாதம்.

இவர்கள் பௌத்த மதத்தின் புனித நூலான திரிபிடகத்தை பின்பற்றியவர்கள் என்று அறியப்படுகிறார்கள். 

புத்தரின் போதனைகள், அவர் சொல்லிய மெய்யியல் தத்துவங்கள், அவர் காட்டிய வாழ்வியல் நடைமுறைகள் என்பவையே திரிபிடகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த திரிபிடகத்தை பின்பற்றியவர்கள் ஹீனயான பௌத்த பிரிவு என்றும், புத்தரின் போதனைகளின் வழிநின்று புதிய சிந்தனைகள் தர்க்கங்களை உருவாக்கியவர்கள் மகாயான பௌத்தர்கள் என்றும் வழங்கப்படுகிறார்கள். 

புத்தரின் போதனைகள் நியாயப்படுத்துவதற்காகவே கணநேர உண்மைகள் என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தார்கள். ஹீனயான பௌத்த பிரிவில் எழுந்த ஒரே ஒரு தர்க்க சிந்தனை இது என்று கூட சொல்லலாம்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -23



Thursday, June 1, 2023

உலகாயதம் /சாவகம்

சைவ சித்தாந்தம் வாதிகள் புறப்பறச் சமயம் என்று வகுக்கும் பிரிவுகளில் இதுவும் ஒன்று.

உலகாயதம், பொருள்முதல்வாதம், சாவகம், சார்வகம் என்ற பெயர்களால் இவர்கள் அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை என்றும் இந்த கண்ணால் காணும் உலகமும், அதில் உள்ளவையுமே உண்மை என்று இவர்கள் வாதிக்கிறார்கள்.

ஏனைய கடவுள் மறுப்பு வாதங்களைப் போலவே காட்சி அளவை என்ற ஒற்றை அளவை முறையை மட்டுமே இவர்களும் ஏற்கிறார்கள். கண்ணால் காண முடியவில்லை என்றால் அவ்வாறு ஒன்று இல்லை என்பது இவர்களது வாதம்.

இந்த உலகமும், உலக வாழ்க்கையுமே உண்மையானது என்றும் அதில் வாழ்வதற்காகவும் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகவும் எதையும் செய்யலாம் என்பவர்கள் இவர்கள். வீடு பேறு/ பேரின்பம் என்று ஒன்று கிடையாது உலகத்தில் அனுபவிக்கும் இன்பமே உண்மையான இன்பம் என்பது இவர்களது வாதம். 

நியாயம், தர்மம், ஒழுக்கம் என்பவையெல்லாம் வாழ்வதற்கு தடையாகும் என்பது இவர்களது வாதம். "கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும்" என்னும் வகையில் இவர்களது போதனைகள் இருந்துள்ளது. பகட்டான வாழ்க்கைக்காக கடன்படுவது, தவறான தொழில்கள் செய்வது கூட சரி என்று போதிக்கும் கூட்டம் இது. கோவலன் கதையில் தம் உடலை விற்று வாழும் மாதவியின் சமூகமும் இந்த உலகாயத மரபைப் பின்பற்றியவர்கள்தான். கடவுள், கர்மா எதுவுமில்லை என்று தவறுகளை ஊக்குவிக்கும் ஒரு கூட்டமாகவே இந்த கடவுள் மறுப்புக் கூட்டம் அன்றும் இருந்துள்ளது.

கடவுள் இல்லை, ஆன்மா இல்லை, கர்மா இல்லை, ஒழுக்கம் வரைமுறை எதுவும் இல்லை. இவற்றை எல்லாம் உருவாக்கியவர்கள் திருடர்கள், கோமாளிகள் என்பதாகவே இவர்களது வசைபாடல்கள் இருந்துள்ளது. இவர்கள் அறிவுபூர்வமான எந்த ஒரு வாதத்தையும் செய்தவர்கள் இல்லை, ஏற்றவர்களும் இல்லை. 

கடவுள், ஆன்மா, கர்மா ,ஒழுக்கம் என்று எதையும் கண்ணில் காட்டமுடியாது. எனவே அவ்வாறு ஒன்று இல்லை என்பது மட்டுமே இவர்களது வாத வழிமுறையாக இருந்துள்ளது.

சமூகத்தின் விளிம்புநிலை மக்கள், பிறழ் நடத்தையுள்ள மக்களை நோக்கியே இவர்களது முனைப்பு இருந்தது. தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. அவர்களும் தமது தவறான வாழ்க்கைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தால் இவர்களை ஆதரித்தனர்.

மக்களின் வாழ்வியல் ஒழுக்கம், சிந்தனைகள் எவற்றையும் மேம்படுத்த முனையாமல், அவர்களின் தவறுகளை ஊக்குவித்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு குழுமமாகவே இந்த சாவகர் கூட்டம் இருந்துள்ளது.

இன்று முற்போக்கு பகுத்தறிவு என்ற பெயரில் சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகளை ஊக்குவிக்கும் கூட்டம் இந்த உலகாயத சிந்தனையின் நீட்சியே. இந்துக்களுக்கு எதிரான ஈவேராவின் பேச்சு, கருணாநிதியின் வசைபாடல் எவையும் அவர்களின் சொந்த சிந்தனையில் வந்த புதிய கருத்துக்கள் அல்ல, அவர்கள் இந்த உலகாயத சிந்தனையின் நிகழ்கால எச்சங்கள் மாத்திரமே.

#திராவிடம் #பெரியாரியம் #பகுத்தறிவு #கடவுள்மறுப்பு என்பது எல்லாம் இவர்களது நிகழ்கால அடையாளங்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -22



தர்க்கீகம் /அளவைவாதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் புறச்சமயம் என்னும் வகைப்பாட்டில் வரும் ஒரு சமய பிரிவாகும்.

தர்க்கரீதியான முறையில் எந்தவொரு ஆன்மீக விடயத்தையும் அணுகுவதற்கான வழிமுறையை கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களிலும் இருவேறு உட்பிரிவினர் உள்ளனர்

நியாயம்/ நையாயிகம்
விஷேசம் /வைஷேஷிகம்

என்பவையே அப்பிரிவுகளாகும்.

ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்து வேறுபடுத்தி அறிவதற்கு நியாயிக்கத்தக்க விடயங்கள் இருந்தால் அவை வேறுவேறு பொருட்கள் என்பது நியாயவாதிகளின் வாதம்.

ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தி காட்டுவது அவற்றின் சிறப்பு தன்மைகளே என்றும், சிறப்புத் தன்மையை கொண்டே ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அறியமுடியும் என்பதும் வைஷேசவாதிகளின் வாதம். 

நியாயம் விஷேசம் என்னும் இரண்டு தத்துவ வாதிகளும் தர்க்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டதால் பொதுவாக தர்க்கீகவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

காட்சி அளவை
கருதல் அளவை
ஒப்பீட்டு அளவை
உய்த்துணர்வு அளவை

என்னும் நான்கு அளவை வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிய வேறுபாட்டை அறிந்து கொள்ளலாம் என்று நியாயவாதிகள் கூறுகின்றனர்.

நியாய வாத பிரிவை கோதமர் என்பவரும், விசேஷ வாத பிரிவை கணாதரரும் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தர்க்க பிரிவினர் அறியாமைதான் மானுட துன்பங்களுக்கு காரணம் என்றும் மேற்குறித்த அளவை முறைகளில் அறிவை அடைவதன்மூலம் துன்பத்தில் இருந்து விடுபட முடியும் என்றும் கூறுகின்றனர்.

பிற்காலத்தில் ஆன்மீக அளவை முறைகள் வேறுபட்ட முறைகளைக் கைக்கொள்ள ஆரம்பித்தாலும், இன்றுவரை இவையே அளவை முறைகளின் அடிப்படையாக உள்ளது.

இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் முடிவுகள் என்று சொல்லப்படுபவை பலவும் இந்த முறைகளையே அடிப்படைய்கக் கொண்டுள்ளது.

சைவ சித்தாந்தம் முப்பொருள் உண்மை என்பதையும், சிவனது எண்குண தத்துவங்களையும் நிறுவுவதற்கு இந்த அளவை முறைகளையே பயன்படுத்தி உள்ளது.

தர்க்க வாதிகள் தர்க்க பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்பதால் பிரமாணவாதிகள் என்றும் அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். 

காட்சி அளவை 
கருதல் அளவை 
உவமை அளவை
ஆகமம்
அருத்தாபத்தி அளவை
இயல்பு அளவை 
ஐதிக அளவை
அபாவ அளவை 
மீட்சி அளவை
உண்டாம்நெறி அளவை

என்ற பத்து அளவை முறைகள் பிற்காலத்தில் சமயவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமய அறிவியல் மாற்றத்திற்கு தர்க்கவாதம் என்னும் சமயதத்துவம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -21



கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...