Wednesday, May 24, 2023

25 சமயங்கள்

சைவ சித்தாந்தவாதிகள் சமயங்களை அகச்சமயம், புறச்சமயம் என்று இரண்டு வகையாகப் பகுத்துக் கூறுகின்றனர்.

பின் அவற்றை மேலும் பகுத்து

புறப்புற சமயம்
புறச் சமயம்
அகப்புற சமயம்
அகச் சமயம் 

என்று நான்கு பிரிவாக வகைப்படுத்துகின்றனர்

புறப்புறச்சமயம்

கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்னும் சமயங்கள் புறப்புற சமயங்கள் எனப்படும். 

அறிவுள்ள உயிர் பொருள், அறிவற்ற சடப்பொருள் என்னும் இரண்டு மட்டுமே உள்ளது என்பதும், கடவுள் என்ற ஒன்று இருக்கும் என்றால் அது அறிவுள்ள உயிர்ப்பொருள்தான் என்பதும் இவர்களது வாதம். 

புறச்சமயம்

உயிர்கள், உயிரற்ற பொருட்கள் இரண்டுமே கடவுளின் வடிவங்கள் தான் என்னும் சமயங்கள் புறச்சமயங்கள் எனப்படும்.

கடவுளே உயிர்களாகவும், உயிரற்ற பொருட்களாகவும் தோன்றி நிற்கிறார் என்பதும், கடவுள் உயிர்களாகவோ உயிரற்ற பொருட்கள்கவோ தோன்றி உயிர்களுக்கு உதவுவார் என்பதும் இவர்களது வாதம்.

அகப்புறச்சமயம்

கடவுள், உயிர்கள், உயிரற்ற பொருட்கள் என்ற மூன்றும் தனித்தனியானவை என்றும், கடவுள் உயிர்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும் சார்ந்து நிற்பார் என்றும் கூறும் சமயங்கள் அகப்புறச் சமயங்கள் எனப்படும்.

கடவுள் உயிர்களின் இன்ப துன்பங்களில் தலையீடு செய்வார், துன்பங்களை நீக்குவதற்கு உதவுவார் என்பது இவர்களது வாதம்.

அகச்சமயம்

கடவுள், உயிர்கள், உயிரற்ற பொருட்கள் என்னும் மூன்றும் தனித்தனியானவை என்றும், உயிர்களானது கடவுள், உயிரற்றபொருட்கள் என்பவற்றை சார்ந்திருக்கும் என்றும், கடவுள் உயிர்களையோ உயிரற்ற பொருட்களையோ சார்ந்திருப்பதில்லை என்றும் கூறும் சமயங்கள் அகச்சமயங்கள் எனப்படும்.

கடவுள், உயிர்கள், உயிரற்ற பொருட்கள் என்னும் மூன்றும் நிலையானவை, அனாதியானவை என்பதும் அவை யாராலும் படைக்கப்படவில்லை என்பதும் இவர்களது வாதம்.

**அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆன்மீக கலைச்சொற்களை தவிர்த்து புழங்கு சொற்களை பயன்படுத்தி உள்ளேன். குற்றம் பொறுத்தருள்க.


சைவ சித்தாந்த வாதிகளின் சமய வகைப்பாட்டில் சித்தாந்த சைவம் தவிர்த்த 24 சமயங்கள்.

புறப்புறச்சமயங்கள்

  • உலகாயதம் (பொருள் முதல்வாதம்) 
  • சௌத்திராந்திக பௌத்தம் 
  • வைபாடிக பௌத்தம் 
  • யோகாசார பௌத்தம் 
  • மாத்தியமிக பௌத்தம் 
  • ஆருகதம் 


புறச்சமயங்கள்
  • தருக்கம் (வைசேடிகம், நையாயிகம் என இருபிரிவு) 
  • மீமாஞ்சை  
  • ஏகான்மவாதம் 
  • சாங்கியம் 
  • யோகம் 
  • பாஞ்சராத்திரம் (வைணவம்)
அகப்புறசமயம்
  • பாசுபதம்
  • மாவிரதம்
  • காபாலம்
  • வாமம்
  • பைரவம்
  • ஐக்கியவாத சைவம்
அகச்சமயம்
  • பாடாணவாத சைவம்
  • பேதவாத சைவம்
  • சிவசமவாத சைவம்
  • சிவசங்கிராந்தவாத சைவம்
  • ஈசுவர அவிகாரவாத சைவம்
  • சிவாத்துவித சைவம்

இந்த சமய பிரிவுகள் இன்றும் அதே கோட்பாட்டில், அதே வாதத்தில் உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.

#சர்வம்_சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம்-13



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...