Monday, May 15, 2023

கீதையின் முக்கியத்துவம்

கீதையின்_முக்கியத்துவம் என்ன? சைவ சித்தாந்த தத்துவத்தின் எதிர்நிலையா கீதை..?

இந்துக்களிடம் பலலட்சம் ஆன்மீக நூல்கள் உள்ளன. பலநூறு தத்துவங்கள், கோட்பாடுகள் உள்ளன. 

அவைகள் எல்லாவற்றையும் விட ஏன் கீதையை பலரும் முக்கியமான நூலாக போற்றுகிறார்கள் என்று என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

ஏனென்றால், எல்லா நூல்களும் உலக வாழ்வில் இருந்து விடுபடுவதைப் பற்றியும், கர்மங்களில் இருந்து விடுபடுவதைப் பற்றியும் பேசுகிறது. கீதை வாழ்வதற்கான வழிமுறையைப் பற்றி பேசுகிறது. செயல்களை செய்வதைப்பற்றி பேசுகிறது.

இந்து வாழ்வியல் மரபில் எழுந்த எல்லா சிந்தனைகளும் கர்மங்களில் இருந்து விடுபடுவதைப் பற்றியே பேசுகிறது.

ஒரு உயிர் கர்மங்களில் இருந்து விடுபடுவதே பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழிமுறை என்று பேசுகின்றது. 

சித்தாந்த நூல்களாக இருக்கலாம், வேதாந்த நூல்களான இருக்கலாம் அவை எல்லாம் கர்மங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றும், கர்மங்களில் இருந்து விடுபடும் உயிர்கள் முக்தி இன்பத்தை அடையும் என்றும் வலியுறுத்துகிறது.

ஒரு நாட்டில் இருக்கும் அனைவரும் தமக்கு கர்ம பலன் உண்டாகிவிடும் என்பதற்காக எந்த செயல்களையும் செய்யாமல் இருந்தால் எப்படி இருக்கும். ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்.

யாரும் திருமணம் செய்யவில்லை. யாரும் விவசாயம் செய்யவில்லை. யாரும் எந்த ஒரு தொழிலுக்கும் செல்லவில்லை. அது நாடாக இருக்குமா? யார் யாருக்கு உணவு கொடுப்பது? அடுத்த தலைமுறை எப்படி உருவாகும்? 

இவ்வாறான ஒரு காலம் ஒரு காலத்தில் இருந்தது. நான் முக்தி அடையப் போகிறேன். நான் கர்மங்களில் இருந்து விடுபடப் போகிறேன் என்று ஒரு பெருங் கூட்டமே எந்த வேலையும் செய்யாமல் அலைந்தார்கள்.

துறவு என்பதைப் பலரும் தவறாக புரிந்து கொண்டிருந்தார்கள். கர்மங்களில் இருந்து விடுபடுதல் என்பதைத் தவறாக புரிந்து கொண்டிருந்தார்கள்.

அவ்வாறான நிலையில் உலகத்தின் தொடர்ச்சியான இயக்கத்தைப் பேணுவதற்காக, துறவு என்றால் என்ன, கர்மங்களில் இருந்து விடுபடுதல் என்றால் என்ன என்பதை விளக்குவதற்காக எழுந்த நூலே கீதை.

இல்லறத்தை விட்டு நீக்குதல் துறவு அல்ல, செயல்கள் அனைத்தும் கர்மங்கள் அல்ல, உலகத்தில் எந்த ஒரு செயலும் சரியோ தவறோ கிடையாது. தர்மம் வேறு கர்மம் வேறு. தர்மம் கர்மத்தில் சேராது என்று மக்களிடையே இருந்த பல்வேறு மயக்கங்களை கீதை போக்குகிறது.

அதுதான் கீதையின் சிறப்பிற்கு காரணம். சித்தாந்த நூல்கள் கர்மத்தை பற்றி பேசுகிறது. கீதை எது கர்மம் எது தர்மம் என்பதை பற்றி பேசுகிறது. 

ஒருவகையில் பார்த்தால் சித்தாந்த தத்துவத்தின் தொடர்ச்சியே கீதை என்று சொல்லலாம்.

சர்வம் சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம் -5




No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...