Saturday, May 27, 2023

மாயவனும் பசுக்களும்

மாயவனான கண்ணன் புல்லாங்குழல் வாசிப்பான் என்றும் அவனது புல்லாங்குழல் இசையில் மயங்கி பசுக்கள் கூட்டம் அவனை சூழ்ந்து நிற்கும் என்றும் புராண கதைகளில் சொல்லப்படுகிறது அல்லவா?

ஏன் மாயவனின் புல்லாங்குழல் இசையில் மயங்கி பசுக்கள் மட்டும்தான் சூழ்ந்து நிற்குமா? காளை மாடுகள் நிற்காதா? இல்லை ஆடு, நாய், பூனை என்பவை மயங்கி ரசிக்காதா? இவ்வாறு எப்போதாவது தோன்றியிருக்கிறதா?

இங்கு பசுக்கள் கூட்டம் என்பது மாடுகள் கிடையாது. ஆன்மாக்கள் கூட்டம் என்பதே அதன் பொருள். பசு என்றால் ஆன்மா. மாயையை உண்டாக்கி, அதில் ஜாலங்கள் செய்து ஆன்மாக்களை அதை நோக்கி ஈர்ப்பவனே மாயவன். மாயவன் என்றால் மாயைக்கு உரியவன். இந்த மாயையாக தோன்றிநிற்கும் அனைத்திற்கும் உரியவன் அவன். இந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும் மாயையைப் பற்றியே நிற்கின்றன.

ஆன்மாவை மாயை தூண்டும் அதுதான் மாயவனின் புல்லாங்குழல் இசை. அந்த இசையின் மயக்கத்தில் ஆன்மாக்கள் கட்டுண்டு கிடக்கும் அதுதான் ஆணவம்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களுக்கு நானே காரணம் என்கிறான் மாயவன். அது உண்மைதானே? மாயை இல்லாமல் செயல்கள் ஏது? மாயையில் உண்டாக்கும் மாற்றங்கள் தானே செயல்கள். மாயவனின் இருப்பைக் கடந்து எந்த ஒரு செயலும் கிடையாது. 

மாயவனின் இருப்பைக் கடந்துவிட்டால் அது மாயை அற்ற, செயல்கள் ஏதுமற்ற பெருவெளி. அந்த தூய்மையான நிலையைத்தான் சிவம் என்பர் சித்தர்கள். அது கர்மங்கள் ஏதுமற்ற பேரின்பமும், பேரமைதியும் உள்ள நிலையான இருப்பிடம்.

மாயவனின் இருப்பில் சிவம் இல்லையா? சிவத்தின் இருப்பில் மாயவன் இல்லையா? என்று தோன்றலாம். 

மாயவனின் மாயை சார் பிரபஞ்ச இருப்பில் சிவம் என்பது மறைபொருள். மாயையை நீக்கினால் சிவம் தோன்றும்.

மாயையைக் கடந்த சிவப்பெரும் வெளியில் மாயவன் மறைபொருள். அங்கே மாயவனும் தூய நிலையில் தோன்றா மாயையாய் சுத்தமாயை என்னும் நிலையில் இருப்பான். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -17



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...