Wednesday, May 24, 2023

வீரசைவம் எனப்படும் ஐக்கியவாதம்

முப்பொருள் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் ஆனால் அதன் உட்பகுப்பில் மாறுபட்டு நிற்கும் ஒரு சமய பிரிவாகும். அகப்புறச் சமயம் என்று ஐக்கிய வாதசைவத்தை சித்தாந்த வாதிகள் வகுத்துள்ளனர்.

இவர்கள் முப்பொருள் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் மும்மலங்கள் என்பதில் வேறுபட்டு நிற்கின்றனர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களில் ஆணவமலம் என்ற ஒன்று இல்லை என்பதும், கன்மம் மாயை எனும் இரண்டு மலங்கள் மட்டுமே உள்ளது என்பதும் இவர்களது வாதம். 

உயிர்களுக்கு அவை முற்பிறவியில் செய்த வினைப்பயன்களுக்கு ஏற்றவாறு கடவுளே பிறவிகளை அளிக்கிறார் என்பதும், உயிர்களது இன்ப துன்பங்களுக்கு அதுதான் காரணம் என்பதும் இவர்களது வாதம்.

கடவுள் அருளால் உயிர்கள் தமது வினைப்பயன் களில் இருந்து நீங்கும் என்றும், அவ்வாறு கடவுள் அருளால் வினைப்பயன்களில் இருந்து நீங்கிய உயிர்களை மீளவும் மலங்கள் பற்றாது என்பதும் இவர்களது நம்பிக்கை. 

சைவ சித்தாந்தம் கூறும் கடவுளின் தன்மைகளுக்கு இவை ஒவ்வாத சிந்தனைகள் என்பதால் சித்தாந்தவாதிகள் இந்த வாதங்களை மறுதலிக்கிறார்கள். 

இறைவன் உயிர்களுக்கு பிறவிகளை அளிப்பார் என்பது அடிப்படையான ஆன்மீக சிந்தனைக்கு எதிரானது என்று சித்தாந்த வாதிகள் கூறுகின்றனர்.

நல்வினை தீவினைதான் உயிர்களின் பிறவிகளுக்கும் காரணம். ஆனால் அதன் அடிப்படையில் இறைவன்தான் உயிர்களுக்கு பிறவிகளை அளிக்கிறார் என்றால், 

அந்த உயிரின் முதற் பிறவியில் எவ்வாறு தீவினை தோன்றியது? 

உயிர்களுக்கு முதலில் பிறவியை அளிக்க கடவுளுக்கு என்ன அவசியம்?

எந்த தீவினைப் பயனும் இல்லாமல் முதற்பிறவியை எடுத்த உயிர் தீவினைகளை நோக்கி நகர்வதற்கு ஏது காரணம்? 

கடவுளால் அளிக்கப்பட்ட முதற்பிறவியில் அவ்வுயிரை தீவினைகளை நோக்கி வழிகெடுப்பது எது? அது கடவுளைவிட வல்லமை உள்ளதா?

என்ற சித்தாந்த வாதிகளின் கேள்விகள் வீரசைவத்தின் கோட்பாடுகளை நிராகரிக்கின்றது.

இந்த வீரசைவ சமயத்தினர் பல்தெய்வ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் மறுக்கின்றனர். ஆலய வழிபாடு, ஆலய பூசைகள் என்பவற்றையும் மறுக்கின்றனர். இறைவனின் குறியீடாக கழுத்தில் அணியும் லிங்கத்தை மட்டும் தினமும் பூஜை செய்கின்றனர். இவர்கள் ஏதாவது ஒரு வீரசைவ மடத்தின் அங்கத்தவராக இருக்கின்றனர். இவர்கள் இறந்தவர்களை குழிக்குள் புதைக்கின்றனர். அதன் மேல் சிவலிங்கம் நந்தி என்பவற்றை பிரதிஷ்டை செய்கின்றனர்.

இவர்களது நம்பிக்கைகள் வழிமுறைகள் அனைத்தும் பெரும்பாலும் பாலைவன மதங்களை ஒத்ததாக இருக்கிறது.

அறிவிற்கும் தர்க்கத்திற்கும் பொருந்தாத வீரசைவ நடைமுறைகளால் மக்கள் அதனில் இருந்து விலகிவிட்டார்கள். இன்று வீரசைவர்கள் என்று பெயரளவில் சொல்லப்படுபவர்கள் பல்தெய்வ வழிபாட்டையும், ஆலய வழிபாட்டையும் ஏற்றவர்களாகவே உள்ளார்கள். 

வீரசைவத்தில் இருந்து பிற்காலத்தில் உருவான சீர்திருத்த பிரிவான லிங்காயத்து பிரிவினர் சாதிய பாகுபாடுகளை பார்ப்பதில்லை என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் பிரிவினரை மட்டும் ஒரே சாதியாக பார்க்கின்றனரே அன்றி எல்லோரையும் சமமாக பார்ப்பதில்லை. குழந்தைபிறப்பு, மரணம், பெண்பூப்படைதல், தவறான நடததையுடையவர்கள் என்போரது நெருக்கம் தீட்டு அல்ல என்பதும் இவர்களது நம்பிக்கை. இவையும் பாலைவன மதங்களை ஒத்ததாகவே காணப்படுகிறது.


சைவத்திற்குள் ஒரு சகாரா?

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -15



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...