Thursday, May 4, 2023

மதம் சமயம் ஆன்மீகம் வேறுபாடு என்ன?

நீங்கள் பின்பற்றுவது மதமா? சமயமா? ஆன்மீகமா?

#மதம் என்றால் நம்பிக்கை என்று பொருள். ஆம், அந்த சமஸ்கிருத மொழிச் சொல்லின் பொருள் அதுதான்.

நம்பிக்கை என்பது அறிவிற்குள் அடங்காதது. உண்மையில் அறிவு இருந்தால் அங்கு நம்பிக்கை என்பதே இல்லாமல் போய்விடுகிறது. நம்பிக்கையில் மூடநம்பிக்கை, அறிவான நம்பிக்கை என்று வித்தியாசம் கிடையாது. ஒரு வகையில் பார்த்தால் நம்பிக்கை என்பதே மூடத்தனம் மட்டும்தான்.

நீங்கள் யாரோ ஒருவரை பின்பற்றுகிறீர்கள், யாரோ ஒருவர் சொன்னதைப் பின்பற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது என்ன? நம்பிக்கை தானே? அவ்வாறு யாரோ ஒருவரை, யாரோ ஒருவரின் கோட்பாட்டை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அது ஒரு மதமாகும். 

பொதுவாக மதங்கள் சில அடிப்படைகளைக் கொண்டிருக்கும். தனி மனிதர், அல்லது அவர் சொன்ன வார்த்தைகளை முழுமையாக நம்புவார்கள். அதனை கேள்வி கேட்க இடமளிக்காமல், மாற்றுவதற்கு இடமளிக்காமல் பேசுவார்கள். உண்மையில் கேள்வி கேட்காமல், கேள்வி கேட்க முடியாமல் ஒரு நம்பிக்கை பின்பற்றப்படும் என்றால் அதுதான் உண்மையான மூடநம்பிக்கை.

ஈவேரா சொன்னதை நம்பினால், அல்லது ஈவேராவை நம்பினால் அது ஒரு மதமாகும். உலகில் தனி மனிதர்கள் உருவாக்கிய, தனி மனித வழிகாட்டலை பின்பற்றும் மதங்களே எண்ணிக்கையில் அதிகமாக ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மதங்களில் சுய சிந்தனைக்கோ அறிவுக்கோ இடமிருக்காது. யாரும் சுயமாக சிந்திப்பதை அவை அனுமதிப்பதும் இல்லை.

ஆனால் அறிவோ சுய சிந்தனையோ இல்லாத பலருக்கு அது வசதியாகவும் போய்விடுகிறது. அந்த சமூகத்தில் பிறந்தவர்கள் வளரும் காலத்திலேயே சுயமாக சிந்திக்க முடியாதவாறு மூளைச்சலவை செய்யப்பட்டு அறிவற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தாம் நம்பிய அந்த நம்பிக்கை மட்டுமே சரியானது, ஏனைய நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்படவேண்டும் என்று மதம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இங்கே மதம் என்பது வேறு ஒரு பரிமாணத்தை அடைகிறது. செறிவூட்டப்பட்ட நம்பிக்கை வெறியாக மாறுகிறது. அதனால்தான் நம்பிக்கை, வெறி இரண்டு சொற்களும் மதம் என்ற சொல்லினால் குறிக்கப்படுகிறது.

ஆனால் இந்து வாழ்வியல் என்பது தனிநபரையோ, தனிமனித கோட்பாடுகளையோ நம்புவது கிடையாது. இந்துக்களிடம் மரபுவழியான சிலபல சடங்கு சம்பிரதாய பின்பற்றுதல்கள் உள்ளனவேயன்றி அவைகூட மதமாக இல்லை.

இந்த நபரையோ, இந்த நபர் கூறியதையோ கட்டாயம் நம்பவேண்டும் என்ற மூடத்தனம் இந்துக்களிடம் கிடையாது. அறியப்படாத விடயங்கள் ஆராய்வதற்கு உரியனவேயன்றி நம்புவதற்கு உரியவை அல்ல என்பது இந்துக்களின் மரபு. கடவுள், உயிர் அதனைப் பற்றி நிற்கும் தளைகள் என்று அறியப்படாத விடயங்களைப் பற்றி ஆராய்வதே இந்துக்களின் மரபாக இருந்தது. 
இருக்கிறது. 
இனியும் இருக்கும்.

இதுவரையில் அறியப்படாத கடவுள் பற்றியும் ஆன்மாவை பற்றியும் பல்லாயிரம் ஆராய்ச்சிகள் இந்து சமூகத்தில் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆராய்ச்சிகள் மூலம் பெறப்பட்ட முடிவுகள் அன்றைய சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாடுகளுக்கு அமைய மக்களால் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமயங்களாக வெளிப்படுத்தப்பட்டன. 

சமைத்தல் என்றால் நுகர்வதற்கு ஏற்றாற்போல் மாற்றுவதாகும். அரிசியை அவ்வாறே உண்ண முடியாது என்பதால் அதை உண்பதற்கு ஏற்றவாறு மாற்றும் செயற்பாடே சோறு சமைத்தல். அதுபோல ஆன்மாவை கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி முடிவை நேரடியாக மக்களுக்கு கொடுத்தால் அவை மக்கள் பலரால் புரிந்து கொள்ள முடியாது போகும். ஆராய்ச்சி முடிவுகளை மக்கள் புரிந்து கொள்ள ஏற்றாற்போல் மாற்றி வழங்கும் முறையே சமயமானது.

இந்த சமய வழிமுறை கூறும் ஆராய்ச்சி முடிவுகளை நாம் நேரடியாக ஆராய்ந்து அனுபவித்து உணர்வதே ஆன்மீகம் என்ப்படுகிறது. 

இதுதான் மதம், சமயம், ஆன்மீகம் என்பவற்றுக்கான அடிப்படை வேறுபாடு.

நீங்கள் பின்பற்றுவது மதமா? சமயமா? ஆன்மீக வழிமுறையா என்பதை பின்னூட்டத்தில் இடுங்கள்.

#சர்வம்_சிவமயம்

#ஆன்மீகம்_அறிவோம்-4



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...