இனத்திற்கு ஒரு கடவுள்
மொழிக்கு ஒரு கடவுள் என்று பல்வேறு கடவுள்கள் உள்ளதா?
பெரிய கடவுள்
சிறிய கடவுள் என்று வேறுபாடுடைய கடவுள்கள் உள்ளதா?
தமிழர்களின் மரபு என்ன, எம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள்?
நிச்சயமாக கடவுள் என்பது ஓர் இருப்பு நிலைதான். உனது எனது என்ற பேதங்கள் அங்கு கிடையாது. மதத்திற்கான, மொழிக்கான, தேசத்திற்கான என்ற வேறுபாடுகள் கடவுள் என்ற இருப்பு நிலைக்கு கிடையாது.
கடவுள் நபரல்ல,
கடவுள் பிறப்பதோ இறப்பதோ இல்லை, அதனால்தான் பிறவா யாக்கை பெரியோன் என்று சங்க இலக்கியங்களில் எம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கடவுள் என்ற இருப்பு நிலைக்குள்தான் நாம், நம் பூமி, நம் பிரபஞ்சம் என்று அனைத்தும் இருப்பதால் கடவுளுக்கும் எமக்கும் இடையே எந்த தொடர்பாளர்களும் தேவையில்லை. கடவுளுக்கு என்று தனியாக எந்தவொரு தூதரும் தேவையில்லை. ஒரு பிறவி எடுத்துத்தான், ஒரு தூதனை அனுப்பித்தான் மக்களுக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல முடியும் என்ற இயலாமை ஒருபோதும் கடவுளுக்கு இருக்க முடியாது.
சர்வ வல்லமை உள்ள கடவுளுக்கு ஒவ்வொரு உயிர்களுடனும் தொடர்பு படும் வல்லமை இல்லாமல் போகுமா? மனிதனாக பிறந்தோ, தூதர்களை அனுப்பியோதான் தொடர்பு கொள்ள வேண்டுமா?
அதனால்தான் எம் முன்னோர்கள் எல்லாவற்றையும் எல்லோருக்கும் வழங்குபவர் கடவுள் என்று கூறினர். சர்வேஸ்வரன் என்பதன் பொருள் அதுவே.
இறைவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. இரத்தம், சதை, சலம், மலம் என்று தேங்கி நிற்கும் மாயா உடலை சாராமல் அப்பழுக்கில்லாத செம்மையுடன் இருப்பதே இறைவனின் இயல்பு. அதனால்தான் இறைவனை சிவம் என்றார்கள். சிவம் என்றால் செம்மையான, தூய உருவினை உடைய என்று பொருள்.
இறைவன் தூய உருவினை உடையவர் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் சர்வ வியாபி என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
அதனால்தான் பிறப்பு இறப்பு இல்லாமல், படைத்தல் காத்தல் அழித்தல் என்று செயல்களை சாராமல் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிக்கும் சிவமே ஒரே கடவுள் என்று எம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சர்வம் சிவமயம்
#ஆன்மீகம்_அறிவோம்-3
No comments:
Post a Comment