Tuesday, May 30, 2023

சாங்கியம் /பௌத்தம்

சைவ  சித்தாந்த வாதிகள் புறச்சமயம் என்று வகுக்கும் சமய பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். சமண மதங்கள் என்று குறிப்பிடப்படும் மதங்களில் ஒரு பிரிவினராவர். 

சாங்கியமரபில் வந்த கௌதமரை பின்பற்றுபவர்கள் என்பதால் சாங்கியம் என்று அழைக்கப்பட்டது. புத்தர் ஒருவரை பின்பற்றும் பிரிவினர் என்பதால் புத்தம்/ பௌத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடவுள் என்ற ஒற்றைக் கருத்தியலைத் தவிர சைவ சித்தாந்தம் கூறும் பல தத்துவ கோட்பாடுகள் சாங்கிய தத்துவங்களுடன் ஒத்துநிற்கிறது. கடவுள் ஆன்மா பற்றிய நிலைப்பாட்டை தவிர சிலபல சாங்கிய தத்துவங்களை சைவ சித்தாந்தம் ஏற்கிறது என்று கூட சொல்லலாம்.

அறிவுள்ள பொருள், அறிவற்ற பொருள் என்ற இரண்டினைப்பற்றியே சாங்கியம் பேசுகின்றது. புருடன், பிரகிருதி என்று அவற்றை சாங்கியம் குறிப்பிடுகிறது. 

புருடன் என்னும் அறிவுப்பொருள் மாற்றம் அடையாதது. அது உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் கிடையாது, பிரகிருதியே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம் என்கிறது சாங்கியம். பிரகிருதியே அனைத்தும் தோன்றுவதற்கான மூலப்பொருளாகும் என்று சாங்கியம் பேசுகின்றது.

புருடன், பிரகிருதி என்ற இரண்டும் சேர்ந்ததே இந்த பிரபஞ்சம் முழுவதும் என்றும், இவற்றை கடந்த அறியாத ஒன்றைப் பற்றிய விவாதங்கள் தேவையற்றது என்பதும் சாங்கியத்தின் நிலைப்பாடாகும். 

இருப்பது அழியாது, இல்லாதது தோன்றாது என்ற சைவ சித்தாந்தம் கூறும் சற்காரிய வாதத்தினையும் சாங்கியம் பேசுகின்றது.

ஆணவம் தான் அனைத்து செயல்களுக்கும் காரணம், ஆணவத்தால் செய்யும் செயல்கள் தான் அந்த செயலைச் செய்யும் உயிர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்பது சைவ சித்தாந்தம். சாங்கியமும் ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று கூறுகிறது.

ஆணவம் என்பதும், ஆசை என்பதும் உயிர்களிடம் உண்டாகும் விருப்பத் தூண்டல்களே.

அறிவுள்ள பொருள், அறிவற்ற பொருள் என்ற இரண்டு மட்டுமே உள்ளது என்பதையும், அறிவுள்ள பொருள் மாற்றம் அடைவதில்லை என்பதையும் வைத்து பல தர்க்கங்களை சாங்கியத்தால் விளக்க முடியாமல் தோற்றுப்போகிறது. 

அறிவுள்ள பொருள் மாற்றம் அடைவதில்லை எனில், அறிவற்ற பொருள் எவ்வாறு செயற்படும் என்பதை விளக்க முடியாது. செயல் என்பதே ஒரு நிலைமாற்றம்தான். ஒரு செயலைச் செய்வதற்கு அறிவு தேவை, அந்த அறிவற்ற பொருள் தனித்து நின்று செயற்பட முடியாது. அறிவற்ற சடப்பொருள் அறிவைப் பெற முடியாது. அறிவுள்ள பொருளில் இருந்து அறிவைப் பெறுவது என்றாலும் அந்த அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான அறிவு வேண்டும். ஆக அறிவற்ற பொருள் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

ஒரு செயலைச் செய்வதற்கு அறிவு மூலப்பொருள் என்ற இரண்டு மட்டுமே போதாது. அந்த செயலைச் செய்வதற்கான ஆற்றலும் வேண்டும். 

அதனால்தான் சைவசித்தாந்தம் அறிவு ஆற்றல் என்பவற்றை முடிவிலியாகக்கொண்ட ஒரு பேரின்ப அருள்நிலை இருப்பு உண்டு என்றும் அதுதான் கடவுள் என்றும், 

அந்த கடவுளின் பேரிருப்பில் இருந்து அறிவை ஆற்றலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று உண்டென்றும் அதுதான் உயிர்கள் என்றும்,

அவை இரண்டையும் நீங்கிய ஜடமூலப்பொருள் ஒன்று உண்டென்றும் அதுவே மாயையாக பலவாறாக தோன்றி நிற்கிறது என்றும் விளக்குகிறது. 

இந்த உலகத்தில் உள்ள பிரகிருதி பொருட்களின் இருப்பை உண்மை என்னும் சாங்கியத்தின் வாதத்தை சைவ சித்தாந்தம் நிராகரிக்கிறது. இவை மாயையால் ஆனவை என்றும் அவை எதுவும் உண்மை கிடையாது என்றும் சைவ சித்தாந்தம் விளக்குகிறது.

அறிவின் முழுமையான புத்தி நிலையை உணர்ந்தவர்கள் புத்தர்கள் என்பதும், அவ்வாறு புத்தர்களாக வாழ்ந்தவர்களை வழிபடுவதும் சாங்கிய மரபாக உள்ளது. இன்று பௌத்தம் என்று அறியப்படும் மதத்தின் தீர்த்தங்கரராக போற்றப்படும் கௌதம புத்தர் அந்த மரபின் 24 வது தீர்த்தங்கரர் என்று கருதப்படுகிறார்.

இன்று பௌத்தர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் பலரும் தீர்த்தங்கரர் என்பதைக் கடந்து, இந்து சமயங்கள் கடவுள் என்றும் கடவுளின் அம்சங்கள் என்றும் கூறுபவற்றையும் வணங்கும் இந்துக்களாகவே வாழ்கின்றனர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -18



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...