Wednesday, May 24, 2023

சிவசமவாதம் மற்றும் பேதவாதம்

சைவ சித்தாந்த தத்துவ பிரிவினர் அகச்சமயம் என்று வரையறை செய்யும் பிரிவுகளோ சிவசமவாதம் மற்றும் பேதவாதம் என்னும் பிரிவினராவர்.

கடவுள் ஆன்மா மலங்கள் என்னும் முப்பொருளும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் இப்பிரிவினர்கள் ஆன்மாவின் முக்தி இயல்பில் வேறுபட்டு நிற்கின்றனர்.

ஆன்மா தனது முக்தி நிலையில் இறைவனாகிய சிவனை ஒத்த இயல்பில் இருக்கும் என்பது சிவசமவாத சமயத்தினரின் வாதமாகும். முக்தி அடைந்த ஆன்மாக்கள் சிவதத்துவங்கள் கூறும் சிவனின் இயல்புகளை பெற்று சிவபோகத்தை முழுமையாக அனுபவிக்கும் என்று சிவசமவாத சமயத்தினர் கூறுகின்றனர்.

முக்தி நிலையை அடைந்தாலும் ஆன்மாக்கள் சிவதத்துவங்கள் கூறும் சிவனது நிலையை அடையாது என்பது பேதவாத சமயத்தினரின் வாதம். ஆன்மாவின் இயல்புகள் வேறு, சிவனின் இயல்புகள் வேறு என்றும், ஆன்மா முக்திநிலையை அடைந்தால் சிவ போகத்தை நுகர்வதற்கான தடைகள் நீங்கி நிற்குமேயன்றி சிவ இயல்பை, சிவபோகத்தை முழுவதும் பெற முடியாது என்று பேதவாத சமயத்தினர் கூறுகின்றனர்.

அன்று கடவுள் யார் என்பது சமயங்களின் வாதமாக இருக்கவில்லை, கடவுள் என்பதன் இயல்புகள் எவ்வாறானவை, ஆன்மா என்பதன் இயல்புகள் எவ்வாறானவை என்பதும் ஆன்மா தனது முக்திநிலையின் பின் எவ்வாறான இயல்பில் இருக்கும் என்பதுமே சமய பிரிவுகளின் வேறுபாடாக இருந்துள்ளது.

கடவுளை நபர் என்பதாக கருதும் அறியாமை இம்மண்ணில் இருந்ததில்லை. இன்ன பெயரில் இன்ன வடிவில் இன்ன முறையில் வணங்கினால் அது ஒரு மதம் என்பது ஆன்மீகம் என்றால் என்னவென்றே அறியாத அறிவிலிகள் கூட்டம் எம்மிடையே உருவாக்கிய குழப்பம்.

நாம் அனைவரும் எம் ஆன்மீக மரபுகளை அறிந்துகொள்வோம்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம்-14



No comments:

கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...