Thursday, November 30, 2023

இறைவனின் மொழி எது?

மொழி என்றால் என்ன என்று புரியாமல் பலரும் பலவிதமான கற்பிதங்களில் சிக்கி விடுகின்றனர். இறைவன் அரபு மொழியில் பேசுவார் என்று சிலரும், இறைவன் லத்தீன் மொழியில் பேசுவார் இறைவன் நவமான பாசைகள் பேசுவார் என்று சிலரும் பலகாலமாக நம்பி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால் அவர்கள் கடவுள் என்பதை ஒரு நபராக கருதும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள்.

சரி, எமது இந்து பாரம்பரிய நம்பிக்கை என்ன? இறைவன் என்ன மொழியில் பேசுவார்.

மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி. இரண்டு தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழில் தொடர்பாட முடியும். இரண்டு அரபு மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அரபு மொழியில் தொடர்பாட முடியும். இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தமக்குள் தொடர்பாடல் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

நாம் வளர்க்கும் நாய் பூனை மாடு ஆடு முதலியவை கூட எம்முடன் ஏதோ ஒரு தொடர்பாடலை செய்து கொண்டுதான் உள்ளது. நாம் அவற்றுடன் என்ன பாசையில் பேசுகிறோம். தமிழ், ஆங்கிலம், சீனம் இவ்வாறான மொழிகளிலா பேசுகிறோம். இல்லை அல்லவா.. ஆனால் அவற்றுடன் நாம் தொடர்பாடலை செய்து கொண்டுதானே இருக்கிறோம்.

அதுபோலவே இறைவனும் எம்முடைய ஏதோ ஒரு வகையில் தொடர்பாடலை செய்துகொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறைவன் எந்த மொழிக்கு உரியவர்? தமிழ்தான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அரபிதான் இறைவனுக்கு தெரிந்த மொழியா? அந்த மொழி தெரிந்தவர்களுடன் மட்டுமே இறைவன் தொடர்பு கொள்வாரா?

அல்லது இறைவனும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும் அனைவருடனும் தொடர்பு கொள்வாரா? அப்படியானால் இறைவன் மனிதர்களுக்கு மட்டுமானவரா? 

அப்படியானால் இந்த உலகின் உள்ள மற்றைய ஜீவராசிகள் எல்லாம் சில மதங்கள் சொல்வது போல மனிதர்களுக்காக படைக்கப்பட்டவையா?

இல்லை இறைவன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரியவர் என்றால் மானிட பாசையை விட மற்றைய ஜீவராசிகளின் பாசையை அறிவாரா? அவற்றுடன் அவற்றின் பாசைகளில்தான் தொடர்பு கொள்வாரா?

இந்துக்களால் மட்டுமே இவ்வாறு சிந்தித்து கேள்விகளை கேட்க முடியும். ஏனைய மதங்கள் என்றால் இறை நிந்தனை என்று கூறி கல்லால் எறிந்து கொன்றுவிடும்.

ஏனைய மதங்களைப் போல இந்துக்கள் கடவுளை நபராக கருதுவதில்லை. இறை என்பதை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் அமைப்பு (system ) முறையாகவே கருதுகின்றனர். இறைவன் என்ற அந்த இருப்பிற்கு உள்ளேயே இந்த உலகங்கள், உயிர்கள் அனைத்தும் இருப்பதாக கருதுகின்றனர்.

உலகத்தின் அழிவு நாளில் வந்து பாவ புண்ணிய கணக்குப் பார்க்கும் ஒருவராக, தன் புகழ் பாடினால் 50- 100 பெண்களை கொடுத்து மதுவை ஆறாக ஓடவிட்டு போதையில் காமத்தில் திளைத்திருக்க சொல்லும் ஒருவராக கடவுளை கருதுவதில்லை. தன் புகழ் பாடினால் அவன் செய்யும் தவறுகளுக்கான பாவத்தையும் தன் புகழ் பாடாதவன் மேல் சுமத்தி நரகத்தில் வீழ்த்தும் ஆணவக்கரானாக கடவுளை கருதுவதில்லை. 

கடவுள் என்பது ஒரு அமைப்பு முறை. அது யாருடனும் பேசும் தேவையோ, செயற்படும் தேவையோ இல்லாதது. அது மாயையை சாராதது. பேசுவதற்கு செயற்படுவதற்கு தேவையான மாய உடலும் மாய புலன்களும் அதற்கு கிடையாது. மாயை அற்ற தூய வடிவினை உடையவன் இறைவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள். அவன் ஞான வடிவினை உடையவன் மாயா உடலும் கரணங்களும் அற்றவன் என்று நம்புபவர்கள் இந்துக்கள்.

அதனால்தான் இறைவன் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான், நானும் அவனுடன் எதுவும் பேசுவதில்லை அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று அந்நாளில் ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஆம், இறைவன் பேசுவதில்லை. அது ஒரு மௌன நிலை. சப்தத்தால் மௌனத்தை உணர முடியாது. மௌன நிலையிலேயே மௌனத்தை உணர முடியும். அதனால்தான் மௌன நிலையில் இருந்து தியானிப்பதை இறைவனை உணரும் வழிமுறையாக இந்துக்கள் கொண்டுள்ளனர். 

இறைவனின் மொழி என்பது மௌனமே. அதை கேட்க முடியாது. உணர்ந்து கொள்ளவே முடியும். மனத்தை அடக்கி மௌன நிலையில் இருந்து இறைவனை தியானிப்பது ஒன்றே இறைவனின் மொழியை கிரகிப்பதற்கான ஒரே வழி.

சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது என்பது இறைவனுடன் உரையாடுவது கிடையாது. பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கு பொதுமைப்பாடான முறையில் பூசை வழிபாடுகளில் ஈடுபடும் முறையே சமஸ்தானத்தில் பூசை செய்வதும் அர்ச்சனை செய்வதும். 

இறைவனை நபராக கருதும், அவனுடன் உரையாடலாம் என்று நம்பும், உங்கள் அன்னிய மத சிந்தனைகளுடன் இந்துக்களின் வாழ்வியலைப் பொருத்திப் பார்க்காதீர்கள். உங்கள் தவறான சிந்தனைகளை திருப்திப்படுத்த இந்துக்களின் ஞானத்தால் முடியாது. நீங்கள் விரும்பினால் இந்துக்களின் ஆன்மீக ஞானத்தின் ஆழத்தை சற்று அறிந்து கொள்ளுங்கள்.

#சர்வம்_சிவமயம்



Tuesday, November 14, 2023

யார் இந்த சாளம்பன்? இலங்கை தமிழர்கள் என்பவர்கள் யார்?

இலங்கையில் பல ஊர்கள் சாளம்பன் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. 

சாளம்பன், மன்னார்
சாளம்பன், பூநகரி
சாளம்பன், ஒட்டுசுட்டான்
பெரிய சாளம்பன், ஒட்டுசுட்டான்
சாளம்பன் குளம், ஒட்டுசுட்டான்
சாளம்பன் தீவு, கச்சாய்
சாளம்பன் வில்லு, பூநகரி 
சாளம்பன், பாண்டியன்குளம்
சாளம்பன், பொறிக்கடவை(பரந்தன்)
சாளம்பன் குளம், வவுனியா
சாளம்பன், வவுனியா

இப்படி பல கிராமங்கள் இப்போதும் சாளம்பன் பெயரிலேயே இருக்கிறது. 

சாளம்பன் என்றால் யார்?

யார் இந்த சாளம்பன்? 

எதற்காக சாளம்பனின் பெயரை ஊர்கள் தோறும் வைத்திருக்கிறார்கள்.

சாளம்பன் என்பவன் காமரூப பேரரசை கைப்பற்றி ஆண்ட மிலேச்ச குல மன்னர்களில் ஒருவன்.

காமரூப பேரரசு என்பது இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் வங்காளம் பூட்டான் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பழைய பேரரசு ஆகும்.

இந்த காமரூப பேரரசை மிலேசசர்கள் கைப்பற்றி ஆண்டுள்ளனர். பொ.ஆ 650-900 வரை மிலேச்ச குல அரசர்கள் ஆண்டதாக அவர்களது பதிவுகள் குறிக்கின்றது. அவ்வாறு ஆண்டவர்களை மிலேச்ச குல மன்னர்கள் என்றும் குறிப்பிடுகிறாரங்கள்.

இந்த மிலேச்ச குல மன்னர்களில் ஒருவனே இந்த சாளம்பன். சாளம்பனுக்கு முன்னர் அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் ஒருவனது பெயர் விஜயா(விஜயன்).

இன்று சாளம்பன் என்ற பெயர்களில் இருக்கும் ஊர்களில் உள்ள பழைமையான மக்கள் இந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மக்களின் கலப்பு முகத்தோற்றத்தை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த காமரூப பேரரசை ஆண்ட மிலேச்ச குல அரசர்கள் தம்மை நரகாசுரன் வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த காமரூப பேரரசு இன்றைய அசாம் மாநிலத்தை மையமாக கொண்டு அமைந்திருந்தது. இலங்கை வரலாறும் விஜயன் லாலா நாட்டில் இருந்து வந்தவன் என்று கூறுகிறது. லால நாடு என்பதும் இந்த அசாம் பகுதியில் உள்ள ஒரு நாட்டையே குறிக்கும்.

விஜயன் இலங்கைக்கு வந்து ஆட்சிசெய்த பகுதியாக இன்றைய மன்னார் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளையே குறிப்பிடப்படுகிறது. அந்த பகுதிகளிலேயே அதிகளவான ஊர்கள் சாளம்பன் என்ற பெயரில் உள்ளது.

விஜய வம்சம் என்று குறிப்பிடப்படும் மக்கள் பலர் இலங்கை தமிழர்கள் என்று சொல்லப்படும் மக்களே. அசாமிய பாண்டிய கலப்பு இனமாகவே இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். வேறு நாடுகளுக்கு சென்றால் இலங்கை தமிழர்கள் வங்காளிகளா என்ற கேள்வியை இன்றுவரை எதிர்நோக்கும் நிலையே காணப்படுகிறது. அதாவது வங்காளிகள் இலங்கை தமிழர்கள் இருவரும் ஒத்த தோற்றத்தை உடையவர்களாகவே உள்ளார்கள்.

(காமரூப அரசர்கள் நரகாசுரன் வம்சத்தினர் என்று அசாமியர்கள்தான் கூறுகின்றனர். காளிகா புராணத்திலும் நரகாசுரனை வதைத்த கதை வருகிறது. அதுவும் சக்தி வழிபாட்டின் வகைகளைப் பற்றி விவரிக்கும் புராணமாகும். நரகாசுரனை வதைத்தது காளிதேவியின் அம்சமாகும். இது பெண் தெய்வ வழிபாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

வைணவ மயப்பட்ட நரகாசுரன் கதையில் கூட கிருஷ்ணன் வதைப்பதாக இல்லாமல் சத்தியபாமா என்ற பெண் அம்சமே வதைப்பதாக உள்ளது)






Sunday, November 12, 2023

யார் அந்த நரகாசுரன்? ஏன் இந்த தீபாவளி?

நர+கா+ சுரன் என்றால் மனிதர்களின் இருளில் உதித்தவன் என்று பொருள். நர என்றால் மனிதர் என்றும், கா என்றால் இருள் என்றும், சுரன் என்றால் உதித்தவன் என்றும் பொருள்.

இங்கே இருள் என்பது மனிதரின் இருள்மலமான ஆணவத்தை குறிக்கும். மனிதர்களின் ஆவணத்தில் இருந்து தோன்றியவன் இந்த நரகாசுரன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே இந்த நரகாசுரன் என்ற தீயவன் இருக்கிறான். மனிதர்கள் அறிவு பெறும் போது அறியாமையால் உருவான நரகாசுரன் மறைந்து போகிறான்.

ஆணவம் என்பது அறியாமையால் தோன்றுவது. இங்கே அறிவு என்பது பள்ளிப் பாடமோ, பட்டப்படிப்போ கிடையாது. எது மனிதர்களது அஞ்ஞானத்தை- அறியாமையை போக்குகிறதோ, எது ஆணவத்தை நீக்குகிறதோ அதுதான் உண்மையில் அறிவு என்பது. பள்ளியில் பயில்வதும் கல்லூரியில் கற்பதும் அறிவு கிடையாது. அவை வெறும் தகவல் அறிதல்கள்.

இந்த தீபாவளி திருநாள் உருவான நரகாசுர வதம் செய்த கதையில் மாயவனான கண்ணனால் நரகாசுரனை வதம்செய்ய முடியாமல் சத்தியபாமாவே நரகாசுரனை வதம்செய்வார். அது ஏன்?

கண்ணன் என்ற மாயவன் மாயையின் உருவகம். மாயையே உயிர்களுக்கு ஆசைகளை உண்டுபண்ணி அறிவை மயக்குகிறது. மாயையிலேயே ஆணவம் உருவாக்குகிறது. எதனால் ஆணவம் உருவாகியதோ எதனில் ஆணவம் உருவாகியதோ அதனாலேயே ஆணவத்தை எப்படி அழிக்க முடியும்? அதனால்தான் மாயையின் துணையான சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார்.

மாயை ஆணவத்தை உருவாக்கினாலும் அந்த மாயை மெய்ப்பொருளில் நின்றே தோன்றுகிறது. மெய்ப்பொருளே மாயையாக உயிர்களுக்கு தோன்றுகிறது என்றும் கொள்ளலாம். அவ்வாறு மெய்பொருளில் நின்று தோன்றிய மாயைக்கு மெய்ப்பொருளே துணையாகவும் இருக்கிறது. அதனால்தான் மாயவனின் துணையை சத்திய பாமா என்கிறோம். சத்தியம் என்றால் உண்மை. மாயையின் துணையாக மாயையின் பின்னால் இருப்பது உண்மை. அதுதான் மெய்ப்பொருள்.

இங்கே நரகாசுரன் கதையில் மாயவனின் பின்னால் நின்று சத்தியபாமா நரகாசுரனை அழிக்கிறார். நாம் வாழ்வது மாயை சார்ந்த வாழ்வைத் தான். இந்த மாயையில் நின்றே நாம் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நாம் கடவுளை வழிபடுவதும் மாயையில் நின்றே. கடவுள் எமக்கு உண்மையை உணர்த்துவதும் மாயையின் மூலமே. கடவுள் எம் அறியாமையை நீக்குவதும் மாயையில் நின்றே.

எம் எல்லோருக்குள்ளும் இருக்கும் நரகாசுரன் என்ற அறியாமையால் உருவான அரக்கனை அழிப்பதற்கு மெய்ப்பொருளாம் இறைவனது துணை வேண்டும். இறைவனின் அருளை மாயையை சார்ந்து நின்று வழிபடுவதன் மூலமே அடையமுடியும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் திருநாளே தீபாவளி திருநாள்.

எம்முள் இருக்கும் நரகாசுரன் கொல்லப்படும் போது அகஒளி பரவும். உண்மையை உணர்ந்து கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.



Friday, August 4, 2023

பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம்?

படைப்பின் கடவுள் யார்?
பிரம்மா, மாயவன், சக்தி, சிவம்..

நாம் கண்ணால் பார்க்கக்கூடிய பிரபஞ்சம் உண்மையானது கிடையாது, அது உண்மை என்று உயிர்களுக்கு தோன்றுவதற்கு மாயையே காரணம். மாயை என்பது அறிவின் மயக்கம். அறிவின் மயக்கத்தினால் இந்த உலகம் உண்மையானதாக தோன்றுகிறது, அவ்வாறு அறிவை மயக்குவது ஆன்மாவுடன் சேர்ந்து நிற்கும் ஆணவமே ஆகும். அதனால்தான் உயிர்களுக்கு இந்த உலகம் தோன்றுவதற்கு மாயவனே முதற்காரணம் என்று கூறுகிறார்கள்.

மாயவன் என்றால் இருள் மலம் எனப்படும் ஆணவத்தின் குறியீடு. ஆணவத்தினால் தான் மாய நிலை உயிர்களுக்கு தோன்றுகிறது. அதனால்தான் மாய நிலையை உருவாக்குபவன் என்னும் பொருளில் மாயவன் என்கிறோம். அவன் உயிர்களுக்கு இருளாக இருப்பவன் என்னும் பொருளில் கிருஷ்ணன் என்கிறோம்.

உயிர்களுக்கு உலகங்கள் உண்மை என்று தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்றால், இந்த உலகங்கள் இல்லையா? இல்லை ஏதாவது ஒன்று இருக்கிறது அதுதான் வேறு விதமாக தோன்றுகிறதா? அப்படியானால் அந்த ஏதாவது ஒன்று தோன்றுவதற்கு உண்மையாக யார் காரணம்? 

நாம் காணும் உலகங்கள்/ பிரபஞ்சம் என்பவை உண்மையான தோற்றம் இல்லை என்றாலும் அங்கு அவ்வாறு ஒன்று இருக்கிறது. இறைவனின் ஆற்றல் நிலையில் ஆன்மாக்கள் நின்று செயலாற்றும் நிலையே மாயையினால் பிரபஞ்ஞசமாக தோன்றுகிறது.

இறை சக்தியில் ஆன்மாக்களின் சேர்க்கையும் செயல்களுமே உடலாக உலகமாக பிரபஞ்சமாக என்று தோன்றுகின்றது. இங்கே பொருட்களாக நாம் காண்பவை அனைத்தும் ஆற்றலின் நிலைகளே. இது அறிவின் வெளிப்பாட்டால் ஆற்றல் நிலை என்றும், ஆணவம் உண்டாக்கும் மாயையால் பிரபஞ்சம் என்றும் உடல் என்றும் ஆன்மாக்களுக்கு தோன்றுகிறது. 

மனித உடலை அனுபவப் பொருளாக கொண்டு அனுபவிக்கும் ஒரு ஆன்மா எமக்குள் இருப்பது போல, இந்த பிரபஞ்சம் என்பதை அனுபவப் பொருளாக கொண்டு ஒரு ஆன்மா இருக்கிறது. அதுதான் பிரம்மா எனப்படுகிறது.

மனிதன் எப்படி அனைத்து செயல்களையும் தானே செய்வதாக எண்ணுகிறானோ, அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் அனைத்தும் தன்னால் செய்யப்படுவதாக பிரம்மா எண்ணிக்கொள்கிறான். ஆனால் பிரம்மன் என்பவனும் நியதியின் படி பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி நிலைக்கு உட்பட்ட ஒரு ஆன்மாவே ஆகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நடக்கும் செயல்களை அனுபவிக்கும் ஆன்மா பிரம்மா எனப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான அறிவை மயக்கும் மாயையை உண்டாக்கும் ஆணவ நிலை மாயவன் எனப்படுகிறது.

மாயையை நீக்கி பார்த்தால் தெரியும் இறைவனின் ஆற்றல் நிலை சக்தி எனப்படுகிறது. 

இந்த ஆற்றல் நிலைகளை கடந்து வெளிப்படா நிலையில் இருக்கும் ஆற்றல் மூல பேரிருப்பு சிவம் எனப்படுகிறது.

பெரும்பாலான இந்துக்கள் ஏன் பிரம்மனை வழிபடுவதைக் கைவிட்டார்கள் என்றால் இதுதான் காரணம். அவனது விருப்பம் தேவை எதுவும் ஆன்மாக்களுக்கு தேவைப்படவில்லை. அவனும் எம்மைப் போன்ற ஒரு ஆன்மாவே, இல்லை அப்படியும் சொல்ல முடியாது மனிதர்கள் கூட சுய விருப்புடன் செயலாற்ற முடியும். ஆனால் பிரம்மா என்பது வெறும் பிரபஞ்ச அனுபவத்தை அனுபவிக்கும் ஒரு நிலையே என்று கருதினார்கள். அதனால் ஏன் வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பிரம்மனை கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் மாயவன் இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடும். பொதுவாக நாம் அனைவரும் உலகியல் வாழ்க்கை மீது பற்றுதல் உடையவர்கள். இவை எல்லாம் பொய் என்று ஆகிவிட்டால் இந்த வாழ்வை வாழமுடியாது. நாம் உலகியல் வாழ்வை வாழ்வதற்கு இந்த மாயை ஆணவம் எல்லாம் அவசியம் ஆகிறது. அதனால்தான் உலகியல் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் மாயவனை கிருஷ்ணனை வழிபடுகிறார்கள்.

மாயையில் தோன்றினாலும், உண்மை நிலையில் நின்று பார்த்தாலும் எல்லாம் சக்தியின் வடிவமாகவே உள்ளது. அதனால் உலகியல் வாழ்விலும் சரி, முக்தியை நோக்கிய பயணத்திலும் சரி சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது. சிவத்தை நோக்கி ஆன்மா பயணிக்க வேண்டும் என்றாலும் அதற்கும் சக்தி தேவை. அதனால் உலகவாழ்வை விரும்புபவர்கள் முக்தி நிலையை வேண்டுபவர்கள் இருவருமே சக்தியை வழிபடுகிறார்கள்.

முக்தி நிலையை வேண்டுபவர்களும், உலக வாழ்வில் இருந்து கொண்டே அமைதியை, ஞானத்தை வேண்டுபவர்களும் சிவத்தை நோக்கி நிற்கிறார்கள். சிவத்தை வழிபடுகிறார்கள்.

இப்போது சிந்தித்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் என்பது சிவ சக்தியில் இருந்து தோன்றினாலும் பிரம்மா எனப்படும் அந்த ஆன்மாவில் தோன்றிய ஆணவத் தூண்டலே காரணமாக இருக்கிறது. 

பிரம்மா என்ற அந்த ஆன்மா இருந்தால் தானே அதற்கு தூண்டல் உண்டாக முடியும். ஆகவே பிரபஞ்ச படைப்பின் காரணம் பிரம்மா என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் பிரம்மனை படைப்பின் கடவுளாக குறிப்பிடுகிறார்கள்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -48



இந்த ஆலயத்தை வழிபட்டால் காதல் கைகூடுமாம் -மோகவன கோட்டம்

 ஒரே இடத்தில் 11 தெய்வங்கள்

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி.. 

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி.. இலங்கையில் இவ்வாறான ஒரு கோயில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் எல்லைக் கிராமமான விசுவமடு கிராமத்தில், விசுவமடு குளத்தின் கிழக்குக் கரையில், வனப்பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த கோயில் கோட்டம். இதற்கு மோகவன கோட்டம் என்று ஒரு பெயரும் உள்ளது.

கிராம மக்களால் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் சிவன் அம்மன் முருகன் நாகதம்பிரான் அனுமன் என்று கடவுள் மற்றும் தெய்வங்களாக பதினொரு பேர் ஒரே வளாகத்தில் இருந்து அருள்கின்றனர். 

இது மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பண்டார வன்னியன் குருவிச்சிநாச்சி காதல் கதையுடன் சம்பந்தம் உள்ள கோயில் என்று சிலர் கூறுகின்றனர். குருவிச்சிநாச்சி என்பவள் வன்னிப் பகுதியை ஆண்ட கடைசி மன்னன் பண்டார வன்னியனின் காதலி. தன் காதல் கைகூட பண்டார வன்னியன் வழிபட்ட தலம் என்றும், காதல் கைகூடியதால் பண்டார வன்னியன் கோயிலை புனர்நிர்மாணம் செய்வித்தான் என்றும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பண்டார வன்னியன் தெய்வமாக போற்றப்பட்டு பூசை செய்யப்படும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆலயத்திற்கு வந்து வீரபத்திரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதும் நிறைவேறாத காதல் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி அறிந்து யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மலையகம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் காதல் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தூர இடங்களில் இருந்தும் சில காதலர்கள் வந்து செல்கின்றனராம். 

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த ஆலயம் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் வன எல்லையில் அமைந்துள்ளது. உயர்ந்து வளர்ந்த மரங்கள். அமைதியான சூழல். குளிர்மையான காற்று. தெய்வங்களுக்கு என்று சேர்ந்தும் தனித்தும் என்று பல சந்நிதிகள் என்று ஒவ்வொன்றும் இரசித்து அனுபவிக்கும் வகையில் உள்ளது.

நிச்சயமாக எமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால்..

இல்லை இல்லை.. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் அனைவரும் செல்ல வேண்டிய இடம். ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் அதுதான் மோகவன கோட்டம்.

ஆம், இதற்கு மோகவன கோட்டம் என்று பெயர்.







மரணத்தின் பின் ஆன்மா என்ன செய்யும்?

உடல்தான் உருவாகிறது வளர்கிறது அழிகிறது. ஆனால் ஆன்மாக்களுக்கு அழிவு என்பது கிடையாது. அப்படியானால் மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் என்ன செய்யும்?

உங்களை எந்த ஒரு சத்தமும் கேட்காத ஒரு இருட்டு அறையில் கை கால்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு பசி தூக்கம் எதுவும் வராமல் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள். உங்களால் என்ன செய்ய முடியும். 

ஆம், மரணத்தின் பின்னர் ஆன்மாக்கள் இவ்வாறுதான் இருக்கும். அதற்கு உடல் என்னும் கருவி இப்போது இல்லை. அதனால் எதனையும் பார்க்க முடியாது, கேட்க முடியாது, தொட முடியாது,சுவைக்கவோ மணக்கவோ முடியாது. அதனால் நடமாடவோ யாருடனும் போசவோ என்று எதுவும் முடியாது. இப்போது அந்த ஆன்மாக்களால் செய்யக்கூடியது அந்த ஆன்மாவின் ஞாபகத்தில் இருக்கும் விடயங்களை அசைபோடுவது மட்டும் தான்.

நல்ல செயல்களை செய்து மகிழ்ச்சியான நினைவுகளை வைத்திருக்கும் ஆன்மாக்கள் அந்த நினைவுகளால் மகிழ்ந்திருக்கும். தீய செயல்களை செய்து கோபம் விரக்தி வஞ்சகம் துக்கம் செயல்விருப்பம் என்பவற்றை நினைவுகளில் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் துன்பத்தில் வருந்தி உழலும். 

நாம் ஒரு கெட்ட கனவு காணுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கனவு தரும் துயரம் எவ்வளவு கொடுமையானது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கனவில் இருந்து விழித்தால் மட்டுமே அந்த துயரத்தில் இருந்து நாம் விடுபட முடியும். இங்கே மரணத்தின் பின் துயரப்படும் ஆன்மாக்கள் உடனே விழித்து அந்த துயரத்தில் இருந்து விடுபட முடியாது. 

நாம் உடலோடு இருந்தாலும், உடல் இல்லாமல் இருந்தாலும் ஆன்மா தான் எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. மரணத்தின் பின்னர் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய நினைவுகளை உடல் என்ற மாயையை நீங்கி நின்று பார்க்கிறது. அவ்வாறு ஆன்மாக்கள் தாங்கள் செய்த நற்செயல்களால் அனுபவிக்கும் நல்ல நினைவுகளால் ஆன மகிழ்ச்சியாக அனுபவமே சொர்க்கம் எனப்படுகிறது.

தீய செயல்களை செய்த ஆன்மாக்கள் தாம் செய்த தீய செயல்களின் விளைவாக அனுபவிக்கும் கொடுமையான நினைவுகளும், அது அனுபவிக்கும் துயரமுமே நரகம் எனப்படுகிறது. இவ்வாறு நரக அவஸ்தையை அனுபவிக்கும் ஆன்மா, அந்த கொடும் துயரத்தை அனுபவித்து அனுபவித்து களைப்படைந்த பின்னர் அதிலிருந்து விடுபட துடிக்கும். ஆனால் அது விடுபடுவதற்கான ஒரேயொரு வழி மீண்டும் ஒரு பிறப்பை எடுப்பதுதான். 

இறைவன் விரும்பு வெறுப்பு அற்றவன். அவன் ஆன்மாக்களின் விருப்பங்களை ஒருபோதும் தடை செய்வதில்லை. அதனால் நரக துன்பத்தை தாங்க முடியாமல் மீண்டும் பிறப்பு ஒன்றினை எடுக்க விரும்பும் ஆன்மாவை அதற்கு அனுமதிக்கிறான். ஆனால் அந்த ஆன்மாவில் எஞ்சி நிற்கும் கர்மபலனால் நற்பிறவி கிட்டாமல் மீண்டும் ஒரு இழிவான பிறவியே கிட்டுகிறது.

ஆனால் நற்செயல்களை செய்து சொர்க்க நிலையில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஆன்மாக்கள் நீண்ட ஓய்வின் பின்னர் முக்தி நிலையை நோக்கி இருந்ததைவிட ஓர் உயர்ந்த பிறப்பை எடுக்கிறது.

அவ்வாறு உயர் பிறப்புக்களை எடுத்து தமது கர்ம கணக்குகளை நீக்கும் ஆன்மாக்கள் பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு முக்தி நிலையை அடைகின்றன.

நாம் எமது வாழ்வில் எதனை சேமிக்க போகிறோம். பணம் புகழ் பதவி சொந்தங்கள் நண்பர்கள் இவற்றையா? அல்லது நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு எம்மை உயர்த்தும் நற்பலன்களையா? 

நரகத்தீ என்பது விறகு கொண்டு மூட்டும் நெருப்பல்ல, அது நினைவில் எழும் தீ.. விறகுத் தீயை நீரூற்றி அணைக்கலாம். நினைவுகளை எப்படி அணைப்பது?

தனிமையில் முழுஇருளில் நிசப்தத்தில் எந்த ஒரு அசைவும் இன்றி கண்கள் மூடி விழித்திருந்து பாருங்கள். உங்களால் மகிழ்ச்சியாக நின்மதியாக இருக்க முடிகிறதா என்று பாருங்கள். மரணத்தின் பின்னர் எது வரையறை என்று தெரியாத காலத்திற்கு நாம் அவ்வாறுதான் இருக்கப் போகிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நீங்கும் போது எந்தப் புலனும் கிடையாது. எதையும் அறியவோ செய்யவோ முடியாது. ஓய்வின்றி வரும் இந்த நினைவுகள் மட்டுமே உங்களுடன் இருக்க போகிறது. உங்கள் நினைவுகளே சொர்க்கத்தை நரகத்தை உங்களுக்கு வழங்கப் போகிறது. மரணத்தின் பின்னும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது எதுவோ அதை மட்டுமே செய்வோம்.

#சர்வம்_சிவமயம்



Thursday, July 20, 2023

பிரபஞ்சம் எதனால் ஆனது?

பிரபஞ்சத்தின் தோற்றம் இறைவனின் தோற்றமா?

இந்த பிரபஞ்சமே உண்மை என்பது உலகாயதம்..
இந்த பிரபஞ்சம் உண்மை என்பது வைணவம்..
இந்த பிரபஞ்சமே மாயை என்பது ஸ்மார்த்தம்...
இந்த பிரபஞ்சம் மாயையால் தோன்றுவது என்பது சித்தாந்தம்..

இந்த பிரபஞ்சமே உண்மை என்று கூறுபவர்கள் இந்த ஜடப்பொருளும் அதன் ஆக்கமும் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் போவதில்லை. அது அவ்வாறே இருக்கிறது என்று கொள்கிறார்கள். இதை எப்படி இல்லை என்று சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். இன்றைய அறிவியல் என்பது கூட இந்த பிரபஞ்சமும் ஜடப்பொருளும் உண்மை என்ற அளவிலேயே தனது தேடல்களை தொடர்கிறது. அது தவறில்லை. அது அவர்களின் அறிவு வரம்புக்குள் சரியாக இருக்கலாம். 

ஆனால் பிரபஞ்சமே மாயை என்பதும், இந்த பிரபஞ்சம் மாயையால் உருவானது என்பதும் சற்று ஆழமான பார்வை. ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய அளவில் உள்ள ஒன்று ஒரு பெரிய உருவமாக தோன்றுகிறது என்ற உண்மையே இந்த பிரபஞ்சம் மாயையால் உருவானது என்பதன் அடிப்படை. இங்கே நாங்கள் ஜடப்பொருள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின்  தொடுகை உணர்வுள்ள ஒரு தோற்றநிலை மட்டுமே. இந்த ஆழமான உண்மையின் அடிப்படையில் நின்றே இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயையால் தோன்றுகிறது  என்று கூறுகிறார்கள். 

உண்மையில் மாயை என்பது ஜடப்பொருளோ ஜடப்பொருளின் மூலமோ கிடையாது. மாயை என்பது ஆற்றலை ஜடப்பொருளாக காட்டிநிற்கும் நிலையாகும். நாம் ஜட பொருட்கள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் தொடு உணர்வுள்ள காட்சி நிலைகள்.

இந்த மாயநிலை என்பது ஆற்றலின் ஒரு நிலையே. நாம் பஞ்ச பூதங்கள் என்று சொல்பவை அனைத்தும் ஆற்றலின் வேறு வேறு நிலைகளே அன்றி வேறு வேறு பொருட்கள் கிடையாது.

ஆற்றல் இந்த மாயா நிலையில் காக்கப்படும் வரையிலேயே அது ஜடபப்பொருளாகவோ , அல்லது பஞ்சபூதங்களாகவோ இருக்கும். இவ்வாறு ஆற்றலை பஞ்சபூதங்களாக காட்டும் மாயா நிலை காக்கபடுவதை செய்வதை மாயவன் என்கிறோம். மாயவன் என்றால் இந்த மாயா நிலையை காத்து நிற்பவன் என்று கொள்ளலாம். 

இந்த பிரகிருதி எனும் படைப்பின் எல்லைக்குள் மட்டுமே இந்த மாயை என்னும் நிலை இருக்கிறது. படைப்பின் எல்லைக்கு வெளியே இந்த மாயை தோன்றாது. 

ஆன்மாக்களின் அறிவை மறைத்து மயக்கத்தை உண்டாக்குவது இருள் மலம் எனப்படும் ஆணவமே, இது ஆன்மாகளுடன் அனாதி முதல் சேர்ந்தே இருக்கிறது. இந்த அறிவின் மயக்கமே ஆற்றலை ஜடமாகவும், பஞ்ச பூதமாகவும், இந்த பிரபஞ்சமாகவும் காட்டி நிற்கின்றது. 

இந்த ஆணவம் விலகி முழுமையான அறிவு தோன்றும் போது இவை எல்லாம் ஆற்றலின் நிலைகளேயன்றி உண்மையான பொருள் இல்லை என்று உணரமுடியும். எமக்கு இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பது இந்த ஆணவமே. 

இந்த பிரபஞ்சம் என்பது இறைவன் உயிர்கள் ஆணவம் என்னும் மூன்றும் சேர்ந்தே தோன்றி நிற்கிறது. மூன்றில் எது ஒன்று இல்லை என்றாலும் இந்த பிரபஞ்சம் என்பது தோன்றாது.

இங்கே பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆணவம் என்னும் இருளே முதற் காரணம். யாருக்கு இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது என்றால் உயிர்களுக்கே அது தோன்றுகிறது. ஆணவத்திற்கோ, கடவுளுக்கோ இந்த பிரபஞ்சம் தோன்றாது. எது இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது என்றால், இறைவனின் வெளிப்படு ஆற்றலே உயிர்களுக்கு பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது. 

இப்போது சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைக்கு மறுபடி வாருங்கள். இறைவன் ஆன்மா ஆணவம் என்னும் மூன்று மட்டுமே அனாதியில் இருந்தது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு எது காரணம் என்றால் ஆன்மாக்களுக்கு தோன்றிய விருப்பமே காரணமாகும். ஆகவே ஆன்மாவே பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது. அதற்கு அவற்றின் ஆணவ மயக்கமே காரணமாக இருக்கிறது. இறைவனின் ஆற்றல் ஆன்மாக்களுக்கு பிரபஞ்சமாக தோன்றி நிற்கிறது.

இங்கே பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான ஆன்மாவே பிரம்மன் எனப்படுகிறான். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான ஆணவம் என்னும் இருள் நிலையே கிருஷ்ணன் எனப்படுகிறான். இந்த அறிவை மயக்கும் இருளே இந்த பிரபஞ்சம் என்னும் மாய நிலையை தோற்றுவிப்பதால், அது அழியாமல் காப்பதால் அவன் மாயவன் எனப்படுகிறான்.

ஆணவமே விருப்பத்தை உண்டாக்கியது. அதனால்தான் மாயவனின் தொப்புள் கொடியில் இருந்து பிரம்மன் தோன்றி நிற்பதாக குறியீடு செய்யப்படுகிறது. அதாவது ஆணவத்தின் விருப்ப தூண்டுதலுக்கு ஆளான ஆன்மாவே படைப்பை/செயலை மேற்கொள்கிறது. ஆணவம் இல்லாவிட்டால் உயிர்களுக்கு விருப்பம் தோன்றாது. விருப்பம் இல்லாவிட்டால் எந்த செயல்களும் கிடையாது. அதனால்தான் பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணம் மாயவன் என்கிறோம். 

இங்கே பிரபஞ்சமாக தோன்றி நிற்பது இறைவனின் ஆற்றலே. இந்த பிரபஞ்ச மாயையை நீக்கி பார்த்தால் இறைவன் தோன்றுவாரா என்று ஒரு கேள்வி எழலாம். பிரபஞ்சமாக தோன்றி நிற்பது இறைவனின் ஆற்றலே அன்றி இறைவனல்ல. அதனால் மாயையை நீக்கி பார்த்தால்  இறைவனின் ஆற்றலே எமக்குத் தோன்றும். இறைவன் தோன்றமாட்டான்.

மாயவனைக் கடந்தால் தெரிவது சிவமல்ல சக்தியே.. சிவம் வெளிப்படாதது.. அது தோன்றாதது. சித்தத்தில் நின்று உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும்.

இந்த பிரபஞ்சம் மாயையால் தோன்றுகிறது என்பதை உணர்ந்தவர்கள் இறைவன் என்பதை அந்த மாயையை நீக்கி தெரியும் ஆற்றலில் இருந்து உணர்ந்து கொள்கிறார்கள். 

இந்த பிரபஞ்சம் என்பது உண்மையானது என்பவர்கள் ஆணவமே கடவுள் மாயையே கடவுள் என்று நம்புகிறார்கள். உலகாயதர்கள், பரமார்த்தவாதிகள், இன்றைய வைணவ பிரிவுகள் சில இவ்வாறு நம்புகின்றன.

இவற்றை எல்லாம் ஆன்மாவே உணர்ந்து கொள்வதால் ஆன்மாவையே கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். பிரம்மவாதிகள், சமண பிரிவுகள் பல இவ்வாறு நம்புகின்றன.

மாயையை நீக்கி பார்த்தால் தெரிவது சக்தியே என்றும் அதனால் சக்தியே கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள். சாக்தம் என்பது அவ்வாறான ஒரு நம்பிக்கையே. 

இவற்றை எல்லாம் கடத்த பின்பும் ஒன்று இருக்கிறது அதுதான் கடவுள் என்பவர்கள் சித்தாந்த வாதிகள்.

அப்படியானால் கிருஷ்ணன் பிரம்மன் சக்தி என்பது எல்லாம் கடவுள் இல்லையா என்று சிலருக்கு தோன்றலாம். அவை அனைத்தும் கடவுள்தான். கடந்தும் உள்ளேயும் இருப்பதுதான் கடவுள் என்கிறோம். சக்தி பிரம்மன் கிருஷ்ணன் என்னும் தத்துவங்கள் அனைத்தும் கடந்தும் உள்ளேயும் இருப்பவைதான். அதனால் அவை அனைத்தும் கடவுள்தான்.

ஆனால் அவை அனைத்தையும் கடந்தும் ஒன்று உள்ளது. அதைத்தான் சிவம் என்று சொல்வர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -47



இறைவனின் வடிவம் எது?

இறைவன், ஆன்மா, மலங்கள் என்பவை முப்பொருட்கள் என்று அறிவோம். பொருள் என்று கூறியதும் எமது மனம் ஏதோ ஒரு உருவத்தை தேடுவது என்பது இயல்பானது.  ஆனால் அனைத்து பொருட்களும் எம் காட்சியளவில், தொடுதல் அளவில் உருவினைக் கொண்டதல்ல.

மெய்ஞானம் பொருட்களின் நான்கு வகையான வடிவங்கள் பற்றி பேசுகிறது.

ஜட வடிவம்
•தூல வடிவம்
•சூக்கும வடிவம்
•சொரூப வடிவம் என்பவையே அந்த நான்கு வடிவங்களாகும்.

நாம் கண்ணால் பார்க்கக்கூடிய தொட்டு அதன் பரிமாணங்களை உணரக்கூடிய வடிவம் ஜட வடிவம் எனப்படும். இந்த உலகம், எமது உடல், கல், மண், மரம் என்று எமக்கு தோன்றுவது அனைத்தும் ஜட வடிவ பொருட்டகளாகும்.

தூல வடிவம் என்பது காட்சி இருக்கும் ஆனால் அங்கே ஒரு பரிமாணங்களை தொட்டு உணரக்கூடிய ஒன்று இருக்காது. நிழல், கனவிலும் நனவிலும் தோன்றும் காட்சிகள், திரையில் தோன்றும் காட்சிகள் இவையெல்லாம் தூல வடிவ பொருட்டகளாகும். 

சிலருக்கு காட்சி எப்படி பொருளாக முடியும் அங்குதான் அப்படி ஒன்று இல்லையே என்று தோன்றலாம். நாம் ஜட வடிவ பொருட்கள் என்பவையும் அவ்வாறான ஒரு காட்சி வடிவ பொருட்கள் தான். ஆனால் அவை தொடு உணர்வு, மனித புலன்களால் உணரத்தக்க பரிமாணம் என்பவற்றை கொண்டிருக்கும். அதனால்தான் இந்த உலகம் மாயையால் ஆனது என்று கூறப்படும். அதை இன்னொரு இடத்தில் விரிவாக பார்ப்போம். நிற்க,

சூக்கும வடிவம் என்பது புலன்களால் உணரப்பட முடியாத, அறியப்பட முடியாத பொருட்களாகும். ஆன்மா என்பது சூக்கும வடிவ பொருளாகும். உதாரணமாக அணு என்று ஒரு பொருள் இருக்கிறது, இலத்திரன் என்று ஒரு பொருள் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதனை மனித புலன்களால் அறிய முடியாது அல்லவா. ஆனால் எமது தர்க்க நியாயங்களின் அடிப்படையில் அவ்வாறு ஒன்று இருக்கிறது, இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். இதுதான் அறிவு நிலையில் ஏற்கப்படும் ஆனால் புலன்களால் அறியப்படாத சூக்கும வடிவம் என்று கூறப்படுகிறது. 

அப்படியானால் இறைவனும் சூககும வடிவமா என்று ஒரு கேள்வி எழுகிறது. அதை சித்தாந்தம் மறுக்கிறது. இறைவன் புலன்களால் அறியப்படாத மனித அறிவால் உணரப்படக்கூடிய சூக்கும பொருளும் கிடையாது. இறைவன் மனித அறிவிற்கு எட்டாத, மனித அறிவால் அறியப்படமுடியாத ஒன்று என்கிறது. இதனை சொரூப நிலை என்கிறார்கள். 

இறைவன் உருவமற்ற ஒன்றல்ல, மனித புலன்களுக்கு புலப்படாத உருவினன். இறைவன் அறியப்பட முடியாத ஒன்றல்ல, மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாதவன் என்று கூறுகிறது சித்தாந்தம். அதனால்தான் எல்லாவற்றையும் கடந்து ஒன்று இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன.

உருவம் இல்லை என்றால் அங்கு அவ்வாறு ஒன்று இல்லை என்பது முடிவாகும். ஆக, இறைவனுக்கு உருவமில்லை என்பது தவறு. இறைவன் மனித புலன்களுக்கு புலப்படாத உருவினன் என்பதே சரியானது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -46



எமது ஆன்மா என்பது எது?

இந்த உலகம் இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது பற்றி நாம் பார்க்கும் முன்பு எமது ஆன்மாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் உடலாலும் உடலில் உள்ள கருவிகளாலும் பெறும் அனுபவங்களை ஏதோ ஒன்று உணர்கிறது, அனுபவிக்கிறது. அதுவே ஆன்மா என்கிறோம். ஆன்ம பொருளே அனுபவிப்பது. உடல் என்பது ஒரு ஊடகம் மட்டுமே.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு விந்தணு ஒரு கருமுட்டை என்று ஒன்றுசேர்ந்து ஒரு சிறு புள்ளியாக உருக்கொள்ளும் போதே அங்கு ஒரு ஆன்மாவும் சேர்த்து விடுகிறது அல்லது அதற்கு முன்பே அங்கொரு ஆன்மா இருக்கிறது என்று கொள்ளலாம். அந்த ஆன்மாவைச் சுற்றி பலநூறு- பல ஆயிரம் -பலகோடி என்று உயிர் கலங்கள் உயிரினங்கள் சேர்த்து குழந்தை என்பதாக மாறுகிறது. இங்கே ஒரு குழந்தையாக பிறக்கும் போதே அதில் பலகோடி உயிர்களுடன் சேர்ந்தே பிறக்கின்றன. இங்கே மனித உடல் என்பது ஒரு ஆன்மாவை கொண்டது அல்ல. அதில் பலகோடி ஆன்மாக்கள் உள்ளது. எமது உடலில் இருக்கும் அத்தனை கோடி ஆன்மாக்களுக்கும் தனித்தனியாக அனுபவிப்புக்கள் இருக்கும். ஆனால் இந்த ஒட்டுமொத்த உடலையும் தனது கருவியாக கொண்டு எந்த ஒரு ஆன்மா அனுபவத்தை பெறுகிறதோ அதையே எமது ஆன்மா என்று சுட்டுகிறோம்.

ஒரு சிறு புள்ளியாக கருவாகும் போதே ஆன்மா இருக்கிறது என்றால் அது அப்போதே பிறவிக்குரிய அனுபவத்தை பெறுகிறதா என்று தோன்றலாம். ஆனால் அது கருவில் இருக்கும் வரையில் அனுபவத்தை பெறுவதில்லை. தாயின் ஒரு உறுப்பாக ஒரு அங்கமாகவே இருக்கிறது. கருப்பையை விட்டு பூமிக்கு வந்து தன் சொந்த சுவாசத்தை பெறும்போதே, உயிர்க்காற்று உள்ளே சென்று தனியாக நின்று செயற்பட ஆரம்பிக்கும் போதே அந்த ஆன்மா அந்த பிறவிக்குரிய அனுபவத்தை பெற ஆரம்பிக்கிறது. 

மனித பிறவியில் பிறக்கும் ஆன்மாக்கள் தமது அனுபவத்தை பெற ஆரம்பித்தல் உயிர்க் காற்றின் தூண்டுதலால் நடக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பிறவிகளும் ஆன்ம அனுபவத்தை பெறுவதற்கு வேறு வேறு தூண்டுதல்கள் காரணமாக இருக்கலாம்.

இந்த உலகம் ,இந்த பிரபஞ்சம் என்பவை கருவாகி தோன்றிய பின்னர், அவை செயற்பட ஆரம்பிப்பதற்கும் வேறு ஒரு தூண்டுதல் காரணமாக இருக்கலாம்.

ஆனால் நிச்சயமாக ஒரு தூண்டுதல் காரணமாக இருக்க வேண்டும்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -45



முப்பொருள் என்றால் மூன்று பொருளல்ல

சைவ சித்தாந்தம் முப்பொருள் உண்மை என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக கோட்பாடாகும்.

இறை, உயிர்கள், மலங்கள் என்பவையே அவையாவும். 

இந்த பிரபஞ்சம் முழுவதும் எத்தனையோ பொருட்கள் இருக்கையில் எப்படி மூன்று பொருட்கள் மட்டும் உண்மை என்று கூறலாம்? இப்படி ஒரு கேள்வி எழுகிறது அல்லவா?

முப்பொருள் உண்மை என்றால் மூன்று பொருட்கள் உண்மை என்பது கிடையாது. மூன்று வகையான பொருட்கள் என்பதுவே முப்பொருள் எனப்படும்.

ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்தி காட்டுவது அவற்றின் குண இயல்புகளே ஆகும். குண வேறுபாடு இருந்தால் உருவ ஒற்றுமை இருந்தாலும் அது ஒரே பொருளல்ல, வேறு என்று அறிக.


இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பும் தோன்றியிருக்கும் போதும், ஒடுங்கிய பின்னரும் எந்தெந்த வகையில் பொருட்கள் இருக்கும் என்ற அடிப்படையில் கண்டறியப்பட்டதே இந்த முப்பொருள் என்பதாகும். அனாதி முதல் முடிவிலி வரையில் அழியா நிலையில் எக்காலத்திலும் இருக்கும் பொருட்களே முப்பொருள் எனப்படும்.

மலங்கள் எனப்படுபவை ஒன்றல்ல. அது மூன்று ஐந்து என்று பலவாறு வகைப்படுத்தப்படும். உயிர்கள் என்பவை ஒன்றல்ல. எண்ணற்ற உயிர்கள் அனாதி முதல் முடிவிலி வரை இருக்கிறது. அதன்படி பார்த்தால் முடிவிலியான பொருட்கள் எக்காலத்திலும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

அப்படியானால் இறைவன் என்பது? 

அது ஒன்றுதானே என்று சிலர் கேட்கலாம். 

அதற்குமுன் முப்பொருள் என்பதில் உள்ள குண வேறுபாட்டை அறிந்து கொள்தல் வேண்டும்.

•தன்வசத்தில் வைத்திருப்பவை

•அவற்றில் இருந்து பெற்றுக் கொள்பவை

•அவ்வாறு பெற்றுக் கொள்வதை தடுப்பவை

இந்த மூன்று குணவேறுபாடுகளை உடைய பொருட்களே முப்பொருள் எனப்படுகிறது.

இறைவன் அல்லது இறை என்பது தன்வசத்தில் வைத்திருக்கும் பொருளாகும். எதை தன்வசம் வைத்திருக்கிறது? என்று ஒரு கேள்வி எழும்..

இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் அனைத்தும், பெற்றுக்கொள்ளும் அனைத்தையும் வைத்திருப்பது என்பது அதற்கான பதிலாகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ளவை எவற்றை எல்லாம் பெறுகிறது? 

ஆற்றல், அறிவு, இன்பம், அமைதி, இடம்... 

இங்கே அறிவு என்பது ஒருவகை ஆற்றல் என்போர் உள்ளனர், அறிவால் இன்பம் கிடைக்கும் என்பர், அறிவால் அமைதி கிட்டும் என்பர்.. எது எப்படி இருந்தாலும் ஆற்றல் என்ற ஒன்று இருந்தால் அதன் மூலம் இருப்பதற்கு ஒரு இடம் வேண்டும். ஆற்றலால் அல்லது அதன் மூலத்தால் அந்த இடம் நிரம்பி இருந்தாலும் இடம் என்பது ஆற்றலை விடுத்து தனியான ஒன்றே.. ஆற்றல் என்பதும் ஒன்றல்ல..

ஆக இறை என்பதும் ஒன்றல்ல என்று துணியலாம்.

அதனால்தான் "இறைவன் என்பது ஒன்றல்ல ஓர்" என்று குறிப்பிடுகிறார்கள். 

சித்தாந்த கோட்பாட்டில் சிவம்- சக்தி என்று இரண்டாக இணையாக குறிப்பிடப்படுவது இடம்-ஆற்றல் என்பவையே ஆகும். 

சிவம் என்பது ஆற்றல் மூலத்தை கொண்ட இடம் என்பதும் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் சக்தி என்றும் கொள்க. சிவத்துள் சக்தி அடக்கம் என்பதன் விளக்கமும் அதுவேயாம்.

இங்கே எது ஒன்று தன்வசத்தில் வைத்திருப்பதை இன்னொன்றுக்கு கொடுக்கிறதோ அது இறைபொருள் என்று கொள்க. 

இன்னொன்றில் இருந்து ஒற்றைப் பெற்றால், பெற்றதை இன்னொன்றிற்கு கொடுத்தால் அதை உயிர் என்று கொள்க.

இறைபொருளில் இருந்து உயிர்ப்பொருள் பெறுவதை எது தடுக்கிறதோ அவற்றை மலங்கள் என்று கொள்க.

சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மை என்பது இவைதான். முப்பொருள் என்றால் மூன்று பொருளல்ல மூன்று வகையான பொருட்கள் என்று தெளிந்து கொள்வோம்.

இறைவனின் வசத்தில் இருக்கும் ஆற்றல்களை பெற்று அல்லது பிரதிபலித்து ஏனைய உயிர்களுக்கு வழங்கும் உயிர்கள் தெய்வங்கள் தேவர்கள் என்று குறிப்பிடப்படும். 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -44



Friday, July 14, 2023

இறைவன் ஏன் உலகத்தை தோற்றுவித்தார்?

இறைவன், உயிர்கள், மலங்கள் என்னும் மூன்றும் நித்தியமானவை. இவை மூன்றும் யாராலும் தோற்றுவிக்கப்படவில்லை என்பது சித்தாந்த முடிவு.

இந்த இறைவன், உலகம், மலங்கள் என்னும் மூன்றும் சுதந்திரமானவை.

இறைவன் உயிர்களதோ, மலங்களதோ இருப்பை மாற்றுவதில்லை. இறைவனுக்கு அவற்றின் மீது எந்த ஈடுபாடும் கிடையாது. இறைவன் செயல்கள் எதையும் செய்ய விரும்புவதில்லை. அவனுக்கு விருப்பு, வெறுப்பு, பற்று, பாசம் என்று எதுவும் கிடையாது. ஆனால் அவன் சர்வ வல்லமை உடையவன். முற்றுணர்வும், பேரறிவும் உடையவன். அவனுக்கு எல்லா ஆற்றல்களும் முடிவிலியாக உள்ளது. அவன் எல்லையற்ற பேரானந்தத்துடன் எல்லையற்ற வியாபகத்தில் ஆற்றலையும் அருளினையும் வழங்கிக் கொண்டே இருக்கிறான்.அவன் பேரறிவு உடையவன், சிற்றறிவினால் அவனை (முழுவதுமாக) அறிய முடியாது.

இங்கே அவன் என்று சுட்டுவதால் இறைவன் ஆணல்ல, ஆணல்ல என்பதனால் பெண்ணல்ல, அதனால் இரண்டும் அல்லாத அலியும் அல்ல. ஏனென்றால் இறைவன் என்பது ஒரு நபரல்ல..

இங்கே இறைவன் ஆற்றலினையும் அருளினையும் வழங்குகிறான் என்பதால் அது செயலல்ல, இறைவனது வியாபகம் முழுவதும் அவனது ஆற்றலும் அருளும் நிறைந்துள்ளது என்பதே அதன் பொருள்.

#உயிர்கள் அனைத்தும் சிற்றறிவு உடையவை. அனாதி முதல் மலங்களைப் பற்றியே நிற்பவை. புறத்தே இருந்து அனைத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடியவை. அனாதி முதலாகவே மலங்களைப் பற்றி நிற்பதனால் இறைதன்மை பற்றியோ அதன் பேரின்ப நிலை பற்றியோ அறியாமல் இயக்கமின்றி சடம்போல் கிடந்து தாம் அறிவுப் பொருள் என்பதையே மறந்திருப்பவை. இவை அனாதிமுதல் இருந்தாலும் இறைவனின் வியாபகம் முழுவதும் இல்லாமல் ஒரு சிறு பகுதியில் உறைந்து கிடப்பவை.

#மலங்கள் எனப்படுபவை நிலை மாறக் கூடிய தோற்றப் பொருட்களாகும். இவை அறிவு இல்லாதவை. சிற்றறிவு பொருந்திய உயிர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. உயிர்களுக்கு அவற்றின் உடமை என்னும் மயக்கத்தை கொடுத்து அதன் சிற்றறிவையும் மயக்கி மறைப்பவை. 

ஒரு பெரும் மலைப்பாறையில் சென்று ஒரு சிறுதூசி ஒட்டுகிறது. ஒட்டிய தூசு தானே அந்த மலையை உடைமை கொண்டதாக எண்ணிக்கொள்கிறது. இந்த தூசியைச் சூழவும் தூசிக்கு மேலாகவும் பல தூசிகள் சென்று ஒட்டிக் கொள்கின்றன. அந்த தூசிகளும் அவ்வாறே நினைக்கின்றன. அந்த கற்பாறையில் ஏற்கெனவே ஒட்டிய தூசித் துகள்களும் தமது உடமையே என்று புதிதாக ஒட்டிய தூசிகள் எண்ணிக் கொள்கின்றன. முதலில் ஒட்டிய தூசித் துகள்களால் இப்போது எப்படி முயற்சித்தாலும் அதிலிருந்து விடுபட முடியாது. பெரும் மலைப்பாறையாக முதலில் நின்றதும் இவ்வாறு ஒன்றை ஒன்று பற்றி உறைந்து நின்ற உயிர்களே என்பதையும் பொதுவாக உயிர்கள் அறிவதில்லை.

இந்த நிலையில் அங்கே விடுபட முடியாமல் ஒட்டியிருக்கும் சில துணிக்கைகளுக்கு தமது நிலை புரிகிறது. ஆனால் அவற்றால் செயற்பட முடியவில்லை. அதிலிருந்து விடுபட முடியவில்லை. விடுபடுவதற்கு வழி தெரியவில்லை. எம்மை யாராவது ஒருவர் வந்து விடுவிக்க மாட்டாரா என்று ஏங்குகின்றன.

காற்றில் சுதந்திரமாக பெருமகிழ்ச்சியோடு மிதந்து திரிந்த தூசிகள் மலைப்பாறையில் பற்றியதுதான் தமது துன்பத்துக்கு காரணம் என்பதை அறியவில்லை. தாமே மலைப் பாறையை பற்றிக்கொண்டு தம்மை விடுவிக்க யாரேனும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தன. தம் பற்றுதலை கைவிட்டால் மீண்டும் காற்றில் மிதந்து செல்லலாம் என்று அவற்றால் அறிய முடியவில்லை. 

எத்தனை வேகமாக காற்று வீசினாலும் தூசிப்படலம் வளருமே அன்றி முழுவதும் குறைவதில்லை. எத்தனை வேகமாக ஓடும் ஆற்றிலும் பாசிகள் கரைந்து இல்லாமல் போவதில்லை. குறைந்த பற்றுதல் உடைய தூசிகள் சிறிய காற்றிலேயே விடுபட்டு பறந்துவிடும். கொஞ்சம் அதிகமான பற்றுதல் கொண்ட தூசிகள் பலமான காற்றில் விடுபட்டு பறந்துவிடும். ஆனால் பாறையோடு பாறையாக ஒட்டிய தூசிகள், தாமே பாறை என்றாகி விடுபட முடியாமல் ஒட்டியிருக்கும்.

இங்கே பாறை என்பது மலங்கள் என்றும், தூசிகள் என்பவை உயிர்கள் என்றும், காற்று என்பது இறைவனின் அருள் என்றும் கொள்க, இவை உவமையே அன்றி அவை உண்மை என்று கருதலாகாது.

இவ்வாறு துன்பப்பட்டு வருந்தும் உயிர்கள் விடுபடவேண்டும் என்று பொதுவாக உணர்ந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக விடுபட வேண்டும் என்றே விரும்பும். ஏனெனில் உயிர்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமானவை. 

இறைவனுக்கு என்று எந்த விருப்பமும் கிடையாது. ஆனால் அவன் எந்த உயிர்களது விருப்பத்தையும் மறுதலித்ததில்லை. அதனால் அந்தந்த உயிர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவை செயற்படுவதற்காக இந்த உலகங்களைப் படைத்தான். படைத்தான் என்பது, பாறையில் தூசியை போல் பற்றி உறைந்திருக்கும் உயிர்கள் விடுபட்டு செயற்படுவதற்கு வழிசெய்தான் என்பதாகும்.

இறைவன் அனைத்து உயிர்களதும் பாசப்பிணைப்பை நீக்கி தன் பேரின்ப நிலையில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் எல்லா உயிர்களதும் விருப்பம் அதுவாக இல்லை. அன்றியும் உயிர்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமானவை, அவ்வாறு செய்தல் அதன் இயல்பை மாற்றியதாக ஆகும். அதுதவிர இறைவன் தன் பேரின்ப நிலையில் சேர்த்து விட்டாலும் அவை மீண்டும் சென்று மலங்களைப் பற்றியே நிற்கப் போகின்றன,ஏனென்றால் உயிரின் இயல்பு அது, அங்கே மலங்களும் இருக்கிறது. அவற்றை அழிக்க முடியாது. 

இறைவன் அவ்வாறு செயல்களைச் செய்ய விரும்புபவனாக இருந்தால் அவன் மலங்களில் இருந்து உயிர்களை விடுவித்து தன்னுடைய இருப்பில் சேர்த்துக் கொண்டிருப்பான். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு தேவை இருந்திருக்காது.

அடுத்து இந்த உயிர்கள் மலங்கள் இரண்டும் எங்கே இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். அவை இரண்டும் இறைவனின் பேரிருப்பின் உள்ளேயே இருக்கின்றன. இறைவனின் பேரிருப்பில் புறக்கணிக்க தக்க ஒரு சிறு பகுதியிலேயே உயிர்கள் மலங்கள் இரண்டினதும் இருப்பு ஒடுங்கி நிற்கிறது. 

செயலற்ற நிலையில் அறிவு மயக்கி கல்போல் கிடந்த உயிர்கள் சிற்றறிவினை மீண்டும் பெற்று அதன் மூலம் உண்மையை உணர்ந்து மலங்கள் மீதான பற்றினை விடுத்து சுதந்திரமாக மாறுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த பிரபஞ்சம் எதைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றால் இந்த உயிர்களையும் அவை பற்றி நிற்கும் மலங்களையும் கொண்டே தோற்றுவிக்கப்பட்டது.

இறைவனின் பேரிருப்பின் உள்ளேயே இறைவனது சக்தியின் உள்முகத் தூண்டனால் இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது.

சிவனை ஒரு யோகியின் வடிவில் கண்களை மூடி தியானிப்பவராக உருவகப் படுத்த இதுவே காரணம். இறைவனைக் கடந்து எதுவும் கிடையாது. அதனால் இறைவன் வெளியே பார்ப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் தான் சிவனது உருவம் கண்கள் மூடியவாறு உருவகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் மாற்றம் அவனது உள்முகத் தூண்டலினால் நடக்கிறது. அவனது செயல்கள் அனைத்தும் அதனாலேயே நடக்கிறது. அவன் தனது ஞானத்தாலேயே அனைத்தையும் உணர்ந்து கொள்கிறான். அதுதான் அந்த மூன்றாவது கண். அவன் கண்களால் எதையும் பார்பவனல்ல, ஞானத்தாலேயே அனைத்தையும் உணர்ந்து கொள்கிறான்.

உயிர்கள் அனைத்தும் தமது இயல்பாய் உள்ள அறிவு மயக்கத்தால் அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டது என்றால்,

அது எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது..
இன்னொரு பதிவில்....

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -43



அந்தகரணம்

மனிதர்களுக்கு ஐந்து புலன் உறுப்புக்கள் உள்ளது. ஆனால் ஆறு அறிவு உள்ளது என்கிறோம். கண்ணால் பார்த்து காதால் கேட்டு மூக்கால் முகர்ந்து நாக்கால் சுவைத்து தோலால் தொடுதல் உணர்ந்து என்று ஐந்து வகையான செயல் அறிவுதானே மனிதர்களுக்கு உள்ளது. அப்படியானால் எப்படி ஆறு அறிவு என்று கூறலாம். 

ஐந்து புலன் உறுப்புக்களும் தம்புலன்களால் உணரப்பட்டவற்றை பகுத்துத் தானே அறிகிறது. அப்படியானால் பகுத்தறிவு என்று தனியாக இல்லை அல்லவா. 

பகுத்தறிவு என்று ஒரு புலன் இருந்தால் அதற்கு என்று ஒரு புலனுறுப்பு வேண்டும் அல்லவா?

கண் என்ற புலனுறுப்பு இருந்தால் தான் பார்க்க முடியும் காது என்று ஒரு புலனுறுப்பு இருந்தால்தான் கேட்க முடியும், அப்படியானால் பகுத்தறிதலுக்கு என்று ஒரு புலனுறுப்பு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பகுத்தறிவு என்று ஒரு அறிவு தனியாக இல்லை எனலாம்.

அதனால்தான் பௌத்த மதத்தின் பல பிரிவுகள் மனிதர்களும் ஐந்தறிவு உயிர்களே என்று வாதித்ததன. நிற்க,

சித்தாந்தம் அதனால்தான் அந்த கரணம் என்ற ஒன்றைப் பற்றி பேசுகிறது. கண் காது மூக்கு நாக்கு தோல் என்னும் ஐந்து புலன் உறுப்புக்களும் வெறும் கருவிகள் என்றும் அவற்றால் எதையும் அறியவோ உணரவோ முடியாது முடியாது என்பதையும் விளக்கும். கண் ஒருபோதும் பார்ப்பதில்லை, கண் என்பது பார்ப்பதற்கு உதவும் ஒரு கருவி. காது கேட்பதில்லை அது கேட்பதற்கு உதவும் கருவி.

இங்கே ஐந்து கருவிகளாலும் உள்வாங்கப்படும் விடயங்களை ஏதோ ஒன்று அறிகிறது. ஏதோ ஒன்று உணர்கிறது. ஆனால் அந்த அறிதலும் உணர்தலும் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. அல்லது ஒருவருக்கே எல்லா நேரங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.

சில வேளைகளில் நாயும் நரியும் ஒன்றாக தோன்றுகிறது, பாம்பும் கயிறும் கூட ஒன்றாக தோன்றுகிறது, அது பார்வை கருவியான கண்ணின் குறைபாடு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சரியான வெளிச்சமும், சரியான பார்வைத் தூரமும் உண்டாகுகையில் அவை எதுவென்று சரியாக அறிய முடிகிறது. 

ஐந்து கருவிகளும் உள்வாங்கும் அனைத்தையும் ஆன்மாவே அனுபவிக்கிறது. ஆனால் நேரடியாக ஆன்மாதான் அவற்றை அறிந்து உணர்ந்து அனுபவிக்கிறதா என்று ஒரு கேள்வி எழுகிறது. ஏனென்றால் ஒரே பொருளைப் பற்றிய ஒவ்வொருவருக்கான அறிதலும் உணர்தலும் வேறுபடுகிறது. ஒரே நபருக்கே வேறு வேறு புரிதல் உண்டாகின்றன. எனவே ஒவ்வொருவரும் நேரடியாக புலன் கருவிகளால் அல்லாமல் வேறு ஏதோ ஒன்றின் மூலமாகவே அவற்றை அறிந்து கொள்கிறார்கள் என்று துணியலாம். அதுதான் அந்த கரணம் எனப்படுகிறது..

அந்த கரணம் என்றால் புலன்களால் உள்வாங்கப்படுபவற்றை தொகுத்து முடிவுசெய்து ஆன்மாவிற்கு அறிவிப்பது என்று கொள்க, அனைத்தையும் ஆன்மா தான் இறுதியில் அறிந்து கொள்கிறது என்றாலும் இந்த அந்த கரணங்கள் மூலமாகவே அவற்றை அறிந்து கொள்கிறது.

உங்கள் கண்ணின் முன்னால் இரண்டு பாத்திரங்களில் கள், பால் என்பவை உள்ளது. பார்வை அளவில் இரண்டும் ஒன்று போலவே தோன்றலாம். ஆனால் கண்ணால் அதன் மணத்தை நுகர்ந்து அறிய முடியாது அல்லவா?

சரி மூக்கினால் மண வேறுபாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கு கள்ளின் மணத்தையும் பாலின் மணத்தையும் வேறுபடுத்தி அறிய முடிகிறது. பாலின் மணத்தில் அதன் தோற்றத்தில் இருப்பதால் இது பாலாக இருக்க முடியும் என்று ஆன்மாவிற்கு ஒன்று அறிவிக்கிறது. அந்த நிலையைத் தான் அந்த கரணம் என்பார்கள்.

அந்த கரணம் என்றால் இறுதி செயல்முறை, இறுதியான செயல் என்று பொருள். நாம் புலன் உறுப்புக்களால் கண்டு கேட்டு நுகர்ந்து தொட்டுணர்ந்து சுவைத்து என்று எல்லாவற்றையும் தொகுத்து அதன் முடிவையே ஆன்மாவுக்கு அனுப்புகிறது. ஆன்மா எதனையும் முடிவு செய்வதில்லை. 

ஆன்மாவுக்கு முடிவு செய்து அனுப்பும் செயன்முறையே, அந்த செயன்முறை நடக்கும் தளமே அந்த கரணங்கள் எனப்படுகிறது. 

அந்த கரணங்கள் நான்கு என்பர்,
மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்
என்று சொல்வர்.

மனம் என்பது சந்தேகித்து அதில் இருந்து முடிவுகளை எடுக்கும் நிலையாகும். அதனால் மனம் என்பதை சந்தேக நிலை என்று கூட சொல்லலாம். இதன் முடிவுகள் அனைத்தும் இது இவ்வாறு இருக்கலாம் என்பதாகவே இருக்கும்.

புத்தி என்பது ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவாகும். இங்கே ஐயத்துக்கு இடமில்லை. இதுதான் முடிவு என்று காரண காரியங்களை வைத்து விளக்க கூடிய நிலையாகும்.

சித்தம் என்பது உணர்ந்து கொள்ளும் நிலையாகும். இது அறிய முடியாதவற்றை பற்றி உணர்ந்து கொள்ள உதவும் நிலையாகும். அறிவு அன்பு காதல் மகிழ்ச்சி இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் அவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ளவே முடியும். இது மனத்தால் உண்டாகும் நிலையற்ற உணர்வு கிடையாது. நிலையான ஒன்றை உணர்ந்து கொள்ளும் நிலையே சித்தம் எனப்படும். இது உறுதியான அறிவின் முடிவில் தோன்றும் உணர்வு.

அகங்காரம்

இது மனத்தால் உண்டாகும் உடமை எண்ணமாகும். நான் எனது என்று மனம் உண்டாக்கும் உடமை மனோபாவம் அகங்காரம் எனப்படும். இது உறுதியான உண்மையான உடமை நிலை கிடையாது. இது நிலையற்ற சந்தேகத்திற்குரிய உடமை நிலையாகும்.

அதனால்தான் அகங்காரம் என்பது மனத்திலும், சித்தம் என்பது புத்தியிலும் தோன்றும் என்பார்கள்.

இந்த மனம் புத்தி இரண்டும் முடிவு செய்யும் முறைமையின் இரண்டு நிலைகளே.. சந்தேக நிலை மனம். உறுதியான முடிவு நிலை புத்தி.

மனம் சித்தம் புத்தி அகங்காரம் என்னும் நான்கும் ஒன்றின் நான்கு நிலைகளேயன்றி நான்கு பொருளல்ல. புலனுறுப்புக்களால் உள்வாங்கப்படும் விடயங்களை ஆராய்ந்து ஆன்மாவிற்கு அறிவிக்கும் பொறிமுறையே அந்தகரணம் ஆகும்.

இது ஆன்மாவின் நான்கு முகங்கள் என்றும் சொல்வார்கள். 

அந்தகரணம் என்று சொல்லும் செயற்பாட்டை செய்யும் உறுப்புத்தானே மூளை என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் மூளை என்பது அந்தகரணம் கிடையாது. அந்தகரணம் செயற்பட உறுதுணையாக தகவல்களை சேர்த்து வைத்து வழங்கும் ஒரு உறுப்பே மூளை. நினைவகம் செயன்முறை ஆகமுடியாது. அந்தகரணம் என்பது செயன்முறை இயங்குதளம். அது முடிவுகளை எடுத்து ஆன்மாவிற்கு அறிவிக்கிறது. ஆன்மாவே முடிவு நிலையை அனுபவித்து உணர்கிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -42



பரமாத்மா பரம்பொருள் எது கடவுள்?

ஆன்மீகம் எழுப்பும் முதன்மையானதும் ஆன்மீகத்தின் அடிப்படையானதுமான கேள்வி "நான் யார்?" என்பது..

ஒரு மனிதன் நான் என்று சுட்டுவது எது என்பதை அறிவதே நான் யார் என்ற கேள்வியின் நோக்கமாகும்..

அதற்கான பதிலாக நான் என்பது ஆன்மாவே என்றும் உடல் என்பது நானல்ல அது எனது உடமை என்றும் பதில் பெறப்பட்டது.

இங்கே நாம் காணும் அனைத்தும் உயிர்கள் தான். உயிரற்ற ஒன்றை எங்கேயும் காட்டமுடியாது. மனித பார்வையில் அவற்றின் உயிர்த்தன்மையும், இயக்கமும் புலப்படாத நிலையில் இருக்கலாமே அன்றி, உயிர்த்தன்மை அற்ற இயக்கமற்ற ஏதேனும் ஒன்றை காட்ட இயலாது.

நாம் காணும் பூமி என்பது பூமியின் உடல்தான். உண்மையான பூமி என்பது அதன் ஆன்மாவையே குறிக்கும். நாம் சூரியன், சந்திரன் என்று காண்பவையும் அதன் உடல்களேயன்றி அதன் ஆன்மாவை அல்ல. இவ்வாறு நாம் காணும் அனைத்தின் உள்ளேயும் ஆன்மா என்ற ஒன்று உள்ளது. 

நாம் பூமியில் உள்ளோம், பூமி சூரிய குடும்பத்தில் உள்ளது, சூரிய குடும்பம் அண்டத்தில் உள்ளது, அண்டம் அண்டசராசரம் எனும் பேரண்டத்தில் உள்ளது, அந்த பேரண்டம் பரத்தில் உள்ளது. அந்தப் பரம்..? 

நிற்க..

இந்த அண்ட சராசரங்கள் பரத்தில் நின்று தோன்றியது, இங்கே தோன்றும் மாயையாக இருப்பவை அங்கே தோன்றா மாயையாய், மாயா மூலமாய், சுத்த மாயை என்னும் நிலையில் இருக்கும்.

அசுத்த மாயை அல்லது பிரகிருதி மாயை எனப்படுவது எமது கண்களுக்கு நேரடியாக அல்லது கருவிகள் வழியாக புலப்படுவது. சுத்த மாயை என்பது இந்த மாயைகள் தோன்ற மூலமான மூலப்பொருள். இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்தும் தோன்றுவதற்கு மூலகாரணமான மூலப் பரம்பொருள். இது கண்களுக்கு புலப்படாதது.

இங்கே பரம் என்பது அண்டம் போல தோன்றும் பொருள் அல்ல. ஆனால் பேரண்டம் முழுவதும் தோன்றுவதற்கான சுத்தமாயை என்னும் மூலப் பொருள்களை கொண்ட நிலை. இங்கே பரம் என்பது சுத்த மாயையிலான உடலைக் கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு ஆன்மாவும் உண்டு. அதுதான் பரமாத்மா எனப்படுகிறது. 

இப்போது உடல் நானா? ஆன்மா நானா? என்ற கேள்வியை இங்கே பொருத்திப் பார்க்கலாம். இங்கே பரத்தின் ஆன்மா பரமான்மா, பரத்தின் உடல் பரம்பொருள். ஏனென்றால் உடல் என்பது ஆன்மாவின் உடமைபொருள்.

இந்த பரமாத்மா, பரம்பொருள் இரண்டும் சேர்த்து குறிக்கும் பெயரே பிரம்மம் என்பது. ஆன்மாவும் உடலும் சேர்த்து தான் மனிதன் என்பது போன்றது பிரம்மம்.

பிரம்மம் கடவுளா?
பரம்பொருள் கடவுளா?
பரமாத்மா கடவுளா? 

என்ற வேறுபாடே சமய பிரிவுகளாக இங்கு இருக்கிறது.

பரமாத்மா என்பது ஒரு ஆத்மா..
பரம்பொருள் என்பது மாயா மூலம்..

பரம்பொருள், பரமாத்மா எனும் இரண்டே இருக்கிறது. அவற்றை கடந்த ஒன்று கிடையாது. அவை தானாகவே ஒன்று ஒன்றுடன் சேர்ந்து தோன்றி மறைந்தது நிலைத்து நிற்கும் என்பது பௌத்த சமயத்தின் வாதம். சாங்கிய வாதம்.

பரம்பொருள் பரமாத்மா இரண்டும் எங்கே நிலைத்து நிற்கிறதோ, எங்கே தோன்றி ஒடுங்கிகிறதோ, அவை தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் எது காரணமோ, அதுதான் கடவுள் என்பது சித்தாந்தம்.

பரம்பொருள் தான் கடவுள், பராமாத்மாதான் கடவுள் அல்லது பரம்பொருள் பரமாத்மா எனும் இரண்டும் சேர்ந்த பிரம்மம் தான் கடவுள் என்பவர்கள் சாங்கிய நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் எனலாம். 

அவர்கள் அனைவரும் பிரசன்ன பௌத்தர்கள், பிரசன்ன சமணர்கள் என்று கொள்ளலாம்.

இங்கே ஒட்டுமொத்த இந்துக்கள் என்று சொல்பவர்களும் இந்த சைவம்- சாங்கியம் என்னும் இரண்டு வாதத்திற்குள்ளும் அடங்கி விடுவார்கள்.

பி.கு:- சைவர்கள் என்று கூறுபவர்களிலும் சிவம் என்பது பிரம்மமே என்பவர்களும், பரமாத்மா தான் சிவன் என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது சித்தாந்த கருத்தல்ல..

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம்-41



Tuesday, July 4, 2023

அத்வைதம் வேறுபாடுகள்..

சைவம் -ஸ்மார்த்தம் -வைணவம் 

ஸ்மார்த்தம், சைவ சித்தாந்தம், வைணவம்(ராமானுஜர் பிரிவு) எனும் பிரதான மூன்று சமய தத்துவ பிரிவுகளும் அத்வைதம் பற்றியே பேசுகிறது.

அத்வைதம் என்றால் இரண்டறக் கலத்தல் என்று பொருள்.

இந்த மூன்று பிரிவுகளும் அத்வைதம் பற்றியே பேசுகிறது என்றாலும் அவை அத்வைதம் என்பதை விளக்கும் முறை வேறுபடுகிறது. அவை எப்படி வேறுபடுகிறது என்று பார்ப்போம்.

ஸ்மார்த்தம் கூறும் அத்வைதம் என்பது, 

சிறு சிறு பொலித்தீன் பைகளில் கடல்நீர் விட்டு அடைக்கப்பட்டு கடலில் போடப்பட்டிருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இப்போது கடலிலும் அந்த பொலித்தீன் பைகளிலும் உள்ளது ஒரே உப்புநீர் தான். கடலில் இருக்கும் உப்புநீர் பரமாத்மா என்றும் பொலித்தீன் பைகளில் உள்ள உப்புநீர் ஆன்மா என்றும் கொள்க. அந்த பொலித்தீன் பைகள் என்பதை ஆன்மாவை சூழ்ந்து நிற்கும் உடல் எனக் கொள்க. அந்த பொலித்தீன் பைகள் போன்ற உடல் நீங்கும் போது கடவுள் ஆன்மா இரண்டும் ஒன்றே என்பது ஸ்மார்த்த அத்வைதம்.

இங்கே உடல் என்பது மாயையால் உருவானது என்கிறது ஸ்மார்த்தம். அந்த மாயை நீங்கும் போது ஆன்மா தன்னைப் பரமாத்மா என்று உணரும் என்பது ஸ்மார்த்தம். 


அடுத்து 
ராமானுஜரின் வைணவ விஷிட்டாத்வைதம். அது விஷேடமான அத்வைதம் எனப்படுகிறது. சரி, அது தனது விஷேடமான அத்வைதத்தை எப்படி விளக்குகிறது என்று பார்ப்போம்..

கடல் என்பதை பரமாத்மா எனக் கொள்க, மழையின் போது கடலில் விழும் மழைத்துளிகளை ஆத்மாக்கள் எனக் கொள்க, கடலில் கலந்தபின்னர் மழைத்துளி என்பது கிடையாது. கடலில் கலந்த மழைத்துளிகளை ஒத்ததே பரமாத்மாவுடன் ஆன்மாக்கள் சேர்வது. மழைத்துளி என்பது இருந்துள்ளது. அந்த மழைத்துளிகள் கடலில் இருந்தே உருவாகி உள்ளது. அதன்படி பார்த்தால் கடலின் ஒரு அங்கம்தான் மழைத்துளி. கடலில் கலக்கும் மழைத்துளிகள் கடலின் அங்கமாக மாறிவிடும். ஆனால் மழைத்துளி கடலல்ல. இதுதான் விஷிஷ்டாத்வைதம் கூறும் விஷேட அத்வைதம்.

இங்கே உடல் என்பது மாயை என்பதை வைணவர்கள் ஏற்பதில்லை. இந்த உடல் உலகம் பிரபஞ்சம் அனைத்தும் உண்மை என்பார்கள். 


மற்றையது 
சைவசித்தாந்தம் கூறும் அத்வைதம், அதை எப்படி விளக்குவது என்று பார்ப்போம்..

கடல் என்பதை இறைவன் எனக் கொள்க, காற்றில் பறந்து வந்து கடலில் விழும் சிறு பஞ்சுத் துகள்களை ஆன்மாக்கள் எனக் கொள்க, கடலில் விழும் பஞ்சுத் துகள்கள் கடலின் தன்மையில் இயல்பில் நனைத்து மூழ்கி நிற்கும். இதுதான் சைவம் கூறும் அத்வைதம்.

பஞ்சின் கோது என்பது ஆன்மாவைப் பற்றி நிற்கும் மலங்கள் என்று கொள்ளலாம், இங்கே சைவ சித்தாந்தமும் உடல், உலகம் என்பவை எல்லாம் மாயை என்பதை ஏற்றுக் கொள்கிறது.

பஞ்சு கடலில் சேர வேண்டும் என்றால் கோது வெடித்து நீங்க வேண்டும். கோது வெடித்து நீங்க வேண்டும் என்றால் அது முற்றி பழுத்து முதிர்தல் வேண்டும்.

இங்கே பஞ்சு உருவாக பஞ்சுமரம் வேண்டும். மரம் உருவாக வித்து வேண்டும். வித்து மரமாக நிலம் வேண்டும். அது வளர்வதற்கு மழை வேண்டும். பஞ்சு காய்த்து காய்ந்து வெடிக்க வெயில் வேண்டும். வெடிக்கும் பஞ்சு கடலை சேர காற்று வேண்டும். 

இங்கே பஞ்சு என்பது தானாக உருவாகி கடலைச் சேர முடியாது. ஆன்மாவை பஞ்சு வித்துடன் ஒப்பிட்டு கொள்ளுங்கள். ஆன்மா எனும் பஞ்சு வித்து பறந்து கடலைச் சேர வேண்டும் என்றால் அதற்கு பஞ்சும் வேண்டும். அந்த வித்து பஞ்சுடனான வித்தாக விளைவதற்கு மரமாகி பூத்து காய்த்து முற்றி முதிர்ந்து வெடிக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய படிமுறையும் பலவற்றின் துணையும் வேண்டும். 

இங்கே பஞ்சு உருவாக நிலம் காற்று வெப்பம் நீர் எல்லாம் தேவை. ஆனால் இவை எல்லாம் மாயையே. ஆனால் இவை எதுவும் இல்லாமல் பஞ்சு வித்து பஞ்சுடனான வித்தாக விளைய முடியாது. இங்கே மாயையிலேயே எல்லாம் நடக்கிறது என்றாலும் அவை எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றிற்கும் காரணமாக ஒன்று உள்ளது. அதை இறைத் தன்மையை விளக்குவதே சைவ சித்தாந்தம்.

இங்கே ஸ்மார்த்தம் வைணவம் இரண்டும் ஆத்மா பரமாத்மா இரண்டும் ஒரே போன்றவை என்பதில் ஒத்து நிற்கும். அதனால்தான் அவை ஆன்மா, பரத்தின் ஆன்மா பரமான்மா என்று ஒரே பொருள் பட கூறுகின்றன.

ஸ்மார்த்தம் பரமான்னா என்பது ஒன்றே என்றும் அதில் மாயையின் பிரிப்பினாலே ஆன்மாக்களாக தோன்றுகிறது என்பதும் ஒரே ஆன்மா எனும் ஏகான்மவாத கொள்கையின் வடிவமே.

அதுபோல் வைணவம் என்பது ஆன்மாக்களின் கூட்டு ஆன்மாவே பரமான்மா என்னும் கூட்டான்ம கொள்கையின் வடிவமே. நீர்த்துளிகள் சேர்ந்தது தான் கடல், எல்லா நீர்த்துளிகளும் தனித்தனியாக பிரித்து சென்றுவிட்டால் அங்கே கடல் என்ற ஒன்று கிடையாது.

ஆழமாக பார்த்தால் ஸ்மார்த்தர்கள், வைணவர்கள் இருவருமே தனித்த கடவுள் என்ற ஒன்றை ஏற்காதவர்கள் அல்லது நம்பாதவர்கள் என்று கொள்ளலாம்.

சித்தாந்தம் ஆன்மாக்களை இறைவனை ஒத்த ஒன்றாக ஏற்பதில்லை. இறைவன் வேறு ஆன்மாக்கள் வேறு, ஆன்மாக்கள் இறைவனிடமிருந்து இறைத் தன்மையை பெற்று உணர்ந்து கொள்ள கூடியவை என்றே கூறும்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -40



வேதம்- வேதாந்தம்-வேதாந்த_வியாக்கியானம்- ஆகமம் -சித்தாந்தம்

இந்துக்கள் அனைவரும் இந்த ஐந்திற்குமான வேறுபாட்டை சரிவர அறிந்திருக்க வேண்டும். 

வேதம் 

வேதம் என்றால் அறிவு என்பர். மனிதர்கள் பார்த்து கேட்டு சிந்தித்து பரிசோதனை செய்து என்று பல முடிவுகளை எட்டினார்கள். இவை அறிவு எனப்படுகிறது. மனிதர்களின் இந்த அறிவு மனித மனங்கள்,  அவர்களின் சிந்தனைகள், செயல்கள் என்பவை எல்லாம் இயற்கையின் ஏனைய அம்சங்களுடன் சம்பந்தம் உடையன என்ற புரிதலை உண்டாக்கின. இந்து பாரம்பரியத்தில் அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவு என்று பொருள்.

உலகில் நாம் காண்பவை அனைத்தும் உண்மையான மூலமான பொருட்கள் கிடையாது. இவை எல்லாம் ஏதோ ஒரு மூலப் பொருளில் இருந்து ஆக்கப்பட்டுள்ளது. அந்த மூலமான பொருளை அறிவதே உண்மையான அறிவு என்று இந்துக்கள் அறிந்து கொண்டார்கள். இந்த பரம் முழுவதும் அந்த பொருளினால் உண்டாக்கப்படுள்ளது என்று அதனைப் பரம்பொருள் என்று சுட்டினார்கள். எனவே அந்த பரம்பொருளை பற்றி அறிதலே அறிவு என்றும், அதனைப் பற்றிய நூல்களை வேத நூல்கள் என்னும் குறிப்பிட்டார்கள்.

அந்த பரம்பொருளை அறிதலை நோக்கமாக கொண்ட, அல்லது அவ்வாறு ஒரு பொருள் உள்ளது என்ற சிந்தனையின் அடிப்படையில் எழுந்த ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் நூல்கள் மிகப் பழைமையான வேத நூல்கள் என்று நம்பப்படுகிறது.

ஒவ்வொரு உயிர்களும் ஏனைய உயிர்களால் பாதிக்கப்படும் என்பதையும், உயிர்களுக்கு தேவையான அறிவு ஆற்றல் என்பவற்றை இன்னொன்றில் இருந்து இன்னொன்றின் மூலமாகவே பெறவேண்டும் என்பதையும் உணர்த்துவதாகவே இந்த வேத நூலின் கருத்துக்கள் உள்ளன. 

உயிர்கள் அனைத்தும் தாம் கொண்ட அறிவு ஆற்றல் ஆயுள் என்பவற்றின் அடிப்படையில் வேறுபட்டவை என்றும், மற்றைய உயிர்களுக்கு பயன்படக்கூடியவை உயர்ந்தவை என்றும், அவ்வாறு உயர்ந்த உயிர்களிடத்திலிருந்து அறிவையும் ஆற்றலையும் பெறுவதற்கு ஒரு வழிமுறை அவசியம் என்றும் கூறி, அதற்கான வழிமுறைகளை விளக்குவதே இந்த வேத நூல்களாகும். இவை பொதுவாக சரியை கிரியை எனும் கர்ம வழிமுறைகளைப் பயன்படுத்தி அறிவு ஆற்றல் என்பவற்றை பெறுதல் பற்றிய பகுதியாக இருக்கும்.

இங்கே அறிவு ஆற்றல் ஆயுள் என்பவற்றில் மேம்பட்ட உயிர்கள் தேவர்கள் என்று சுட்டப்படும். இந்த தேவர்களின் இருப்பிடமும் அவற்றுக்கு தலைவனும் என்று இந்திரன் எனும் தேவன் குறிப்பிடப்படுகிறான்.

வேதங்களில் சூரியன் சந்திரன் நதிகள் மலைகள் பஞ்ச பூதங்கள் ராசி மண்டலங்கள் கிரகங்கள் என்று உலக உயிர்களிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய பலவும் தேவைதைகளாகவும், அவற்றிடம் இருந்து பயனைப் பெறுவதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்படும். 

வேதங்கள் உலக உயிர்களிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய தேவர்கள் என்று பலவற்றை குறிப்பிட்டாலும் இவற்றை எல்லாம் கடத்த ஏதோ ஒன்றும் உள்ளது என்று பல இடங்களில் சுட்டிக் காட்டி செல்கிறது. ஆனால் வேதங்கள் எவையும் கடவுள் என்று  ஏதாவது ஒன்றை குறிப்பிடவில்லை. இதுதான் கடவுள் என்றோ, கடவுள் இவ்வாறுதான் இருக்கும் என்றோ முடிவாக குறிப்பிடவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் கடத்த ஏதோ ஒன்று இருக்கிறது என்று மட்டும் வேதங்கள் உறுதியாக கூறியது.

வாய் மொழி மூலமாக குரு சிஷ்ய பரம்பரை வழியாக கடத்தப்பட்ட வேத கருத்துக்கள் ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் நூல்களாக பொ.பி 5 ஆம் நூற்றாண்டில் வியாசர் என்று அழைக்கப்படும் பாதராயனர் என்பவரால் தொகுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 


வேதாந்தம்

வேதங்கள் பொதுவாக கர்மங்கள் பற்றியே பேசுகிறது. ஆனால் வேதங்களின் ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் குரு சிஷ்ய உபதேச வடிவில் ஒரு பகுதி பின்னாளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அது உபநிடதம் எனப்படுகிறது. அது பொதுவாக அந்த வேதப் பகுதியின் நோக்கத்தை அல்லது கருத்தை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும். இது முற்று முழுதாக யோகம் ஞானம் என்பவற்றை பற்றிய விளக்கங்கள் விவாதங்கள் என்பதாகவே இருக்கும். இதுவே வேதாந்தம் எனப்படுகிறது. வேதத்தின் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் கூறப்படும் கருத்து என்று கொள்ளும் வகையில் கூறப்படுவதால் அது வேதாந்தம் எனப்படுகிறது.

இந்த வேதாந்த பகுதி எனப்படும் உபநிடதங்கள் எல்லாவற்றையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதால் அவை ஒவ்வொன்றும் மற்றயதுடன் முரண்பட்டு நிற்பது போல தோன்றும். இந்த குழப்பத்தை தீர்க்கிறேன் என்று கூறி வேதங்களை தொகுத்த வியாசர் எனப்படும் பாதராயனர் சூத்திரங்கள் வடிவில் ஒரு தொகுப்பு நூலை எழுதினார். அது பிரம்ம சூத்திரம் எனப்படுகிறது.

இந்த பிரம்ம சூத்திரத்தை படித்தால் ஒட்டுமொத்த வேதத்தினையும் படித்து அவற்றின் முடிவான கருத்தை அறிந்து கொண்டதற்கு சமமாகும் என்று பாதராயனர் கூறினார். ஆனால் இன்னொருவர் துணையின்றி அதனைப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கூறவந்த வேதாந்த கருத்து எதுவென்று யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.


வேதாந்த வியாக்கியானம்

வியாக்கியானம் என்றால் விளக்கம் என்று பொருள். இங்கே பிரம்ம சூத்திரத்தை விரிவாக விளக்க முனைந்த நூல்களே வேதாந்த வியாக்கியானங்கள் எனப்படுகிறது. 

பிரம்ம சூத்திரம் மிகவும் குறுவடிவ சூத்திரங்களாக இருந்ததால் அவை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி அவற்றை விரிவாக விளக்க முனைந்தார்கள். விளக்க முனைந்தவர்களாலும் அதனை சரியாக முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் பிரம்ம சூத்திரத்தை விளக்க முனைந்தவர்கள் ஒவ்வொருவரும் புதிய ஒரு கருத்தினை உருவாக்கி அவை ஒவ்வொன்றாக புதிய சமய கோட்பாடுகளாக மாறிவிட்டன.

சங்கரர், மத்வர், ராமானுஜர் ஆகிய மூவரும் இந்த வேதாந்த சாரம் என்னும் பிரம்ம சூத்திரத்தை விளக்க முற்பட்டு புதிய சமய பிரிவுகளை உருவாக்கி பிரபலமானவர்கள். இவர்கள் பிரம்ம சூத்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் அதன் கருத்தாக தமது சொந்த அபிப்பிராயத்தை கூறினார்கள் என்று சொல்வார்கள். இந்த மூன்று வியாக்கியானங்களும் எந்த ஒரு முடிவையும் உறுதியாக அறுதியிட்டுக் கூறி நிரூபிக்கவில்லை. 


ஆகமம்  

வேதங்கள் கூறும் தத்துவங்களை பலரும் பலவிதமாக தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வதால் அதனை சரியாக விளக்க எழுந்த நூல்களே ஆகமங்கள் என்பார்கள். வேதங்களின் கர்மகாண்டங்களில் உள்ள சரியை கிரியை என்பவற்றையும் ஞானகாண்டங்களில் உள்ள யோகவழிமுறை மற்றும் ஞான விளக்கங்களையும் ஆகமங்கள் ஒழுங்கு முறையில் கூறுகின்றன என்பர். 

ஆனால் இந்த ஆகமங்களும் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு விதமான வழங்கப்படுவதால் அவையும் ஒருவாறாக இல்லை. ஒவ்வொரு விதமான நம்பிக்கை சார்ந்தவர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் ஆகமங்களை உருவாக்கியதால் அவையும் இன்னொரு வியாக்கியானம் என்னும் நிலையிற்கு சென்றுவிட்டது. அதில் எது உண்மையான வேதக் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்று உறுதியாக கூறமுடியாது.


சித்தாந்தம்

இந்த வேத தத்துவங்களை விளக்க முற்பட்ட அனைத்து முறைகளும் காலத்தால் பழுதுபட்டுநின்றதால், வேத தத்துவங்களை அறிவுபூர்வமாக தர்க்கரீதியாக உணர்ந்து கொள்ள வழிசெய்யும் முறையே சித்தாந்தம் எனப்படுகிறது.

அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவு. இது புலன்களின் மூலம் உண்டாவது. சித்தம் என்பது புலன்களை கடந்தது. அது உணர்தலின் வெளிப்பாடாக தோன்றுவது. உணர்தலில் உறுதியாக வெளிப்படுவது.

அறிதல் உணர்தல் இரண்டும் ஒன்றின் இருவேறு நிலைகள். கற்று கேட்டு படித்து ஒன்றை அறிந்துகொள்தல் அறிவு என்றால், அதை ஆராய்ந்து உறுதியாக ஏற்றல் நிராகரித்தால் சித்தம் எனலாம். சித்தம் அறிவைத் கடந்தது, அறிவின் முழுமையான முதிர்ச்சி நிலை என்பதால் சித்தத்தில் தோன்றும் முடிவுகள் அறிவிற்கும், தர்க்கத்திற்கும் பொருந்தாத ஒன்றாக இருக்க முடியாது.

அதனால்தான் சித்தத்தின் முடிவாக கூறப்படும் சித்தாந்த கருத்துக்கள் அனைத்தும் அறிவுக்கும் தர்க்கத்திற்கும் பொருந்துவதாகவும், அவற்றால் ஏற்கப்படக்கூடியதாகவும் உள்ளன.

இந்த சித்தாந்த தத்துவங்களும் சூத்திரம் செய்யுள் பாடல் எனும் வடிவுகளில்  நூல்களாகவே கிடைக்கின்றன. அவற்றை படித்து உணர்ந்து கொள்தல் மட்டுமே அவற்றின் பொருளை உணர்ந்து கொள்வதாக இருக்கும். இல்லாமல் அவற்றிற்கு யாரோ ஒருவர் எழுதிய விளக்கத்தை படித்து அறிந்து கொண்டு அதுதான் சித்தாந்த முடிவு என்று யாரேனும் விளக்க முற்பட்டால் அது நாளை சித்தாந்த வியாக்கியானம் என்று ஆகிவிடும்.

சித்தாந்தம் என்பது வேதங்களுக்கு எதிரானது என்று ஒரு தவறான கருத்து சமூகத்தில் விரவிப்போய் உள்ளது. சித்தாந்தம் என்பது வேதாந்தம், வேதாந்த வியாக்கியானங்கள், ஆகமங்கள் என்பவற்றினால் உண்டாக்கப்பட்ட தவறான புரிதல்களை சரிசெய்யும் முறைமையே அன்றி வேதங்களுக்கு எதிரானது அல்ல. 

வேண்டுமானால் சித்தாந்தம் வேதாந்த வியாக்கியானங்களுக்கு எதிரானது என்று கொள்ளலாம். ஆனால் சைவ சித்தாந்த மரபு வேதாந்த வியாக்கியானத்தையோ வேறு எந்த புரிதல் நிலைகளையோ எதிர்க்கவில்லை. அது அவர்களின் அறிவிற்கு எட்டிய புரிதல் என்ற அளவிலேயே சித்தாந்தம் அவற்றை கடக்கிறது.

சித்தாந்தம் என்பது வேத தத்துவங்களுக்கான விளக்கமாக இல்லாமல், வேத தத்துவங்கள் கூறுவதை விளங்கிக் கொள்வதற்கான வழிமுறையாக இருக்கிறது என்று கொள்ளலாம்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -39



மாயா மூலத்தின் அளவு

 #மாயை தொடர்ச்சி..

ஒன்றே பலவாக தோன்றி நிற்பது மாயை என்று கண்டோம். சரி அந்தப் பலவாக தோன்றி நிற்கும் ஒன்று எது? அதன் அளவு எவ்வளவு?

இங்கு கண்ணாலோ கருவிகளாலோ காண முடியாத ஒன்றை எப்படி விளக்க முடியும்? இருப்பதைக் கொண்டும், மற்றவர்கள் ஏற்றுக் கொண்ட முடிவின் அடிப்படையிலும் தானே இல்லாததை  விளக்க வேண்டும்.

இன்று அணுக்கள் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அணுவின் சராசரி விட்டம் 1×10 -10m. அதாவது 0.0000000001 m. இந்த அளவுள்ள அணுவின் திணிவின் பெரும்பகுதி அதன் கருவிலேயே உள்ளது. கருவின் திணிவுடன் ஒப்பிடுகையில் கருவிற்கு புறத்தே உள்ள இலத்திரன்களின் திணிவு என்பது புறக்கணிக்க தக்கது. அணுவின் அளவுடன் ஒப்பிடுகையில் அதன் கருவின் அளவு 1/10000 பங்காகும். 

அதாவது அணுவின் அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கிலேயே அதன் மொத்த திணிவு என்று சொல்லக் கூடிய கரு இருக்கிறது. அதன்படி பார்த்தால் அணுவின் உண்மையான அளவு என்பது அதன் அளவின் பத்தாயிரத்தில் ஒரு பங்காகும்.

இதிலிருந்து அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது என்பதும் அதில் பொருட்பகுதி என்பது பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்பதும் புலனாகிறது. 

சரி அணுக்களை வெற்றிடம் இல்லாமல் நெருங்கி அதுதான் உண்மை நிலையென்று கொண்டு பார்த்தால் நாம் பார்க்கும் எல்லாப் பொருட்களையும் அதன் பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்று கூறலாம். 

சராசரியாக 1.7மீட்டர் உயரமுள்ள மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனது உண்மை அளவு பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்றால் மனிதனது உண்மையான உயரம் 0.00017 மீட்டராகும். அதாவது 0.017 cm. 0.17 mm. இது நாம் காணும் ஒரு எறும்பின் அளவைவிட சிறியது. எறும்பின் அளவைவிட சிறிய மனிதன் 6 அடி மனிதனாக தோன்றுவது மாயை தானே. இது ஒரு பொய்யான பூதாகரமாக தோற்றம் அல்லவா.

சரி பத்தாயிரத்தில் ஒன்று எனும்  இதுதான் உண்மையான அளவா என்றால் அதுவும் கிடையாது. அணுவின் ஆக்கக் கூறும் அதன் கருவும் பத்தாயிரத்தில் ஒரு பங்கிற்குள் அடங்கும் என்றால், அந்த ஆக்கக் கூறுகளும் அவற்றின் ஆக்கக் கூறில் அதேபோன்று அடங்கும். இவ்வாறு நாம் தொடர்ந்து ஆக்கக் கூறின் ஆக்கக் கூறுகள் என்று பகுத்துக் கொண்டே சென்றால் பத்தாயிரத்தின் மடங்குகளால் உண்மை உருவம் சிறுத்துக் கொண்டே செல்லும். இப்படி முடிவிலியை அண்மித்த தடவைகள் நாம் பகுத்துக் கொண்டே போகலாம். அவ்வாறான நிலையில் அந்த முதல் கூறும் மூலப் பொருளுமான மாயா மூலத்தின் அளவு இல்லை என்று சொல்லும் வகையில் புறக்கணிக்க தக்க ஒரு அளவில் இருக்கும். 

புறக்கணிக்க தக்க அளவில், மிக மிக நுண்மையான ஒன்றாக இருக்குமேயன்றி அது இல்லாத ஒன்று ஆகாது. அதனால்தான் தோற்ற மூலத்தை மாயா மூலம் என்கிறது சைவ சித்தாந்தம்.  இந்த புறக்கணிக்க தக்க ஒன்று என்னும் நிலையிலேயே சில மகாயான பௌத்த பிரிவுகள் அதனை சூனியம் என்றும் ஒன்றுமில்லாத என்று என்றும் கூறினார்கள். ஆனால் அது இல்லாத பொருள் இல்லை என்றும், ஆனால் கண்ணால் காண்பது எவையும் உண்மையான பொருள் இல்லை அவை அனைத்தும் மாயை என்றும் கண்டறிந்து வெளிப்படுத்தியதும் மகாயான பௌத்த பிரிவுகளில் ஒன்றான மத்யமிக பௌத்தமே. 

இந்த அடிப்படையில் பார்த்தால் மனிதனின் அளவு 0.17 மில்லிமீட்டர் என்பதே மிகமிக மிகைப்படுத்திய ஒரு பூதாகரமாக அளவாகும். உண்மையான மனிதனின் அளவு என்பது புறக்கணிக்க தக்க ஒரு மிகச் சிறிய ஒன்றாகும். இந்த அளவில் பார்த்தால் இந்த உலகம் இந்த பிரபஞ்சம் எல்லாம் இல்லாப் பொருட்களாக தோன்றும். மிகமிகச் சிறிய மூலம் ஒன்றே இந்த பேரண்டமாக தோன்றி நிற்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த உண்மையை மறைத்து மிகப் பெரிய ஒன்றாக மனதிற்கு தோன்றச் செய்வது உயிர்களிடம் உள்ள அறியாமை.

அறியாமை மாயையை உண்மை என்று நம்புகிறது. பொய்யான தோற்றத்தை உண்மை என்று எண்ணி மயங்குகிறது. 

அறிவு மாயையின் தன்மையை அறிந்து மெய்ப்பொருளை உணர்ந்து கொள்கிறது. 

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -38



மாயை

நாம் ஆன்மீகத்தை பற்றி, உலகத்தை பற்றி எம்மை பற்றி எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் மாயை என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இந்து சமய தத்துவங்களில் மாயை என்பது பொதுவானது என்றாலும் ஒவ்வொரு சமய பிரிவுகளிலும் பொருள் கொள்ளும் வகையில் வேறுபாடு உள்ளது. 

மாயை என்றால் ஒன்று இன்னொன்றாக தோன்றுதல் என்று பொருள். 

ஒன்றே பலவாறாக தோன்றுதல், ஒன்று தன் உண்மையான அளவில் இருந்து வேறுபட்டு தோன்றுதல், ஒன்று தன் உண்மை உருவை மறைத்து வேறு ஒன்றாக தோன்றுதல் எல்லாம் மாயை எனப்படும்.

மாயை என்பதை அறிவின் மயக்கத்தால் உண்டாகும் தோற்றம் என்பர். அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உறுதியான முடிவாகும். எமது வீடுகளில் கத்தி, கோடாரி, மண்வெட்டி என்று பல பொருட்கள் உண்டு. ஆனால் அவை அனைத்தும் இரும்பு என்னும் உலோகத்தாலும் மரத்தாலும் ஆனவை. ஆனால் எமக்கு அவை இரும்பு, மரம் என்று தோன்றாமல் கத்தி, கோடாரி, மண்வெட்டி என்றே தோன்றுகிறது. அதுதான் மாயையால் உண்டாகும் தோற்றம். அதாவது அறிவின் மயக்கத்தால் அவை இரும்பாக, மரமாக தோன்றாமல் கத்தி கோடாரி என்று தோன்றுகின்றது. அப்படியானால் அவை கத்தி கோடாரி என்று தோன்றாமல் இரும்பு, மரம் என்று தோன்றுவது தான் அறிவு என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் அறிவு என்பது அதுவல்ல. இரும்பு என்பதும், மரம் என்பதும் ஒரு மாயத் தோற்றம் என்றும், அதன் உள்ளே இருக்கும் மூலப் பொருள் எதுவென்று அறிவதுமே அறிவு.

அது எப்படி இரும்பு மாயை ஆகும் என்று சிலருக்கு தோன்றலாம். நம் எல்லோருக்கும் ஓரளவு அறிவியல் அடிப்படை தெரிந்திருக்கும். அந்த அடிப்படையிலேயே பார்ப்போம். நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் அணுக்களால் ஆனவை என்றும், அந்த அணுக்கள் அனைத்திற்கும் புரோட்டான்கள் நியூட்ரான்கள், இலத்திரன்கள் என்பவை ஆக்கக் கூறுகள் என்றும் அறிந்திருக்கிறோம்.

நாம் இரும்பு, பொன், வெள்ளி என்று பார்க்கும் பொருட்கள் முதல் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் வரை அனைத்தும் அணுக்களால் ஆனவை என்று தெரியும். அந்த அணுக்கள் அனைத்தும் புரோட்டான், நியூட்ரான், இலத்திரன் என்பவற்றால் ஆக்கப்பட்டவை என்றும் தெரியும். எப்படி கத்தி கோடாரி மண்வெட்டி என்பவை மரத்தாலும் இரும்பாலும் ஆக்கப்பட்ட பொருட்களோ அதுபோல, இரும்பு, பொன் வெள்ளி, ஆக்ஸிஜன் எனும் அனைத்தும் புரோட்டான் நியூட்ரான் இலத்திரன் என்பவற்றால் ஆக்கப்பட்டவை தான்.

கத்தியில் இருக்கும் இரும்பின் அளவும் மரத்தின் அளவும் அதன் வடிவமும் எப்படி மண்வெட்டியில் இல்லையோ அதுபோல் பொன்னில் உள்ள நியூட்ரான் புரோட்டான் இலத்திரன் அளவு வெள்ளியில் இருப்பில் இல்லை. இங்கே ஆக்கக் கூறுகள் ஒன்றான போதும் அதன் அளவில் ஏற்படும் மாறுதல்களால் வேறு வேறாக தோன்றுகிறது. 

அறிவியலின் அடிப்படையில் பார்த்தால் இந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்தும் புரோட்டான் நியூட்ரான் இலத்திரன் என்பவற்றால் ஆக்கப்பட்டவை தான். இந்த மூன்றாலும் ஆக்கப்பட்ட அனைத்தும் வேறு வேறாக தோன்றுவது மாயை தானே.

உண்மையில் நியூட்ரான் புரோட்டான் இலத்திரன் இவைதான் அனைத்து பொருட்களுக்கும் மூலமாக? அதுதான் ஆக்கக் கூறா என்றால் அதுவும் கிடையாது. இந்த புரோட்டான் நியூட்ரான் இலத்திரன் என்று சொல்லப்படுபவற்றுக்கும் ஒரு ஆக்கக் கூறுகள் உண்டு. அந்த ஆக்கக் கூறை கண்டறிந்து பார்த்தால் அதற்கும் ஒரு ஆக்கக் கூறுகள் உண்டு. இவ்வாறு நாம் முடிவிலியாக பகுத்துக் கொண்டே போகலாம். அந்த முடிவிலியான முடிவில் தோன்றும் ஆக்கக் கூறுதான் உண்மையான பொருள். அதன் தோற்ந்தான் உண்மையான தோற்றம். அந்த நிலையையே சுத்த மாயை என்பார்கள். மூலப் பொருள் மாயை நீங்கித் தோன்றும் நிலை அது.

இந்த பரத்தில் இருக்கும், பிரபஞ்சம் அனைத்தும் தோன்றுவதற்கு காரணமான மூலப் பொருள் இந்த சுத்த மாயைதான். அதனால்தான் மூலப் பொருள் மாயவன் என்று கொண்டாடப் படுகிறது. இந்த மாயை மட்டும் இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் இந்த பூமி அதிலுள்ள பொருட்கள் என்று எதுவும் கிடையாது.

இப்போது சிந்தித்து பாருங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை தானே. ஒன்றே பலவாறாக தோன்றுதல் மாயையின் இயல்பு. மற்றையது அளவில் மாறுபட்டு தோன்றுதல்.

//சரி இந்த மாயா மூலத்தின் அளவு எதுவென்று தெரியுமா? நாம் பார்க்கும் பொருட்களின் அளவு உண்மையில் எவ்வளவு? //

அடுத்த பதிவில்...

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -37



Friday, June 23, 2023

பாசுபதம்

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படும் ஒரு சமய பிரிவாகும்.

ஆதி மார்க்க சைவத்தின் மூத்த தத்துவ பிரிவாக கருதப்படுகிறது. ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட முதலாவது சைவ சமய பிரிவு என்றும் சொல்லலாம். 

இறைவன் உயிர்களின் தலைவனாக இருக்கிறான் என்று கூறி இறைவனைப் பசுபதி என்று இவர்கள் வழங்குகின்றனர்.

பதி பசு பாசம் என்னும் முப்பொருள் தத்துவத்தை, சைவ தத்துவ அடிப்படையை உருவாக்கியது பாசுபதம் என்று கொள்ளலாம். பாசத்தின் நிலைகள் பற்றி பேசுவதால் பாசுபதம் என்று அழைக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

பதி என்றால் கடவுள், 
பசு என்றால் ஆன்மா, 
பாசம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றையும் சேர்த்து குறிக்கப்படுவது.

இவர்கள் பசுபதி எனப்படும் இறைவன் செயற்காரணன் என்று கொள்கிறார்கள். 

ஒருவர் பேரின்ப நிலையை அடைய சமயம் சார்ந்த ஒழுக்க நடைமுறைகளை பேணப்படவேண்டும் என்றும், யோக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். அதனால் பாசுபதம் என்பது சாதாரண மக்களால் பின்பற்றப்படும் ஒன்றாக இருக்கவில்லை.

பசு எனப்படும் உயிர் பாசங்களால் கட்டுண்டு கிடக்கிறது என்றும் அந்த பாசக் கட்டுக்களில் இருந்து விடுபடுவதால் மட்டுமே பேரின்ப நிலையை அடைய முடியும் என்பதும் இவர்களது வாதம். ஆனால் அவ்வாறு பாசக் கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த பசுபதியால் மட்டுமே விடுவிக்க முடியும் என்பது இவர்களது நம்பிக்கை. 

எல்லோராலும் பாசுபதத்தை பின்பற்ற முடியாது. குரு சிஷ்யர்கள் என்னும் முறையில் மட்டுமே பாசுபதம் பின்பற்றப்படுகிறது. குரு தகுதியான சிஷ்யர்களை மட்டுமே தெரிவு செய்து சேர்த்துக் கொள்கிறார். சிவனை வணங்குவதற்கும் அவனுடைய அருள் வேண்டும் என்பது பாசுபத நம்பிக்கையை சார்ந்தது. அவ்வாறு பசுபதியின் அருளினால் மட்டுமே பசுக்கள் கட்டுக்களில் இருந்து விடுபட்டு துக்கநிவாரணம் பெறும் என்றும் அதுதான் முத்திநிலை என்பதும் பாசுபதர்களது நம்பிக்கை.

பாசுபதம் பதி பசு பாசம் என்று முப்பொருள் பற்றிப் பேசினாலும், அதன் பதியைப்பற்றிய புரிதல் என்பது சித்தாந்தம் கூறும் சிவ தத்துவங்களுடன் பொருந்தாது நிற்கிறது.

வேண்டினால் அருளுவார், தெரிவுசெய்து அருளுவார் என்பவை எல்லாம் சித்தாந்தம் கூறும் கடவுள் பற்றிய கோட்பாடுகளுக்கு மாறானது. 

கடவுள் அவதாரங்களாக தோன்றுவார், கர்மங்களை ஆற்றுவார் போன்ற தத்துவார்த்த வேறுபாடுகளால் பாசுபதம் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -36



ஆன்மாவின் அளவு

ஆன்மீகத்தின் அடிப்படையாக இருப்பது ஆன்மா. நான் என்றால் அது ஆன்மாவையே குறிக்கும் என்கிறது ஆன்மீகம். அப்படியானால் இந்த ஆன்மா எங்கே இருக்கிறது? அதன் அளவு எவ்வளவு? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஒரு ஆணும் பெண்ணும் கூடி, ஒரு கருமுட்டை ஒரு விந்தணு என்பவை சேர்த்து ஒரு சிறு துணிக்கையாக கரு உருவாகும் போது அங்கு ஆன்மாவும் இருக்கிறது. அப்படியானால் ஒரு சிறுகலமாக உருவான கருவின் உள்ளேயே அது தோன்றிநிற்பதால் அது ஒரு அணுவைப் போன்று சிறிதாக தோற்றமளிக்கிறது.

இவ்வாறு அணுவிலும் சிறிதாக ஆன்மாவை கருதவைப்பது ஆணவம் என்பது ஆன்மீகத்தில் தேர்ந்தோர்களது வாதம். அப்படியானால் ஆன்மாவின் அளவு எவ்வளவு?

அதற்கு முதலில் உயிர்கமைப் பற்றி இருக்கும் ஐந்து விதமான உறைகளைப்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிர்களைச் சுற்றியும் இந்த உறைகள் தோன்றும். அவை ஒவ்வொன்றாக மறைந்து இல்லாமல் போவதே முக்திநிலை என்று கூறப்படுகிறது.

அன்னமயகோசம்
பிராணமயகோசம்
மனோமயகோசம்
விஞ்ஞானமயகோசம்
ஆனந்தமயகோசம்
என்பவையே உயிர்களைச் சூழ்ந்து நிற்கும் அந்த ஐந்து வகையான உறைகள்.

அன்னமயகோசம் என்பது உணவால் உண்டான எமது உடம்பாகும்- ஜட உடல்.

பிராணமயகோசம் என்பது தசவாயுக்கள் என்று சொல்லப்படும் பத்துவிதமான வாயுக்களால் உண்டான தேகம்- ஆவி உடல்.

மோனோமய கோசம் என்றால் எமது எண்ணங்கள் சந்தேகங்கள் என்னும் மனத்தால் உருவான தேகம்-மனவுடல்.

விஞ்ஞானமயகோசம் என்பது எமது அறிவால் உருவான தேகம்- அறிவுடல்.

ஆனந்தமயகோசம் என்பது முக்தி நிலையில் ஆன்மா பேரின்பத்தை அனுபவிக்கும் வரையறை அற்ற உடல்.

இப்போது ஆன்மாவின் அளவை ஒவ்வொரு உடலில் நின்றும் காண்போம்.

இந்த உணவால் உண்டான ஜடஉடல் முழுவதும் ஆன்மாவை சார்ந்த அதன் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அதன் அத்தனை செயல்களும் உடல் முழுமைக்கும் தானே செயற்படுகிறது. அப்படியானால் இந்த ஆன்மா இந்த ஜட உடல் முழுவதும் வியாபித்து நிற்கிறது என்பது தானே பொருள். அப்படியானால் இந்த ஆன்மாவின் அளவு இந்த உடலில் அளவிற்கு இருக்கிறது என்று கொள்ளலாம்.

சரி அடுத்து பிராணமயகோசம். இது பத்து வாயுக்களால் உண்டான தேகம் என்று பார்த்தோம். எமது புலனுணர்வுகள் அனைத்தும் கடத்தப்படுவது இந்த தசவாயுக்களால்தான். உடலுக்குள் இந்த பிராணன் இருக்கும் வரையிலேயே நாம் பார்த்து கேட்டு நுகர்ந்து என்று புலன்களால் அனுபவிக்கும் அத்தனையையும் அனுபவிக்கின்றோம். இங்கே புலன்களால் அனுபவிக்கப்படும் அத்தனையும் பிராணமய உடலாலேயே நிகழ்கின்றன. எனவே புலன்களால் அனுபவிக்கப்படும் அத்தனை பரப்பிற்கும் இந்த ஆன்மாவின் வியாபகம் இருக்கிறது என்று கொள்ளலாம்.

அடுத்து மனோமயகோசம். மனம் என்பது எண்ணங்கள் மற்றும் சந்தேகங்கள் என்பவற்றால் உருவான ஒன்று. எமது எண்ணங்களின் தூரம் எவ்வளவு? அதன் எல்லைகள் எவ்வளவு? நாம் கண்டு கேட்டு உய்த்துணர்ந்த அத்தனை தூரங்களுக்கு மனம் பயணிக்கிறது அல்லவா. அப்படியானால், இந்த மனம் பயணிக்கும் அத்தனை பரப்பும் மனவுடல் மூலம் ஆன்மா வியாபித்து நிற்கிறது என்று கொள்ளலாம்.

 மனத்தில் எல்லைகளே மிகமிகக் பெரியது. அப்படியானால் அறிவின் எல்லையை சிந்தித்து பாருங்கள். அறிவு என்பது எல்லாவற்றையும் பற்றிய உறுதியான முடிவு. இந்த பிரபஞ்சம் அதனைக் கடந்த பகுதி என்று அறிவு மனதைவிட மிகவும் விசாலமானது. இங்கே அறிவு என்பது புலன் அறிதலல்ல, புலன்களை கடந்த அறிவு. அப்படியானால் இந்த ஆன்மாவின் வியாபகம் இந்த அறிவின் எல்லையைகளை தனதாகக் கொண்டது எனலாம்.

மற்றையது ஆனந்தமயகோசம். இது உடல் சார்ந்த, புலன் சார்ந்த இன்பமல்ல. இறைவனின் பதத்தை அடைந்து அனுபவிக்கும் பேரின்பம். உடலற்ற புலன்களற்ற இன்பத்துக்கு எல்லைகள் ஏது? இறைபதத்தில் கலந்து நின்று இன்பத்தை அனுபவிப்பதால் இறைவனின் எல்லையற்ற வியாபகத்தை இந்த ஆன்மாவின் வியாபகமாக கொள்ளலாம்.

எனவே இறைவனின் எல்லையற்ற பரப்பின் அளவில் இந்த ஆன்மாவின் அளவும் இருக்கிறது என்று கொள்ளலாம். அதனால்தான் ஆன்மாக்களை அணுவிலும் சிறிதாக நினைக்க வைப்பது ஆணவம் என்று ஆன்மீக ஞானம் பெற்றவர்கள் கூறுவர்.

இப்போது சிந்தித்து பாருங்கள். நீங்கள் என்பது எல்லையற்ற ஆன்மா. இந்த உலகம், அதிலுள்ள உயிர்கள், இந்த பிரபஞ்சம் என்று அனைத்தும் உங்களுக்குள் அடங்குகிறது அல்லவா? இந்த நிலையில் நீங்கள் ஒரு விஸ்வரூபியாக தோன்றுகிறீர்கள். 

நானே உலகமாகவும், உயிர்களாகவும், இந்த பிரபஞ்சமாகவும் இருக்கிறேன் என்பது இந்த ஆன்மா பற்றிய புரிதலில் கூறப்படும் வார்த்தைகள். அவ்வாறு நான் என்பது ஆன்மா என்பதையும், அந்த ஆன்மாவின் வியாபகத்தையும் ஒருவன் தன்னுணர்வு நிலையில் கூறினால், அவனையே கடவுளாக கருதி வழிபட ஆரம்பிப்பது அறியாமை.

ஆணவத்தின் பிடியில் ஆறடி உருவுக்குள் அடங்கிக் கிடக்கும் மனிதர்களை, அகிலமே அவனுக்குள் அடக்கம் என்று உணர வைப்பதே ஆன்மீக ஞானம்.

அப்படி உணர்ந்தவன் வெளிப்படுத்தியதை உணர்ந்து தானும் அந்த நிலையை அனுபவிக்காமல், வெளிப்படுத்தியவனை வணங்குவது என்பதே அஞ்ஞானம்.

இறைவனின் வியாபகமும், ஆன்மாவின் வியாபகமும் ஒன்றாக இருப்பதாலோ, இறைவனின் பேரின்ப நிலையை ஆன்மாவும் அனுபவிப்பபதாலோ இறைவனும் ஆன்மாவும் ஒன்றாக முடியாது. எல்லையற்ற அளவில் பேரின்பத்தை வழங்கும் நிலை இறைநிலை. அதைப் பெற்று அனுபவிக்கும் நிலையே ஆன்மாவின் நிலை என்று தெளிவுபடுத்தி நிற்பது சித்தாந்தம்.

இறைவன் பேரின்பமாக இருக்கின்றார். ஆன்மா முக்தி நிலையில் பேரின்பத்தை அனுபவிக்கிறது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -35



வாமம் எனப்படும் வாமாச்சாரம்

//பலியிட்டு நிலத்தில் இரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால்; கொலைகள்- தற்கொலைகளும், வன்புணர்வும் தலைவிரித்து ஆடும் என்றும், 

மடையும், படையலும் நிறுத்தப்பட்டால் பாலியல் ஒழுக்க கேடுகள், போதைப்பாவனை என்பவற்றுடன் வெறிப்பிடித்த அறிவற்ற சமூகம் ஒன்று உருவாகும் என்றும் வாமாச்சாரம் கூறுகிறது.//

சைவ சித்தாந்த வாதிகளின் பகுப்பில் அகப்புறச் சமயம் என்று வகைப்படுத்தப்படும் ஒரு சமய பிரிவாகும்.

சைவத்தின் ஆதிமார்க்க பிரிவுகளில் ஒன்றான இது பின்னாளில் சாக்தம் என்னும் சக்தி வழிபாட்டு பிரிவின் உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்துள்ளது. எல்லாவற்றையும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களாக கருதியதால் வாம சமயத்தில் சக்திவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

வாம என்றால் குள்ளமான, குறுகிய என்று பொருள். இந்த சமயம் வாழ்க்கைக்கு தேவையானதை பெறுவதற்கும், முக்தி அடைவதற்குமான குள்ளத்தனமான வழிகளை காட்டுவதால் வாம வழிமுறை என்று அதாவது வாமாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆச்சாரம் என்றால் ஒழுங்கு அல்லது வழிமுறை என்று பொருள். வாமாச்சாரம் என்றால் குள்ளத்தனமான வழிமுறை என்று பொருள். நாம் குறுக்குவழி, தந்திரமான வழிமுறை என்று கூறுவது போன்ற பொருளில் வரும். அதனால்தான் வாமாசாசர ஆகமங்களை; ஆகமங்கள் என்று கூறாமல், தந்திரங்கள் என்று கூறுவர்.

எமது வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் சக்திகளை அழிப்பதன் மூலமும் அவற்றின் தேவைகளை திருப்திப் படுத்துவதன் மூலமும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று வாமாச்சாரம் கூறுகிறது.

எமது ஆன்மாவை சூழ எமது உடல் உட்பட ஐந்து வகையான உடல்கள் உள்ளன என்று இந்து தத்துவங்கள் விளக்குகிறன. அதனை பஞ்ச கோசங்கள் என்று கூறுவர். வாழ்வை இடை நடுவில் முடித்துக் கொண்டவர்களது ஆன்மாக்கள் மரணத்தின் பின்னர் ஏனைய நான்கு வகையான உடல்களுடனும் அலையும் என்றும், அவை தாம் அனுபவிக்க விரும்பியவற்றை வேறுநபர்கள் மூலம் அனுபவிக்க முனையும் என்றும் கூறுகின்றனர்.

நல்லவர்கள் இறந்தால் மற்றவர்கள் மூலம் நல்லவற்றை செய்ய முயற்சிப்பார்கள். தீயவர்கள் இறந்தால் மற்றவர்கள் மூலம் தீயவற்றை செய்யவே முயற்சிப்பார்கள்.

நல்லவர்களுடைய ஆன்மாக்கள் தெய்வங்களாக காத்துநின்று தீயவர்களுடைய சக்திகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்பதும், அந்த தீய சக்திகள் கட்டுப்பாட்டை மீறி செல்லாத வகையில் அவற்றுக்கு தேவையானவற்றை ஒரு கால இடைவெளியில் கொடுப்பது என்பதும் வாமாச்சார வழிமுறையாகும்.

வேள்வி செய்து மடைவைத்தல், கள்ளு- சாராயம் என்பவற்றை படைத்தல் எல்லாம் தீய சக்திகளை திருப்திப் படுத்துவதற்கான வழிமுறையாக வாமாச்சாரம் பின்பற்றுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் தெய்வங்களாக நின்று காவல் செய்யும் நல்ல ஆத்மாக்களின் கட்டுப்பாட்டை மீறி அந்த தீய சக்திகள் மற்றவர்கள் மூலம் தமது விருப்பங்களை நிறைவேற்ற முனையும் என்பது வாமாச்சாரிகளது வாதம்.

இவ்வாறு பலியிடுதல், கள்ளு, சாராயம் படைத்தல் முதலியவற்றை நிறுத்தினால் தீய சக்திகள் கொலை, கொள்ளை, குடிவெறி எண்ணங்களை மக்களிடையே உண்டாக்கி சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்கும் என்றும், தீய செயல்கள் சமூகத்தில் தலைவிரித்து ஆடும் என்றும் வாமாச்சாரிகள் கூறுகின்றனர்.

பலியிட்டு நிலத்தில் இரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால்; கொலைகள்- தற்கொலைகளும், வன்புணர்வும் தலைவிரித்து ஆடும் என்றும், 

மடையும், படையலும் நிறுத்தப்பட்டால் பாலியல் ஒழுக்க கேடுகள், போதைப்பாவனை என்பவற்றுடன் வெறிப்பிடித்த அறிவற்ற சமூகம் ஒன்று உருவாகும் என்றும் வாமாச்சாரம் கூறுகிறது.

காத்தல் என்பதையே வாமாச்சாரம் முதன்மையான வழிமுறையாக கொள்கிறது. அதனால் சிவனை வாமதேவன் என்னும் வடிவில் காக்கும் கடவுளாகவே வணங்குகிறார்கள். காவல் தெய்வங்கள் என்பவை எல்லாம் சக்திகளை காப்பதற்காக சிவனிடம் இருந்து தோன்றியவை என்பதும் இந்த வாமாச்சாரத்தின் நம்பிக்கையாகும்.

கபாலிகம், பைரவம் போன்ற சைவ பிரிவுகள் இதேபோன்று பலியிடுதல் படையல் வைத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினாலும், அவையும் வாமாச்சார வழிமுறை என்று குறிப்பிடும் வகையில் வாமாச்சார வழிமுறைகள் மிகவும் பிரசித்தமானவை.

தீய சக்திகளை கட்டுப்படுத்தி, அவற்றின் பாதிப்பு இல்லாமல் நல்வாழ்வை வாழ்ந்தால் அனைவரும் முக்தியை அடையலாம் என்பது வாம சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

பின்னாளில் உருவான சைவத்தின் மந்திர மார்க்க பிரிவுகள் சைவ ஆச்சாரம் என்று புதிய ஆச்சாரம் ஒன்றை உருவாக்கியிருந்தாலும், தேவையின் பொருட்டு வாமாச்சார வழிமுறைகளையும் பின்பற்றியே வந்துள்ளது.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -34



Monday, June 19, 2023

மாவிரதம் எனும் காளாமுகம்

சைவ சித்தாந்த வாதிகளால் அகப்புறச் சமயம் என்று வகுக்கப்படும் சமயங்களில் மாவிரதமும் ஒன்று.

சைவத்தின் இருபெரும் பிரிவுகளில் ஒன்றான ஆதி மார்க்கத்தைச் சேர்ந்த ஒரு சமய பிரிவாகும். மற்றைய பெரும் பிரிவு மந்திரமார்க்கம் எனப்படும்.

இவர்கள் மாவிரதம் எனும் வாழ்வையே விரதமாக மேற்கொள்ளும் வழிமுறையை கொள்வதால் மாவிரதிகள் என்று அழைக்கப்பட்டார்கள் . பிறவித் தொடர்ச்சியை அறுத்து இறைவனை அடைவதற்கு வாழ்வையே கடினமான விரதமாக அனுட்டிக்கவேண்டும் என்பது மகாவிரதிகளது வாதம். உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்வது இறைவனை அடைவதற்கு அவசியம் என்றும், அதற்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையே தேவை என்பதும் மாவிரதிகளின் நம்பிக்கை.

தவம் போன்ற வாழ்க்கை முறையால் அறியாமை இருள் நீங்கி முகத்தில் ஞான ஒளியுடன் காணப்பட்டதால் காளாமுகர்கள் என்றும் இந்த மகாவிரதிகள் அழைக்கப்பட்டனர். 'காளா' என்றால் இருள் நீங்கிய , இருளற்ற, ஒளிபொருந்திய என்று பொருள்படும்.

காளமுகர், காளாமுகர் என்ற பெயர் குழப்பம் காரணமாக பிற்காலத்தில் மகாவிரதிகள் என்றே காளாமுகர்கள் அடையாளப்படுத்தப் படுகின்றனர். காளமுகர்கள் என்பவர்கள் முகத்தில் கருஞ்சாம்பலை, கருமையை பூசும் ஒரு குழுவினரைக் குறிப்பதாகும். 'காள' என்றால் கரிய என்றும், 'காளா' என்றால் இருளற்ற என்றும் பொருள் வேறுபாடு உடைய இரு வார்த்தைகளாகும்.

காளாமுகம் என்பது ஆதி மார்க்க சைவத்தின் முதற் பிரிவான பாசுபத சைவத்தில் இருந்து கிளைத்த ஒரு சமய பிரிவென்று கூறப்படுகிறது.

வேதாந்த வழிமுறைகளில் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்ட சமய பிரிவாக இது அறியப்படுகிறது. 

பாசுபதத்தை முறைப்படுத்திய லகுலீசரின் வழிமுறைகள் மாவிரதிகளிடம் செல்வாக்கு செலுத்தியதால் லாகுலர் என்றும், வாழ்விற்கு பிரமாணங்களை வகுத்து வாழ்ந்தவர்கள் என்பதால் பிரமாணியர் என்றும் காளாமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இறைவன் அவதாரங்களை எடுப்பார், கடவுளர் பலர் உள்ளனர் போன்ற நம்பிக்கைகள் காரணமாக சைவ சித்தாந்த வாதிகள் அகப்புறச் சமயம் என்று காளாமுகத்தைக் குறிப்பிடுகின்றனர்.

#சர்வம்_சிவமயம் 

#ஆன்மீகம்_அறிவோம் -33



கடவுள் ஏன் பிறப்பு எடுக்க முடியாது?

பிறப்பு எடுத்தால் அது ஏன் கடவுள் இல்லை என்கிறோம்? கடவுள் என்பது உண்மை என்றால், அது ஒருபோதும் மாறாதது. அதனால்தான் கடவுளை எப்போதும் மாறாதது என...